அன்புள்ள தோழனுக்கு...
நினைவிருக்கிறதா? நம் அறிமுகம்.
எனக்கில்லை.
ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல்
ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் நட்பு.
அலுவலகத்தின் முதல்நாள்.
எல்லோரையும்போல்தான்
அறிமுகமானாய் நீ...!
பணியில் தடுமாறிய என்னை
பக்குவமாய் திருத்தி்ய போதெல்லாம்
நீயொரு நல்ல சகஊழியனாய் மதிக்கப்பட்டாய்.
சரி. எப்போது நண்பனானாய்?
எனக்கு நினைவில்லை.
என் அண்ணனின் திருமணம்.
வந்திருந்த அத்தனை சகஊழியர்களும்
என் அன்னையை ஆன்ட்டி-யாக்கினர்.
நீ மட்டும் அம்மாவாக்கிய போது
நமக்குள் புரிதல் துவங்கியது.
எந்த நீரூற்றி வளர்த்தோமென்று தெரியவில்லை
நட்பு மட்டும் செழித்து வளர்ந்தது.
அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
இலக்கணம் முதல் இலக்கியம் வரை...
இணையம் முதல் இதயம் வரை...
இமயம் முதல் இ-மயம் வரை...
சங்ககாலம் முதல் சமச்சீர் கல்வி வரை...
செல்போன் முதல் ஸ்பெக்ட்ரம் வரை...
சமையல் முதல் கோலம் வரை...
வள்ளுவர் கோட்டம் முதல் தமிழ்த்தோட்டம் வரை...
எதைப்பற்றி நாம் பேசிக்கொள்ளவில்லை?
என்வீட்டிற்கு வரத்துவங்கினாய்.
முதல் வருகையின் மதிய உணவுக்குப் பின்னான
உன் புறப்படுதலுக்கு முன்,
என் அம்மாவைப் பார்த்து சொன்னாய்.
"நட்புக்காலத்தின் 15 -ம் கவிதை
உங்களுக்கானதென்று".
படித்துவிட்டு சிரித்த அம்மாவின் புன்னகையில்
இன்னும் விசாலமானது நம் நட்பு.
நட்புக்காலம்...
- அறிவுமதியின் புனைவு அல்ல
நம்மின் பதிவென்று
சிலாகித்துக் கொண்டோமே...
நினைவிருக்கிறதா?
வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களுக்காக
நீ இடம்பெயர்ந்தபோது
என் உதட்டுப் புன்னகை கூட உப்புக்கரித்தது.
அலைபேசியின் ஆதரவில்
நம் தூர எல்லைகள்
அட்சமாகவும், தீர்க்கமாகவும் குறுக்கப்பட்டன.
தொடர்ந்து என் குடும்பத்தோடும் தொடர்பிலிருந்தாய்.
மனத்தந்தியில் நம் எண்ணங்கள்
நித்தமும் பிரசவித்தன.
சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின்
வேர்வைபூக்கும் ஒரு கோடை சந்திப்பில்,
கடந்தகாலத்தின் பசுமையான பக்கங்களைப்
புரட்டிக்கொண்டே - என்வீட்டில்
நாம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
பேச்சினூடே...
நான் உன்னிடமிருந்து சற்றும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாய்.
திகைப்பாய் உணர்ந்தேன் நான்.
இலேசான மனதோடு புன்னகைத்துப் புறப்பட்டாய் நீ.
உதைவண்டியில் ஒன்றாய் பயணித்தபோதும்,
அலைநீரடித்து கடற்கரையில் விளையாடியபோதும்
நாம் உணர்ந்ததில்லையே...
நட்பு தவிர்த்த உணர்வுகள்!
நம் தூரஇடைவெளிகளிலும், கால எல்லைகளிலும் உணர்ந்தாயா?
உலாபேசியின் உரையாடல்களில் உணர்ந்தாயா?
உறவின் வெற்றிடங்களை நிரப்ப
அன்பாகவும், ஆறுதலாகவும்
ஒரு நட்பு போதுமென்று நீயேன் உணரவில்லை??
நட்பைத் தவிர்த்து வேறொன்றும்
உணர்ந்ததில்லை உன்னிடம் நான்.
என்றென்றும் உன் நட்பு போதுமெனக்கு...
என்றாலும்,
இருவேறு உணர்வுக்குவியலாய் நாம்.
நட்பின் பாதையில் இனி நமக்கு -
முட்கள் மட்டுமே அதிகதிகமாய்த் தென்படும்.
மிக அழ்ந்த யோசனைக்குப் பின்னும்,
உன்னில் உணர்ந்த சுதந்திரத்தை
இனி யாரில் பெறுவோம் என்ற கவலையையும் மீறி -
நட்புக்காலத்தின் 15 -ம் கவிதையை
மெய்யாக்கவே முனைகிறேன் நான்.
நம் நட்பின்
கடைசிப் பகிர்தலாய் இருக்கட்டும் இந்தக்கடிதம்.
ஏனென்றால்...
நட்புசொல்லி நெருங்கிப் பழகி
ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலும்...
காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...!
என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
@
#
$
%
&...