Showing posts with label ஜூனியர் விகடன். Show all posts
Showing posts with label ஜூனியர் விகடன். Show all posts

Monday, 25 June 2012

ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது...




நன்றி: திரு.தமிழருவி மணியன் - ஜூ வி - 27 06 12

 

                                          'இந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்! அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். 

அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டு’ என்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர். 

ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்’ என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.

ராஜன் பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை. தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க  விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.

தத்துவமேதை ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி -யானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசு’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி.

ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.

 ஸ்டாம்புகளில்... "ரப்பர் ஸ்டாம்பு"களை உருவாக்கியவர்கள்


இந்திராகாந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார். நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால்ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்கமுடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியாகாந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே  ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)

காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார். சூத்திரத்தமிழர் காமராஜரும், சூத்திரக் கன்னடர் நிஜலிங்கப்பாவும் நிறுத்திய வேட்பாளர் ஆந்திர சூத்திரர் சஞ்சீவ ரெட்டி. அவரைத் தோற்கடிக்க, ஆரிய பிராமணப் பிரதமர் இந்திரா காந்தியின் பிராமணப் பிரதிநிதி வி.வி.கிரியை ஆதரித்த 'திராவிட சூத்திரத் தலைவர்’ கருணாநிதியின் 138 சட்டப் பேரவைஉறுப்பினர்களும், 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அளித்த ஆதரவுவாக்குகள்தான் இந்திய அரசியலின் ஆரோக்கியத்தை அழிப்பதற்குக் காரணமானது. அன்று காமராஜ் என்ற சூத்திரத் தமிழனின் அகில இந்திய செல்வாக்கை அழித்தொழிக்க பிராமணர் வி.வி.கிரியை வெற்றி பெறச் செய்த திராவிட சூத்திரர்’ கருணாநிதி, இன்று அரிய மானுடப் பண்புகள் நிறைந்த நேரிய தமிழர் அப்துல் கலாமை மறுதலித்து, வங்கத்துப் பிராமணர் பிரணாப்குமார் முகர்ஜியை வரவேற்கிறார்.அவரை ஜனாதிபதியாக்க, சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் பக்கம் நின்று படை திரட்டுகிறார். கருணாநிதியின் திராவிடத் திருவிளையாடல் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் காண்பதற் காணீரோ’ என்று பாட வேண்டியதுதான் பாக்கி. 

இந்திராகாந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது’ என்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றிய’ பிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’!

 
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்சவேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார். இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி. 

இந்திராகாந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ்காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்’ என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்’ என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல! 

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசி’ முகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?

காலம்தான் விடை சொல்ல வேண்டும்!



Monday, 21 May 2012

அன்பிற்கினிய தமிழக முதல்வர் அவர்களுக்கு...


பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!
நன்றி: திரு. தமிழருவிமணியன், ஜூனியர் விகடன் - 23 05 12

அன்பிற்கினிய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு...

வணக்கம். வளர்க நலம். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, நீங்கள் முதல்வர் மகுடம் தரித்து அரியாசனத்தில் அமர்ந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது. கன வுகளைக் கண்ணில் சுமந்து, நம்பிக்கைகளை நெஞ்சில் நிறைத்து வாக்குச்சாவடிகளைத் தேடி வந்து, கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களைக் கோட்டையில் கொண்டுபோய் அதிகார நாற்காலியில் அமரச் செய்தது. உங்கள் தலைமையில் தமிழகத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதைவிட, களப்பிரர்களைக் காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவித்தாக வேண்டும் என்பதே வாக்காளர்களின் வேட்கையாக இருந்தது. இந்தக் கணிப்பு உங்கள் உள்ளத்துக்கு உவப்பைத் தராமல் போனாலும் இதுதான் மறுக்கமுடியாத உண்மை. தமிழகத்தின் தேர்தல் வரலாற்றிலேயே உச்சபட்சமாக 77.8 சதவிகிதம் வாக்குகள் பதிவானதே கோட்டையில் இருந்து கலைஞரைக் கோபாலபுரத்துக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் புதிய வாக்காளர்கள் புறப்பட்டதனால்தான் என்பதைப் புரிந்து செயற்படுவது நல்லது.
 
 நீங்கள் மனம் குளிர வேண்டும் என்பதற்காக, ஓர் ஆண்டில் நூறாண்டுச் சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி ​விட்டதாக உங்கள் கட்சியில் உள்ளவர்கள்புகழ்ந்து பேசுவது இயற்கை. சொந்தக் கால்களில் நடக்கும் வலிமை இல்லாமல் உங்கள் தோள்களில் அமர்ந்து சட்டமன்றப் பிரவேசம் செய்திருக்கும் கூட்டணித் தலைவர்கள், 'புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடுகின்றன’ என்று, புகழாரம் சூட்டுவது தங்கள் சொந்த நலனுக்காக என்பதை அறியாத அளவுக்கு அரசியலில் நீங்கள் அரிச்சுவடி வாசிப்பவர் அன்று. இனிமையாகப் பேசுவதில் உண்மை இருப்பதில்லை. உண்மையைப் பேசுவதில் இனிமை இருப்பதில்லை’ என்ற பொன்மொழி நம் முன்னோர் வாழ்க்கை அனுபவத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. ஓர் ஆண்டு ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்துமே வாக்காளர்களின் வரவேற்புக்கு உரியன அல்ல என்பதை உளவுத்துறையின் மூலம் நீங்கள் உணர முடியும். புகழுரைகள் போதையைத் தரும். நேர்மையான விமர்சனங்களே உண்மையை நிறம் மாறாமல் இனம் காட்டும். உங்கள் ஓர் ஆண்டு சாதனை விழாவின் விளம்பர வெளிச்சமும், மின்னலங்கார ஜாலங்​களும், அரசுப் பண விரயமும், வீதியெங்கும் விண்ணைத் தொட்ட ஜெய கோஷங்களும் மனோபாவத்தில் நீங்கள் சிறிதும் மாறவே இல்லை என்று நிரூபித்துவிட்டன. இரவும் பகலும் இணைந்ததுதான் காலம். இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சாதனையும் வேதனையும் நிறைந்ததுதான் உங்கள் ஓர் ஆண்டு ஆட்சியில் அரங்கேறிய நிகழ்வுகள். மக்கள் ஆனந்தக் கூத்​தாடும் அளவுக்கு எந்த அதிசயமும் மலர்ந்து விடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 
ஓராண்டு நிறைவின் கொண்டாட்டம் (தலைமைச் செயலகம், மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்!!)






மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா(?) அரிசி, ஏழைப் பெண்களுக்குத் திருமாங்கல்யத்துடன் 25 ஆயிரம் ரூபாய் உதவி, எளிய மக்களின் பொருளாதாரம் உயர இலவசக் கறவை மாடுகள், ஆடுகள், மாணவர்களுக்கு மடிக்கணினிகள், இலவச மிக்ஸி - கிரைண்டர் - மின் விசிறி, வளர் இளம் பெண்களுக்கு நாப்கின், முதியோர் உதவித்தொகை உயர்வு போன்றவை சாதனைகள் அல்ல. வாக்கு வங்கியை வளர்த்து எடுப்பதற்கான சாதாரண வழிமுறைகள். இவற்றை நடைமுறைப்படுத்த ஈரமனம் மட்டும் ஆட்சியாளருக்கு இருந்தால் போதும். இதற்கு எந்த அறிவுக் கூர்மையும் ஆட்சித் திறனும் அவசியம் இல்லை.

நில அபகரிப்பு சிறப்புக் காவல் பிரிவு உருவாக்கமும், அதன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த உங்கள் சிந்தனையும் பாராட்டுக்கு உரியவை. 2011-12 வரவு செலவுத் திட்ட மதிப்பீடு உங்கள் ஆட்சியில் முதல் முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியதற்கு நியாயமாக நீங்கள் பெருமைப்படலாம். பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதம் எட்டும் வகையில் 15 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 'தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் - 2023’ வெற்றிகரமாகச் செயல் வடிவம் பெறுமானால், அது உங்கள் சரித்திரச் சாதனையாக இருக்கும் என்பதில் இரு கருத்து இல்லை. எங்கே தொலை நோக்கு இல்லையோ, அங்கே மக்கள் அழிவர். (Where there is no vision, the people perish) என்பது அறிவார்ந்தோர் கூற்று.



முதல்வர் அவர்களே... ஆரோக்கியமான அரசியலமைப்​புக்கு ஊழலற்றஆட்சியே அடித்தளம். இன்றுள்ள இளைய சமூகம் எதிர்பார்ப்பது ஊழலற்ற உயரிய நிர்வாகமே அன்றி, வெறும் இலவசத் திட்டங்கள் இல்லை. கடந்த ஓர் ஆண்டில் உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஊழல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட்டது இல்லை என்று இதயசுத்தியுடன் சொல்லக் கூடுமா? உங்கள் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வந்தால், தக்க நடவடிக்கை எடுப்பீர்களா? ஊழலில் புழுத்துப்போனவர்களை நேர்மையாளர்களாக மாற்றிவிடக் கூடுமா? நிர்வாகத் திறனுமற்று, நெறி சார்ந்த வாழ்க்கை ஒழுக்கமுமின்றி உங்கள் கருணைப் பார்வையால் கதிமோட்சம் பெற்ற தளபதிகளை வைத்துக்கொண்டு தமிழகத்தை உயர்த்திவிட முடியுமா? இரண்டு முறை நீங்கள் முதல்வராக இருந்தபோது, உங்கள் உடன்பிறவாத சகோதரி சசிகலாவும், அவருடைய ரத்த உறவுகளும் சட்டத்துக்குப் புறம்பான அதிகார அமைப்புகளாகச் செயற்பட்டதை மக்கள் மறந்து விடவில்லை. இந்த முறை நீங்கள் முதல்வரான பின்பும், அவர்களுடைய 'திருவிளையாடல்கள்’ தொடரத்தான் செய்தன. உங்களையே பாதிக்கும் அளவு அவர்களுடைய ஆட்டங்கள் எல்லை மீறிய நிலையில் நீங்கள் விழித்துக்கொண்டீர்கள். போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலாவின் வெளியேற்றமும், நடராஜன் - திவாகரன் - ராவணன் பரிவாரங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கைகளும் உங்களுக்கு மக்களிடம் பெருமதிப்பைப் பெற்றுத் தந்தன. ஆனால், சசிகலாவின் மறுபிரவேசமும், அவரது உறவுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நீர்த்துப்​போனதும் நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிட்டன. தன்னந்தனியாக இருக்கும் உங்களுக்கு போயஸ் தோட்டத்தில் சசிகலா உதவியாக இருப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அரசு நிர்வாகத்தில் சசிகலா குடும்பம் நிச்சயம் தலையிடப் பார்க்கும். ஆடிய கால்களும் பாடிய வாயும் எளிதில் மௌனிப்பது இல்லை.

ஜான்பாண்டியன் விவகாரத்தை ஒரு சாதாரண சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகக் கையாளத் தவறி பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, உங்கள் நிர்வாகத் திறமையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. பூவைப் பறிக்க யாராவது கோடரியைப் பயன்படுத்துவார்களா? சமச்சீர்க் கல்வியில் நீங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று பிடிவாதம் காட்டியதும், பள்ளிப் பிள்ளைகளின் படிப்பு மாதக்கணக்கில் பாழ்படுவதற்குக் காரணமாக நின்றதும் உங்கள் நிர்வாகத்தில் நேர்ந்து விட்ட நீங்காத கறைகள். மக்கள் நலப் பணியாளர்கள் வாழ்வோடு நீங்கள் விளையாடுவது உங்கள் தாய்மை உள்ளத்துக்குத் தகுந்ததாக இல்லை. போக்குவரத்துத் துறையில் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நீங்கள் அறிவித்து இருக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அனுதாபிகள் என்று நாளை ஒரு மாற்று அரசு மலர்ந்து இவர்களை வீட்டுக்கு அனுப்பினால், அது விவேகமான செயல் என்று நீங்கள் ஆதரிப்​பீர்களா?

 
முகலாயப் பேரரசர் ஷாஜஹானைப் போன்று மக்கள் பணத்தில் 1,000 கோடி ரூபாயை விரயமாக்கி ஒரு புதிய சட்டமன்றக் கட்டடத்தைக் கலைஞர் கட்டியதை மக்கள் அங்கீகரிக்க​வில்லை. அதை உயர்சிகிச்சை மருத்துவமனையாக நீங்கள் மாற்ற முடிவெடுத்ததும் பாராட்டுக்கு உரியது. ஏழை மக்களின் பிரதிநிதிகள் ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய வசதிகளோடு அமர்ந்து சட்டம் செய்வது எவ்வளவு அருவருப்பானது! ஆனால், அண்ணா நூலகத்தில் நீங்கள் கைவைத்தபோது, அதை எந்த அறிவுஜீவியாலும் ஜீரணிக்க முடியவில்லை. உங்களை ஓர் அறிவுஜீவியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். நீங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதாமல், நூலகம் அங்கே தொடர்ந்து செயற்பட நீங்கள் வழிவிட வேண்டும்.

கலைஞருடைய ஆட்சியில் நிதி மேலாண்​மை திறம்பட நிர்வகிக்கப்பட வில்லை என்பது உண்மை. சீரழிந்துகிடந்த பல துறைகளைச்சரிப்படுத்த சில கசப்பான முடிவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததும் உண்மை. கால நடையில் கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம், பேருந்து, பால் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தாமல், வாக்களித்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைதடுமாறும் வகையில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் கசந்துபோன மக்கள், 'ஏன் இவருக்கு வாக்களித்தோம்?’ என்று நொந்து புலம்புவதை நீங்கள் அறிவீர்களா? கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மறைமுகமாகப் 'பிரிமியம்’ என்ற பெயரில் எத்தனை கோடி எங்கு போகிறது என்று நீங்கள் கேட்டது சரி. உங்கள் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 750 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறீர்கள். இதில் முறைகேடுகள் நடப்பதற்கு நீங்கள் இடம் தரவில்லை என்பது மனம்விட்டு வாழ்த்த வேண்டிய அம்சம். ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்படும் 3,750 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் 100 கோடி ரூபாயில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கவும் ஏன் பயன்படுத்தக் கூடாது? எல்லா மாவட்டங்களிலும் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நோயுற்றவர்க்கு எளி​தாகக் கிடைக்கச் செய்வதுதானே ஒரு நல்லரசின் நல்லடையாளமாக இருக்க முடியும்.

அன்பிற்கினிய முதல்வரே..!
உங்கள் ஓர் ஆண்டு ஆட்சியில் திருச்சி, சங்கரன் கோவில் இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றும், மக்கள் அந்த வெற்றியை மகிழ்வுடன் வரவேற்கவில்லை. முள்ளை முள்ளால் எடுக்கலாம். வைரத்தால் வைரத்தை அறுக்கலாம். ஆனால், திருமங்கலம் பாணியிலேயே தேர்தல் நடக்க​லாமா? ஓர் இடைத்தேர்தலில் பணியாற்ற ஒட்டுமொத்த அமைச்சர்களும் கோட்டையைக் காலி செய்துவிட்டு, பணப்பெட்டியுடன் வாக்காளர்களை முற்றுகை​யிடுவது முறையான தேர்தலுக்கு வழி வகுக்கும் செயலா? கலைஞர் உடைத்தால் பொன் குடம், நீங்கள் உடைத்தால் மண் குடமா? ஆட்சி அதிகாரத்தையும், ஊழல் பணத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களை வளைத்துப் போடும் வகையிலான கலைஞர்  பாதையில் தடம் மாறாமல் சுவடு பதிக்கவா நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்? புதுக்கோட்டை இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் சூழலில் பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் அந்தத் தொகுதிக்கு ஒதுக்கியது நேர்மையான நடவடிக்கையா?



மாண்புமிகு முதல்வரே, உங்களிடம் முக்கிய​மான ஒரு வேண்டுகோள். சட்டப் பேரவையை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தேவால​யமாகவும், நல்ல சட்டங்களுக்கு வடிவம் தரும் நியாயஸ்தலமாகவும், ஜனநாயக மரபுகள் கொலு​விருக்கும் மாண்புமிகு மண்டபமாகவும் இருப்பதற்கு அன்புகூர்ந்து அனுமதியுங்கள். ஜெயா தொலைக்காட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் அவமானத்துக்கு ஆட்படுகிறேன். மாநில அமைச்சர்களும், ஆளும் தரப்பு உறுப்பினர்களும், குழைந்து பேசும் கூட்டணித் தலைவர்களும் கொஞ்சமும் கூச்சமின்றி எல்லை மீறி உங்களைப் புகழ்ந்து பேசுவதும், இடையிடையே எம்.ஜி.ஆர். படப் பாடல்களைச் சுருதி பேதத்துடன் பாடிப் பரவசம் அடைவதும், கலைஞரையும் விஜயகாந்தையும் மறைமுகமாகக் கேலி செய்வதும், 'அம்மா, அம்மா’ என்று சந்நதம் வந்ததுபோல் வார்த்தைக்கு வார்த்தை பொய்யாய் உருகிப் போலியாய் நடிப்பதும், விடலைப் பிள்ளைகள் போல் அடிக்கடி ஓயாமல் மேஜையைத் தட்டுவதும் உங்கள் பெருமையை ஒரு போதும் உயர்த்தாது. எந்தப் புகழுரையும் முகஸ்துதியும் உண்மை இலை. சொந்த ஆதாயத்துக்காக இவர்கள் போட்டி போட்டு விஸ்தாரமாக நடத்தும் ஆலாபனையில் நீங்கள் மகிழ்வதைப் பார்க்க முடிகிறது. கலைஞரிடம் இருந்து நீங்கள் கற்ற பாடம்தான் என்ன? இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. எங்களுக்குத் தேவை காமராஜரைப் போல் எளிமை சார்ந்த, தன்னலமற்ற ஒரு முதல்வர். ஆடம்பர ஆரவாரங்களுக்கு இடம் தராத ஆட்சிமுறை, போலிப் புகழுரையும், வசை மொழியும் இல்லாத சட்டப் பேரவை. எதிர்க் கட்சிகளைக் கண்ணியத்துடன் நடத்தும் மனோபாவம். நேர்மையான தேர்தலுக்கான சூழல். ஊழலின் நிழல் படாத உயரிய நிர்வாகம். விமர்சனங்கள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்கும் பெருந்தன்மை. இவைதான் நல்ல அரசியலை நாடும் மக்களின் பிரார்த்தனை. இனியாவது எங்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து உங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்வீர்களா?


கலைஞர் ஆட்சியில் கசப்பான உண்மைகளைக் கடை விரித்ததால், எனக்கு ஏற்பட்ட வலிகளும் இழப்புகளும் அதிகம். உங்கள் ஆட்சியிலும் அதே அனுபவங்கள்தான் நேருமெனில், அதற்காக என் பேனாவை நான் மூடிவிட மாட்டேன். உள்ளதைச் சொல்வதும், உண்மையைச் சொல்வதும்தான் எப்போதும் என் பேனாவின் உன்னதம்!