Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Tuesday, 19 June 2012

பார்த்தேன்...ரசித்தேன்...


மர இலைகளுக்கிடையே வழிதேடிய
ஒளிக் கீற்றுகளை ரசித்தேன்.

புல்லின் நுனியில் ஊஞ்சலாடும்
பனித்துளியை ரசித்தேன்.

விருந்தினர்போல் வந்துசெல்லும்
வானவில்லை ரசித்தேன்.

வான்வெளியில் விதைக்கப்பட்ட
முத்துக்களை ரசித்தேன்.

ஓசையில்லாமல் தேகம் தழுவும்
தென்றலை ரசித்தேன்.

வண்ணங்களைச் சுமந்துவரும்
வண்ணத்துப் பூச்சியை ரசித்தேன்.

மழலைகள் பேசும்
புரியாத மொழியையும் ரசித்தேன்.

இரவில் கண்ணாமூச்சியாடும்
மின்மினிகளை ரசித்தேன்.

எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!














நன்றிகள்: 
1. பட்டாம்பூச்சி படத்திற்காக... முத்துச்சரம் ராமலக்ஷ்மிக்கு.
2. மற்ற அனைத்திற்கும்...  கூகுள் ஆண்டவருக்கு.

Wednesday, 6 June 2012

எனக்கு மட்டும் நான்!



சிவப்புமல்ல...வெளிருமல்ல...
பச்சைத் தமிழனின் கருப்பு நிறம்.

கலையாமல் வகிடெடுத்து
உருக்குலையாமல் படிந்த கேசம்.

முட்டையையும், சட்டத்தின்
ஓட்டையையும் நினைவுபடுத்தாத
ஆழமான விழிகள்.

நீளமுமல்ல...அகலமுமல்ல...
நேர்த்தியான நாசி.

காதோரம் வரை கிழியாமல்
அளந்தெடுத்த அதரங்கள்.

ஆணென்ற அடையாளத்திற்கு
அழகாய் அரும்பு மீசை.

பிரிவென்பதே இல்லாமல்
பிணைந்து இருக்கும் வளைபுருவங்கள்.

 என -

அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!

ஊசிக்குறிப்பு:  
பள்ளிப்பருவத்தின் விளிம்புகளில், என் தாழ்வுமனப்பான்மையில்  எழுதப்பட்டது இது.
பின்னாட்களில், நல்ல நண்பர்களாலும், புத்தகங்களாலும் அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இப்போது இந்த புகைப்படத்திலிருக்கும் கருத்துதான் எனதும்.

Wednesday, 16 May 2012

கோபமே நீயாகிடும் வேளை...



தீயாகவோ, புயலாகவோ...
திருக்கைமீன் வாலாகவோ...
பூவாகவோ, புன்னகையாகவோ...
புத்தம்புது விஷமாகவோ...
உன் கோபம் 
எப்படி வருமென்று எனக்குத் தெரியாது!!

எப்போது வரும்?
எதற்கு வரும்?
எவ்வளவு வரும்?
உனக்கும் தெரியாது!!

கோபமே நீயாகிடும் சில வேளைகளில்...
வெண்ணைக்கட்டியாக அனலில் விழுந்து
உருகித் தொலைகிறேன் நான்.




Thursday, 26 May 2011

அழகின் கலைவிழா


வாசல் முற்றத்தில் வசந்தத்தை வரவேற்கும்
வேப்பம்பூக்களின் மென்மழை.
வீட்டுமாடியில் ஏறிநின்றாலும் தலைகுனிந்து
கேலிபேசும் தென்னங்கீற்றுகள்.

வெள்ளை உள்ளமாய் வெடித்துச் சிரிக்கும் பருத்திச்செடி.
மண்ணின் மேனிக்கு வலிஎடுக்காமல் முளைகீறும் விதைகள்.
மின்னல் மழைக்கால ஈரநிலத்துக் காளான்.
அந்தி சாயும் நேரத்துச் சின்ன சாரல்.

ஆகாச விளிம்பில் சிவப்பு வடிசலோடு தலையெடுக்கும் கதிரவன்.
தூங்குமூஞ்சி மரங்களில் சூரியன் விழித்திருக்கும் இளம்பகல்.
காதல் வரிகள் கிறுக்கி வைத்த கள்ளிச்செடியின் பச்சைத் தாள்கள்.   
மயக்கும் மலர்ச்சுமையுடன் கற்றாழைத் தண்டுகள்.

கூடடையும் குருவிகளின் சரிகமபதநி.
கொதிக்கும் உலையரிசியின் தாளகதி. 
என்னைக் கடக்கிற நரை மேகங்கள்.
கெட்டிக்கரை போட்ட தறிச்சேலை போல்,
நீண்டுகிடக்கும் தார்ச்சாலை.

புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்.
கற்றைக் காலடிகள் தழுவியதால்,
ஒற்றைப்பாதையான பச்சை மெய்யெழுத்துகள்.
பள்ளங்களில் புரண்டெழுந்து பந்தாடிய பனங்கொட்டைகள்.
தொலைதூரப் பயணமெங்கும் சிதறிக் கிடக்கும் கவிதைகள்.

வெள்ளரிப் பிஞ்சுகளைக் கடித்தபடி,
ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்கள்.
கணுக்கால் கொலுசு கீதமிட, கண்ணாடிவளை பேச, 
சிற்றோடையில் மஞ்சள் குளித்து, 
ஈரச்சேலையுடன்தெம்மாங்கு நடைநடந்து 
தெருக்களைக் கவிதைக்களமாக்கும் கன்னிப்பெண்கள்.

கண்டவுடன் கன்னம் தடவி -
திருஷ்டி கழிக்கும் தண்டட்டிப் பாட்டிகள்.
ஒரு அழகின் கலைவிழாவாய் எங்கள் கிராமம்.

வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,
பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...
நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை. 

வாழும்கலை மறந்து புலம்பெயர்ந்ததற்கான 
வலுவான காரணம் -
இப்போதும் இல்லை என்னிடம்.

Saturday, 26 March 2011

நொடிகளும் நிமிடங்களும்



பறவையின் இறகில்
பாலொளியை நனைத்து
மேனியெங்கும் தொட்டுத்தடவிய
சலனத்தை உணரும்
பருவத்தின் பெளர்ணமிகளில்...
தூக்கத்தைத் தொலைத்து
திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்.

உண்மை உறைத்து,
புன்னகையோடு நிலவை நோக்குகையில்
அங்கே -
பூக்களின் முகவரியோடு
சில முகங்களைக் கண்டிருக்கிறேன்.
ஒருமுறையல்ல... இருமுறையல்ல...
ஒவ்வொருமுறையும்
முழுநிலா நாளில் -
இது தொடர்ந்துகொண்டு தானிருந்தது.

கடிவாளமிடமுடியாக் காலக்குதிரையின்
குளம்படிச்சத்தம்
இப்போதும் காதில் இரைச்சலாய்...

வாரங்களும், வருடங்களுமாய்க் கரைந்த
வாழ்க்கையின் பயணத்தில்
என்னுடன் நீ வந்தபின்னரும்-
சில பின்னிரவுகளில்
பறவையிறகின் சீண்டலை உணர்ந்திருக்கிறேன்.

அப்போதும் தூக்கம் தொலைத்து
என்தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது,
இம்முறை உன்முகத்தை பௌர்ணமியில் தேடி...!

நிலவே பொறுமையிழந்த
ஒரு பின்னொருநாள் பின்னிரவில்
என் காதோரம் வந்து
கிசுகிசுத்துவிட்டுப் போனது அது.
என்னில் அவள்முகம் தேடாதே.
நான் முகம் பார்ப்பதே அவளில்தானென்று.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த
உன் நுதலில் ஒளிர்ந்தது மூன்றாம்பிறை.

இரைச்சல் இன்னிசையானது
அப்போதிருந்துதான்...!
இனி வாழ்க்கைப்பயணம்
நொடிகளும், நிமிடங்களுமாய்க் கரையும்.