Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Thursday, 19 July 2012
Thursday, 12 July 2012
வார்த்தையை கண்டுபிடியுங்களேன்!!!
இது ஒரு மூன்றெழுத்து வார்த்தை.
கண்டுபிடியுங்களேன் !!!
கண்டுபிடியுங்களேன் !!!
இதன் -
ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது!
(க_தை)
முதலும், இடையும் முழுச் சொல்லின் சுருக்கம்!
(கவி_)
இடையும், கடையும் விவசாயிக்குத் தேவை!
(_விதை)
முதலெழுத்து முதல் தமிழெண்!
(க_ _)
கடையானது உழவரின் விழாக்காலம்!
(_ _ தை)
அதுதான்...
(க-வி-தை-)
!!!
குறிப்பு:
விடையை சரிபார்க்க இரண்டு வரிகளுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை 'செலக்ட்' செய்யவும்...
உபரிக்குறிபபு:
இது எனது பள்ளியிறுதியாண்டில் உருப்பெற்றது.
Wednesday, 6 June 2012
எனக்கு மட்டும் நான்!
சிவப்புமல்ல...வெளிருமல்ல...
பச்சைத் தமிழனின் கருப்பு நிறம்.
கலையாமல் வகிடெடுத்து
உருக்குலையாமல் படிந்த கேசம்.
முட்டையையும், சட்டத்தின்
ஓட்டையையும் நினைவுபடுத்தாத
ஆழமான விழிகள்.
நீளமுமல்ல...அகலமுமல்ல...
நேர்த்தியான நாசி.
காதோரம் வரை கிழியாமல்
அளந்தெடுத்த அதரங்கள்.
ஆணென்ற அடையாளத்திற்கு
அழகாய் அரும்பு மீசை.
பிரிவென்பதே இல்லாமல்
பிணைந்து இருக்கும் வளைபுருவங்கள்.
என -
என -
அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!
ஊசிக்குறிப்பு:
பள்ளிப்பருவத்தின் விளிம்புகளில், என் தாழ்வுமனப்பான்மையில் எழுதப்பட்டது இது.
பின்னாட்களில், நல்ல நண்பர்களாலும், புத்தகங்களாலும் அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இப்போது இந்த புகைப்படத்திலிருக்கும் கருத்துதான் எனதும்.
Wednesday, 23 May 2012
Wednesday, 16 May 2012
Monday, 4 July 2011
லெட்டர் குடுக்கப் போறேன்....
அதிகாலை(!) 8 மணி. சட்டைப்பையில் இருந்த கடிதம் காற்றில் படபடக்க, கடிதத்தை நினைத்து இதயமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா படபடக்க... அவள் வீட்டை நோக்கி புறப்பட்டேன்.
"தொந்திக் கணேசா! இன்னிக்கு மட்டும் இந்த லெட்டரை அவங்கப்பனுக்குத் தெரியாம அவகிட்ட குடித்துட்டேன்னா, இந்த மாசம் முழுக்க உன் கோயில் பூசைக்கு நான்தான் மணியடிப்பேன்." வேண்டிக்கொண்டே கல்பனாவின் வீட்டு வேலிக்கதவைத் திறந்தேன் நான்.
தயங்கியபடியே சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு மெல்ல முன்னேறி அவள் வீட்டு வாசல்படியில் கால்வைத்தேன்.
"கல்பனா, கல்பனா..." என்று எனக்கே கேட்கா குரலில் நடுங்கியபடியே கூப்பிட்ட சத்தத்திற்கு, உள்ளிருந்து வந்தவள்.. கலைந்த கேசமும், கசங்கிய ஆடையுமாய் நான் நின்ற கோலம் கண்டு மிரண்டிருக்கக் கூடும்.
"என்ன?" சற்று அதட்டலாகத்தான் கேட்டாள்.
:இல்ல... இந்த லெட்டரைக் குடுக்கத்தான் வந்தேன்..:" என்றபடியே எடுத்து நீட்டினேன். கை நடுக்கத்தில் கடிதம் இன்னும் படபடத்தது.
"இதே வேலையாப் போச்சு. கொண்டா" கையை நீட்டினாள் கல்பனா.
நீட்டிய கை நீட்டியபடியே நிற்க, அவள் பார்வை மட்டும் என் தலைக்கு மேலே சென்றது. எனக்குப் பின்னால் ஆஜானுபாகுவாக ஒரு உருவம் எழுவதை உணரமுடிந்தது.
"ம்ம்..என்கிட்டே கொடு அதை." என்றபடியே எதிரில் வந்தார் கல்பனாவின் அப்பா. என் அனுமதியின்றியே கடிதம் அவர் கைக்குப் போனது.
"கணேசா! கவுத்திட்டியே.. யார்கிட்ட லெட்டர் போக்கூடாதுன்னு நெனைச்சேனோ, அவர்கிட்டேயே மாட்டிக்கிச்சே... இந்த மாசம் பூரா நான் உன்னை பாக்க மாட்டேன்"
"என்ன லெட்டர்?" நினைவுகளை அறுத்தபடி வந்தது குரல்.
:வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது"
"வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது"
"இருதயம் ஒருகணம் நின்றது" - இந்த உணர்வுகளை எல்லாம் நான் ஒருசேர உணர்ந்த தருணம் அது.
அவரோ, கடிதத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.உடல் நடுங்க ஆரம்பித்தேன். படித்து முடித்தவர், நேராக வந்து வலது கையை என் கழுத்தில் வைத்தார். மறுகையால், பக்கத்தில் இருந்த மேசையைத் திறந்து அந்த தெர்மா மீட்டரை எடுத்தார்.
இரண்டு உதறு உதறி என் வாயில் திணித்தார். சரியாக ஒரு நிமிடம் கழித்து அதை எடுத்துப் பார்த்தவர், என் கடிதத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார்.
"ராஸ்கல், பொய்யா சொல்ற? காய்ச்சல்னு லீவ் லெட்டர் கொண்டுகிட்டு வந்துட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ பள்ளிக்கூடத்துக்குப் போ" என்றார் வீடே அதிரும்படி.
நான் அரண்டுபோனேன். எது நடக்கக் கூடாதென்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. கடைசிப் படியில் இறங்கும்போது வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். பரிவும், பரிதாபமுமாய் என்னைப் பார்த்தபடி ஹால் கதவோரம் நின்றுகொண்டிருந்தாள் என் ஒண்ணாப்பு சினேகிதி கல்பனா...
| நன்றி: கூகுள் |
Saturday, 21 May 2011
சொல்லாததும், சொல்லக்கூடாததும்
அது தமிழகத்தைக் கதிரவனும், தமிழீழத்தை சிங்களவனும் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு மே மாதப் பிற்பகல். ஒரு நுகர்வாளனாய் கடைவீதிக்குச் சென்றிருந்தேன். முள்ளிவாய்க்காலை சிங்கள ராணுவம் சுற்றிவளைத்து மனிதவேட்டையைத் துவக்கிவிட்டதாகக் கேள்விப்பட்டதில் கனத்த இதயத்தோடு அலைந்து கொண்டிருந்தேன். எப்போது என்ன நடக்குமென்ற திகில் நிமிடங்களாய் என் கைக்கடிகாரம் 'டிக்'கடித்துக் கொண்டிருந்தது.
அன்றாடக் கவலைகளைச்சுமந்துகொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறினேன். அலைபேசி சிணுங்கியது. குறுஞ்செய்தி. தாங்கி வந்த தகவல்...
"பிரபாகரன் மரணம்"
சங்ககாலத்தில் போர்க்களத்திலிருந்து மரணம் குறித்த செய்தி ஓலையில்தான் வருமாம். இப்போது அலை(பேசி)யில்... விக்கித்துப் போனேன். அதற்குமேல் வாங்கச் சென்ற பொருளின்மேல் நாட்டமில்லை. கை நிறைந்த வெறுமையுடனும், மனம் நிறைந்த இருளுடனும் இல்லம் திரும்பினேன். என்ன நடந்திருக்கும்? எண்ணங்கள் எல்லாத் திசைகளிலும் குழப்ப வட்டமடித்தன. இழுத்துப் பிடித்து உட்காரவைத்ததில், அப்படி எதுவும் நடந்திருக்காது என்ற புள்ளியில் நானே நிம்மதியானேன்.
சில மணித்தியாலங்களில் என் நிம்மதியை சுனாமியாய் புரட்டிப்போட்டது ஊடகங்கள் ஒளிபரப்பிய ஒளிக்கோர்வைகள். ஆயிரம்கோடித் துளிகளாய் உடைந்து சிதறும் அருவியாய் சிதறிப் போனேன் நானும். எதையுமே சிந்திக்கத் தோன்றாமல் பிரமை பிடித்துப் போனது மூளை. பின் நடந்த ஆம் / இல்லை வாக்குவாதங்களும், கூட்டம் கூட்டமாக கொளுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களும் அந்த கரிப்புகையாய் கலைந்து போன ஒரு வருடத்திற்கு பின்...
மிக தற்செயலாய் அதேநாளில் அரங்கேறியது என் பதிவுலகப் பிரவேசம். நல்லதோர் வீணையாய் துவங்கிய என் பயணத்தின் முதல் பதிவில் தம்பியைப் பற்றி எழுதவே எண்ணியிருந்தேன். ஆனால் ஏதேதோ கிறுக்கிய முதல்வரியை அடுத்தடுத்து அழித்ததிலேயே முடிந்து போனது என் கன்னிமுயற்சி. வார்த்தைகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறியது துக்கம். இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பின் நான் எழுதிய முதல் பதிவில்...
தம்பியையும், ஆயிரக்கணக்கான சகோதரர்களையும் கையாலாகத்தனத்தின் கனத்த இதயத்தோடு இரண்டே வரிகளில் கடந்து போனேன். மேலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆர்ப்பரிப்பாகவும், தமிழகத்தில் ஆறுகோடித் தமிழர்கள் ஆனந்தமாகவும், அறுதியிடம் இறுதியில் மண்டியிட்ட அபலைஇனம் அவஸ்தையாகவும் நாட்களை நகர்த்தியதில் வெகுவேகமாகக் கடந்துபோனது இன்னொரு வருடம்.
இதோ இன்று...
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எனது அறையிலும் ஒரு மெழுகை ஏற்றிவைக்கிறேன். அந்த ஆயிரக்கணக்கில் என் ஆதர்சத் தலைவன் இல்லை என்ற பிரகாசமான நம்பிக்கையோடு. என் நம்பிக்கையை கேள்வியெழுப்பிய நண்பர்களுக்கு நானளித்த பதில்கள் இவைதான்.
- ஸ்ரீலங்கா ராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒளிக்கோப்பில் தம்பியைப் பார்க்கும்போது நன்கு முகச்சவரம் செய்து, ஒழுங்குபடுத்தப்பட்ட மீசையுடன் தெரிகிறார். தொடர்ந்து ஐந்து மாதங்கள்... ஓயாத போராட்டம்... மிகப்பெரிய பின்னடைவு... பாதுகாப்பிற்காக அடிக்கடி இடமாற்றம்... வசதியற்ற பதுங்குகுழிகள்... இத்தனையையும் மீறி அவர் முகச்சவரம் செய்திருப்பாரா?
- தன் வெளிநாட்டுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்பிய ஸ்ரீலங்கா அதிபர், விமானநிலையத்திலேயே தன் தாய்மண்ணை முத்தமிட்டார். எதிரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உற்சாகத்தோடு அறிவித்தார். சரி. ஆனால் தம்பியின் பெயரை அவர் சொல்லவேயில்லையே. ஏன்.. பாராளுமன்றத்தில் அறிவிக்கும்போது கூட, அவர் மறந்தும் தம்பியின் பெயரை உச்சரிக்கவில்லையே... ஏன்?
- பின்லேடன் கொல்லப்பட்டபோது அமெரிக்காவும் இதேபோல் தான் செய்தது. ஆனால் அவர்கள் லேடனின் சடலத்தையும், புகைப்படத்தையும் உலகுக்கு காட்டவில்லையே தவிர, அந்நாட்டு அதிபர் பகிரங்கமாக பின்லேடனின் பெயரைக் குறிப்பிட்டு உலகுக்கு பறையறிவித்தார். பிரபாகரனின் விஷயத்திலும் இதேபோல் ஸ்ரீலங்கா ராணுவம் / அரசு, அவரது சடலத்தை உலகின் முன் காட்டவில்லை... அதிபரும் தம்பி பெயரை சொல்லவில்லை. ஏன்? பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டு, 1989 -ல் நடந்தது போல் மீண்டும் பிரபாகரன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டால்... இந்த உலகின்முன் எப்படி முகம் காட்டுவார் அதிபர்??!!
- விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்கள் வேரூன்றியிருக்கும் ஸ்ரீலங்காவே அறிவித்துவிட்ட பிறகும், இந்தியக் குடியரசு அவர்கள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டே போகிறதே.. அது ஏன்? ஐரோப்பிய ஒன்றியமும் அவர்கள் செயல்படத் தடைவிதிக்கிறதே அதற்கென்ன காரணம்?
- "ராஜீவ்காந்தி கொலைவழக்கு கோப்பை மூடவேண்டும். அந்தவழக்கின் முதன்மைக் குற்றவாளி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தா" என்று இந்தியா கேட்டுக்கொண்டே இருக்கிறதே... தருவதற்கு ஏன் இலங்கை அரசு தயக்கம் காட்டுகிறது?
- புலிகளிடம் இலகுரக விமானங்கள் இருந்தது உலகுக்கே தெரியும். போரில் அந்த விமானங்கள் அழிக்கப்பட்டதாகவோ, கைப்பற்றப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லையே!?
- அரசியல் தலைவர் நடேசனும், இன்னும் சில தலைவர்களும் ஆம்புலன்சில் தப்பிக்க முயற்சிக்கும்போது கொல்லப்பட்டனர் என்கிறது இலங்கை ராணுவம். வெறும் 300மீ -க்குள் சுற்றிவளைக்கப்பட்டபோதும் ஆம்புலன்சை வைத்து புலிகளால் தப்பிக்க முடியும் என்று முயற்சி செய்ய முடியுமானால்... அவர்களில் சிலர் ஏன் முன்பே மற்றொரு மார்க்கமாக தப்பித்திருக்க முடியாது? அந்த சிலரில் ஏன் பிரபாகரன் இருக்கமுடியாது?
என் பதில் கேள்விகளுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்துவிட்டு கலைந்து சென்றனர் நண்பர்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு விளங்கவில்லை. அது எதுவாக இருந்தாலும் தெரிந்துகொள்ள நான் விரும்பவுமில்லை.
ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு, பிரபாகரன் என்றொரு தனிமனிதன் மேல் ஏன் இந்த நம்பிக்கை? ஏன் இந்த அபிலாஷை? என்று தோன்றலாம். போராளிகளையும், உத்வேகமிக்க தொண்டர்களையும் ஒரு விவேகமான, வலிமையான தலைவனால் வார்த்தெடுக்க முடியும். ஆனால் தலைவர்கள் தானாகவே தோன்றுவதில்லை. அவர்கள் காலத்தால் உருவாக்கப்படுகிறவர்கள். சூழ்நிலைகளால் புடம் போடப்படுகிறவர்கள். பிரபாகரன் என்ற ஒரு திறமையான, கண்ணியமான தன்னிகரற்ற தலைவனால் நிச்சயம் தேவையான போராளிகளை உருவாக்கமுடியும்.
நான் சொல்வதோ, என் சிந்தனைகளோ விவரமறியாத, பக்குவமடையாத வாதங்களாகத் தோன்றலாம். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஒரு சராசரி தமிழனாகவே என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏதாவது நல்லது நடந்துவிடாதா? என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்புகள் இவை. என் முதல் பதிவில் நான் சொன்னது போலவே... தம்பியின் விஷயத்தில் நான் மூளைக்காரனாக இருக்க விரும்பவில்லை.
கர்த்தரை நம்புகிறவர்கள், "அவர் வருகை சமீபமாயிருக்கிறது" என்று காலங்காலமாக நம்புவது சரியென்றால்...
கண்ணனை நம்புகிறவர்கள், "கலியுகக் கல்கி அவதாரத்தை" யுகம்யுகமாக நம்புவது சரியென்றால்...
கண்ணனை நம்புகிறவர்கள், "கலியுகக் கல்கி அவதாரத்தை" யுகம்யுகமாக நம்புவது சரியென்றால்...
இந்த நூற்றாண்டிலும் ஒடுக்கப்படும் மக்களின் தலைவனாக 'தம்பி' பிரபாகரன் மீண்டு(ம்) வருவார் என்று நான் நம்புவதும் சரியே.
வெட்டவெளியே வீடாய் ஆகலாம்
பட்டினி எங்கள் உணவாய் போகலாம்
விடுதலை மூச்சு புயலினும் வலிதே
கொடுமையின் வீழ்ச்சி ஒரு நொடிப்பொழுதே.
ஈழச் சிறைமதில் இடியத் திரிப்போம்
நீலச் சிறகுகள் நிமிர விரிப்போம்.
- காசி ஆனந்தன்.
"நீங்கள் பூக்களை வெட்டிப் பறித்திருக்கலாம்.
ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது"
~#~
Wednesday, 4 May 2011
நாளைய ஆகாயம் நமக்காக...
குறைகிற நிலா மறுபடி வளரும்.
மறைகிற சூரியன் மறுநாள் உதிக்கும்.
விழுகிற விதை செடியாய் முளைக்கும்.
அழுகிற மழை புல்லாய் சிரிக்கும்.
உடைகிற மலை சிலையென ஆகும்.
சிதைகிற அணு சக்தியை வீசும்.
ஒடிகிற மூங்கில் குழலாய் மாறும்.
முடிகிற நாள் மறுபடி விடியும்.
தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.
தொடரும் கனவுகளை துரத்திப்பிடி.
வசப்படும் பொழுதுகளை வசீகரப்படுத்து.
வளரும் நினைவுகளை வரிசைப்படுத்து.
நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.
Saturday, 23 April 2011
Saturday, 26 March 2011
நொடிகளும் நிமிடங்களும்

பறவையின் இறகில்
பாலொளியை நனைத்து
மேனியெங்கும் தொட்டுத்தடவிய
சலனத்தை உணரும்
பருவத்தின் பெளர்ணமிகளில்...
தூக்கத்தைத் தொலைத்து
திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்.
உண்மை உறைத்து,
புன்னகையோடு நிலவை நோக்குகையில்
அங்கே -
பூக்களின் முகவரியோடு
சில முகங்களைக் கண்டிருக்கிறேன்.
ஒருமுறையல்ல... இருமுறையல்ல...
ஒவ்வொருமுறையும்
முழுநிலா நாளில் -
இது தொடர்ந்துகொண்டு தானிருந்தது.
கடிவாளமிடமுடியாக் காலக்குதிரையின்
குளம்படிச்சத்தம்
இப்போதும் காதில் இரைச்சலாய்...
வாரங்களும், வருடங்களுமாய்க் கரைந்த
வாழ்க்கையின் பயணத்தில்
என்னுடன் நீ வந்தபின்னரும்-
சில பின்னிரவுகளில்
பறவையிறகின் சீண்டலை உணர்ந்திருக்கிறேன்.
அப்போதும் தூக்கம் தொலைத்து
என்தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது,
இம்முறை உன்முகத்தை பௌர்ணமியில் தேடி...!
நிலவே பொறுமையிழந்த
ஒரு பின்னொருநாள் பின்னிரவில்
என் காதோரம் வந்து
கிசுகிசுத்துவிட்டுப் போனது அது.
என்னில் அவள்முகம் தேடாதே.
நான் முகம் பார்ப்பதே அவளில்தானென்று.
திடுக்கிட்டுத் திரும்பினேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த
உன் நுதலில் ஒளிர்ந்தது மூன்றாம்பிறை.
இரைச்சல் இன்னிசையானது
அப்போதிருந்துதான்...!
இனி வாழ்க்கைப்பயணம்
நொடிகளும், நிமிடங்களுமாய்க் கரையும்.
Wednesday, 23 February 2011
அந்த மூன்று மணிநேரம்...

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சிலபல குழப்பங்களுக்குப் பின் கிராம நிர்வாக அலுவலர் தேர்வை கடந்த ஞாயிறன்று வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது. நாமளும் எப்பிடியாவது ஒரு கி.நி.அ. ஆயிடணும்னு பரீட்சை எழுதிய ஒன்பது லட்சம் பேரில் நானும் ஒருவன்.
சரி. இந்தப் பரீட்சையை காரணம் காட்டி ரெண்டு நாள் ஊர்ப்பக்கம் போய் தலை காட்டிட்டு வரலாம்னு நான் போட்ட பிளான் இப்போ வொர்க் அவுட் ஆகிப்போச்சு. அப்போ பரீட்சை எழுதப் போறது??? சரி. அதை ஞாயித்துக்கிழமை டாஸ் போட்டுப்பாத்து முடிவு பண்ணிக்கலாம்னு ஒருவழியா ஊருக்கு பஸ் ஏறிட்டேன்.
சனிக்கிழமை... புல் ரெஸ்ட்டு. சாயங்காலமா அப்பா வந்து "ஏதாவது ப்ரிப்பேர் பண்ணியிருக்கியாடான்னு ஒருவார்த்தை கேட்டாலும் கேட்டாங்க... குப்புன்னு வேர்த்துடுச்சி. இருந்தாலும், "அதெல்லாம் அப்பவே காசை வாங்கிட்டு வேலையை அலாட் பண்ணிட்டாங்கப்பா", "எலெக்ஷன் டைம்ல எக்ஸாம் வெக்கிரானுங்க. ரிசல்ட் வராதுப்பா. எப்படியும் அடுத்த ஆட்சி வந்து இதெல்லாம் செல்லாதுன்னு சொல்லபோரானுங்க" அப்படீன்னு சமாளிச்சி வச்சேன். "எது எப்படி ஆனாலும் நீ எக்ஸாம் அட்டென்ட் பண்ணி வையி"ன்னு பதில் வந்துச்சி. மீற முடியுமா??
ஞாயித்துக்கிழமை... நம்மூர்ல நம்ம எக்ஸாம் சென்டர் கண்டுபிடிக்குறது பெரிய வேலையா என்ன?? 10 மணி எக்ஸாம்-க்கு 9.50 க்கெல்லாம் போயிட்டேன். (ஆனா ஹால் டிக்கெட்டுல 9.30 க்கே வரச் சொல்லி இருந்தாங்க. ஹி.. ஹி..) சரியா பத்து மணிக்கு வினாத்தாள் கொடுத்தாங்க. 200 கேள்விகள். 3 மணி நேரம். அதுவும் கொள்குறி வகை வினாக்கள். அதாங்க "சரியான விடையை தேர்ந்தெடு" டைப். மனசாட்சியே இல்லாம 200 கேள்விக்கு 3 மணிநேரம் கொடுத்தாங்க பாருங்க... அவங்களை ரொம்பப் பாராட்டணும்... சரி. எழுதி முடிச்சா வூட்டுக்குப் போலாம்னா, முழுசா மூணுமணிநேரமும் ஹால்லயே இருக்கணும்னு கண்டிஷன் வேற.
நமக்கா டைம் பாஸ் பண்ணத் தெரியாது. எத்தினி எக்ஸாம் அட்டென்ட் பண்ணிருப்போம்.
முதல் அரைமணிநேரம் - அத்தனை வினாக்களையும் வாசித்தே கரைத்தேன்.
அடுத்த ஒரு மணிநேரம் - அத்தனை விடைகளையும் அளித்து முடித்தேன்.
(அட, எக்ஸாம் முடிஞ்சுடிச்சுங்க)
சரி. இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது. என்ன பண்ணலாம்??
நமக்குத்தான் பத்தாப்பு, பன்னண்டாப்புல வச்சே சொல்லித் தந்துருக்காங்களே. அது இப்போ ஞாபகம் வருது. எக்ஸாம்-ல எல்லாம் எழுதி முடிச்சு டைம் இருந்தா ரிவைஸ் (revise) பண்ணனும். சோ,
அடுத்த அரைமணிநேரம் - அத்தனை விடைகளையும் ரிவைத்தே கரைத்தேன்.
இன்னும் ஒருமணிநேரம்.
அப்பாடா. நல்லவேளையாக நமக்கு இருக்கை ஜன்னலுக்கு அருகில். வெளியே பார்வையை ஓடவிட்டேன். மனதையும் தான். பக்கத்திலேயே ஒரு வேம்பு. சில மணித்துளிகளில் எனக்காகவே அங்கு வந்து சேர்ந்தது ஒரு அணில். அதன் அழகையும், அந்த விளையாட்டையும் ரசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அணிலும் டாட்டா காட்டிவிட்டு போய்விட்டது. சரி. மணி பார்க்கலாம் என்று மணிக்கட்டைப் பார்த்தால், வாட்ச்சைக் காணவில்லை.
"அட மடையா... வாட்ச்சைக் கழட்டி டேபிள் மேல வச்சிட்டு, கையில பார்த்தா எப்பிடிடா இருக்கும்னு" என் மனசாட்சி மணியடிக்க, வாட்ச்சைக் கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...
இன்னும் அரைமணிநேரம்.
வகுப்பறையினுள் பார்வையை செலுத்தினேன். அது ஒரு கான்வென்ட் ஸ்கூல். சுத்தமாகவும், ஒழுக்கமாகவும் வைத்திருந்தார்கள். ஒரு நாட்காட்டி, ஒரு மாதகாட்டி (அதாங்க Monthly Calender), பைபிளிலிருந்து சில வசனங்கள்... பிரேமுக்குள் முனகிக்கொண்டிருந்தார் சிலுவையிலறையப்பட்ட ஜீசஸ்... அப்படியே சக தேர்வெழுதிகளின் மேல் பார்வையை ஓட்டினேன். அநேகமாய் அத்தனை பேரும் முடித்துவிட்டார்கள். ஒரு சில அதிபுத்திசாலிகளைத் தவிர.
திடீரென்று பக்கத்து பெஞ்ச் பளிச்சென்று தெரிந்தது. அங்கே இருந்தது ஒரு பெண். அதுவும் எனக்குப் பிடித்த தாவணியில். அதுவும் அழகாக. அதுவும்... சரி... சரி... தென்தமிழகத் தலைநகரங்களில் கூட இப்போதெல்லாம் தாவணிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. இன்னும் கிராமங்களில் மட்டும்தான் தாவணி வாழ்கிறது. டிங்... டிங்... டிங்... கலைந்து எழுந்தேன்.
இன்னும் 5 நிமிடங்கள். தேர்வு கண்காணிப்பாளர் அறிவித்தபடியே வந்து, எங்களது விடைத்தாள்களை சேகரித்துக் கொண்டார். எனக்கு முந்தைய எண்ணில் தேர்வெழுதிய அந்த தாவணியின் பெயரை தெரிந்து கொண்டேன்... கண்காணிப்பாளரின் கையிலிருந்த அவளது விடைத்தாளைப் பார்த்து.
விடைத்தாளைக் கொடுத்தபின் நமக்கு அங்கென்ன வேலை??? கிளம்பவேண்டியதுதானே... கிளம்பிட்டன்... அவ்வளவுதான். என்னோட வி.ஏ.ஓ. தேர்வெழுதிய அனுபவம் முடிந்தது.... டொட்டோட்டோயங்...
என்னாது..??? அந்த தாவணியோட பேரா???
காதைக் குடுங்க. உங்ககிட்ட மட்டும் சொல்றேன். ஷீபா...
(What a co-incident.!!! எங்க supervisor பேரும் அதுதான்!)
எந்தவித முன்தயாரிப்பும் இல்லாத எனக்கே அந்த வினாக்கள் மிகவும் எளிதாகத் தெரிந்தன. திறமையானவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.
Success comes to those who dare and act...
(இது அந்த வகுப்பறையில் எழுதப்பட்டிருந்தது...)
Saturday, 19 February 2011
தவறவிட்ட பொக்கிஷ நாட்கள்

சில மாதங்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலம் திரும்பியிருக்கிறேன். தவறவிட்ட நாட்கள் பொக்கிஷமாய் இப்போது தோன்றுகின்றன. இடைப்பட்ட பொழுதுகளில் எழுத நினைத்த தலைப்புகள் ஏராளம்.
ஆனால் எழுத தீர்மானிக்கும் நொடி வசப்படாமலே போனது. ஏன் என்பதை சொல்லமுடியுமா யாராவது?? கற்றை கற்றையாய் நூல்களும், எழுத்துக்காரர்களும் தோன்றும் எழுத்துலகில் யாருக்குமே விடை தெரியாத இந்த கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.
சுவற்றைப் பிடித்து நடக்க முயலும் ஒரு குழந்தையைப் போல எழுத்து நதியின் கரையோரமாய் நாம் ஒரு காலூன்ற முயல்கிறேன். கற்பனைச் சிறகுகளுக்கு கவிதை வடிவில் வண்ணம் கொடுக்க முடிகிறது. ஆனால், எதார்த்த உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் வண்ணம் பூசும் லாவகம் கைகூடி வரவில்லை.
இப்படித்தான்...
உள்ளே கிடக்கிறது ஓராயிரம் எண்ணங்கள்.
உடைந்து போயிருக்கும் உள்மன வண்ணங்கள்.
எழுத்தாய் உருமாற்ற ஏனோ தயக்கம்.
நினைத்தவுடன் எழுதாமல் தள்ளிவைக்கும் மயக்கம்.
அன்றாட அலுவல்கள். அதனூடே பல செயல்கள்.
அவற்றாலான களைப்புடன் தூங்கிப்போகும் நினைவுகள்.
மனதின் அலைக்கழிப்புகளில் அயர்ச்சியாய் உணர்கிறேன்.
துடிப்பான நேரங்களில்s வேறு செயல்பாடுகள் என்று தொடர்ச்சியாய் என்னை அபகரிக்கும் வேளைகளில், எழுதும் நேரங்களை முற்றிலுமாய் தொலைத்துவிடுகிறேன்.
மொத்தத்தில் நான் சோம்பலில் திளைத்ததுதான்
பதிவுலக இடைவெளிக்கு காரணம். இனி நிகழாது இதுபோல்.
கைவசம் இருக்கு
கொஞ்சம் சரக்கு.
ஆர் யு ரெடி???
ஆனால் எழுத தீர்மானிக்கும் நொடி வசப்படாமலே போனது. ஏன் என்பதை சொல்லமுடியுமா யாராவது?? கற்றை கற்றையாய் நூல்களும், எழுத்துக்காரர்களும் தோன்றும் எழுத்துலகில் யாருக்குமே விடை தெரியாத இந்த கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.
சுவற்றைப் பிடித்து நடக்க முயலும் ஒரு குழந்தையைப் போல எழுத்து நதியின் கரையோரமாய் நாம் ஒரு காலூன்ற முயல்கிறேன். கற்பனைச் சிறகுகளுக்கு கவிதை வடிவில் வண்ணம் கொடுக்க முடிகிறது. ஆனால், எதார்த்த உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும் வண்ணம் பூசும் லாவகம் கைகூடி வரவில்லை.
இப்படித்தான்...
உள்ளே கிடக்கிறது ஓராயிரம் எண்ணங்கள்.
உடைந்து போயிருக்கும் உள்மன வண்ணங்கள்.
எழுத்தாய் உருமாற்ற ஏனோ தயக்கம்.
நினைத்தவுடன் எழுதாமல் தள்ளிவைக்கும் மயக்கம்.
அன்றாட அலுவல்கள். அதனூடே பல செயல்கள்.
அவற்றாலான களைப்புடன் தூங்கிப்போகும் நினைவுகள்.
மனதின் அலைக்கழிப்புகளில் அயர்ச்சியாய் உணர்கிறேன்.
துடிப்பான நேரங்களில்s வேறு செயல்பாடுகள் என்று தொடர்ச்சியாய் என்னை அபகரிக்கும் வேளைகளில், எழுதும் நேரங்களை முற்றிலுமாய் தொலைத்துவிடுகிறேன்.
மொத்தத்தில் நான் சோம்பலில் திளைத்ததுதான்
பதிவுலக இடைவெளிக்கு காரணம். இனி நிகழாது இதுபோல்.
கைவசம் இருக்கு
கொஞ்சம் சரக்கு.
ஆர் யு ரெடி???
Wednesday, 8 December 2010
புதிய பூவின் புன்னகை...!

நேராகச் சென்ற வாழ்க்கை இப்போது சில இடங்களில் நெளிவதை உணர முடிகிறது.
சீரான தடம் அமைய அதன் போக்கிலேயே வளைந்து திரும்புகிறேன் நானும்.
வாழ்க்கை என்னை என் விருப்பத்திற்கெதிராக எங்கெங்கோ இழுத்துக்கொண்டு திரிகிறது.
சில பொழுதுக்குள் வாடிவிடும் பொய்களாலான தோரணங்களும்,
என்றும் நிலைத்திருக்கும் யதார்த்தங்களால் எழுப்பப்படும் நிஜங்களும்
எப்போதும் தீவீரமான சமரில் லயித்திருக்கின்றன.
ஓங்கியடிக்கும் அலைகளுக்கு பாவனை காட்ட இயலாமல்
கரைகளில் பதிந்திருக்கும் பெருங்கற்களைப் போல -
ஊழிப் பெருவாழ்வின் சில நிகழ்வுகளை ஊமையாய் மென்று கொண்டிருக்கிறது இதயம்.
வந்துவந்து கரை தொட்டுச் செல்லும் நீரில்,
வரப்பிடிக்காமல் நழுவிச் செல்லும் மீன்களைப் போல...
சில நினைவுகள் ஞாபக அடுக்குகளிலிருந்து லாவகமாய் நீங்கிச் செல்கின்றன.
ஆசையாய் துரத்திப் பிடித்த பட்டாம்பூச்சியை விட்ட பின்பும்,
விரல்களில் பிசுபிசுக்கும் வண்ணங்களைப் போல -
உள்ளத்தின் ஓரத்தில் இன்னும் குற்றுயிரோடு இருக்கிறது காதலுக்கான ஏக்கம்.
காதலில் நினைவு தப்பி வரும் கனவில் ஒருபோதும் எனக்கான நிஜமுகம் வந்ததில்லை.
தீர்க்கமான முடிவுக்காக, இமை கவிழ்த்து யோசிக்கிறேன்...
எனக்கான முகம் எதுவென? பல முகங்கள் வருகின்றன வரிசையாய்...
சிரித்தபடி, சிநேகித்தபடி, கருணை சிந்த, காருண்யம் பொங்க,
சாந்தமாய், சந்தோஷமாய்... ஒன்றாய், இரண்டாய், பலவாய்...
கடைசிவரை தெரியவில்லை எனக்கான இணை எதுவென!
நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் நெடுந்தொலைவுக் கனவுகள் தான்.
வாழ்க்கை சொல்லித்தரும் அனுபவங்களெல்லாம் அற்புதங்கள் தாம்.
என் எண்ணங்களுக்கு எதிரான வாழ்க்கை எதிலும் நிலை கொள்ளாமல்
நாளை என்ற நம்பிக்கையினூடே நகர்ந்து கொண்டே இருக்கிறது!
வாழ்க்கை தன்னைப் புரியவைக்க சில தருணங்களையும்,
சில நிகழ்வுகளையும் தன வசப்படுத்திக் கொள்கிறது.
நேர்கோட்டுப் பயணம் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமில்லை
என்னும் எதார்த்தம் முகத்தில் அறைகிறது.
தெளிந்த மனதோடு சென்ற வாரம் பதியமிட்ட ரோஜாச செடியில்,
இந்த வாரம் சில பூக்களின் புன்னகை.
காதலைத் தாண்டிய வாழ்க்கையின் தேடலுக்கு
என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இதுவென புரிகிறது.
Subscribe to:
Posts (Atom)










