Wednesday, 23 February 2011

அந்த மூன்று மணிநேரம்...


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சிலபல குழப்பங்களுக்குப் பின் கிராம நிர்வாக அலுவலர் தேர்வை கடந்த ஞாயிறன்று வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது. நாமளும் எப்பிடியாவது ஒரு கி.நி.. ஆயிடணும்னு பரீட்சை எழுதிய ஒன்பது லட்சம் பேரில் நானும் ஒருவன்.

சரி. இந்தப் பரீட்சையை காரணம் காட்டி ரெண்டு நாள் ஊர்ப்பக்கம் போய் தலை காட்டிட்டு வரலாம்னு நான் போட்ட பிளான் இப்போ வொர்க் அவுட் ஆகிப்போச்சு. அப்போ பரீட்சை எழுதப் போறது??? சரி. அதை ஞாயித்துக்கிழமை டாஸ் போட்டுப்பாத்து முடிவு பண்ணிக்கலாம்னு ஒருவழியா ஊருக்கு பஸ் ஏறிட்டேன்.

சனிக்கிழமை... புல் ரெஸ்ட்டு. சாயங்காலமா அப்பா வந்து "ஏதாவது ப்ரிப்பேர் பண்ணியிருக்கியாடான்னு ஒருவார்த்தை கேட்டாலும் கேட்டாங்க... குப்புன்னு வேர்த்துடுச்சி. இருந்தாலும், "அதெல்லாம் அப்பவே காசை வாங்கிட்டு வேலையை அலாட் பண்ணிட்டாங்கப்பா", "எலெக்ஷன் டைம்ல எக்ஸாம் வெக்கிரானுங்க. ரிசல்ட் வராதுப்பா. எப்படியும் அடுத்த ஆட்சி வந்து இதெல்லாம் செல்லாதுன்னு சொல்லபோரானுங்க" அப்படீன்னு சமாளிச்சி வச்சேன். "எது எப்படி ஆனாலும் நீ எக்ஸாம் அட்டென்ட் பண்ணி வையி"ன்னு பதில் வந்துச்சி. மீற முடியுமா??

ஞாயித்துக்கிழமை... நம்மூர்ல நம்ம எக்ஸாம் சென்டர் கண்டுபிடிக்குறது பெரிய வேலையா என்ன?? 10 மணி எக்ஸாம்-க்கு 9.50 க்கெல்லாம் போயிட்டேன். (ஆனா ஹால் டிக்கெட்டுல 9.30 க்கே வரச் சொல்லி இருந்தாங்க. ஹி.. ஹி..) சரியா பத்து மணிக்கு வினாத்தாள் கொடுத்தாங்க. 200 கேள்விகள். 3 மணி நேரம். அதுவும் கொள்குறி வகை வினாக்கள். அதாங்க "சரியான விடையை தேர்ந்தெடு" டைப். மனசாட்சியே இல்லாம 200 கேள்விக்கு 3 மணிநேரம் கொடுத்தாங்க பாருங்க... அவங்களை ரொம்பப் பாராட்டணும்... சரி. எழுதி முடிச்சா வூட்டுக்குப் போலாம்னா, முழுசா மூணுமணிநேரமும் ஹால்லயே இருக்கணும்னு கண்டிஷன் வேற.

நமக்கா டைம் பாஸ் பண்ணத் தெரியாது. எத்தினி எக்ஸாம் அட்டென்ட் பண்ணிருப்போம்.

முதல் அரைமணிநேரம் - அத்தனை வினாக்களையும் வாசித்தே கரைத்தேன்.
அடுத்த ஒரு மணிநேரம் - அத்தனை விடைகளையும் அளித்து முடித்தேன்.
(
அட, எக்ஸாம் முடிஞ்சுடிச்சுங்க)

சரி. இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது. என்ன பண்ணலாம்??
நமக்குத்தான் பத்தாப்பு, பன்னண்டாப்புல வச்சே சொல்லித் தந்துருக்காங்களே. அது இப்போ ஞாபகம் வருது. எக்ஸாம்- எல்லாம் எழுதி முடிச்சு டைம் இருந்தா ரிவைஸ் (revise) பண்ணனும். சோ,

அடுத்த அரைமணிநேரம் - அத்தனை விடைகளையும் ரிவைத்தே கரைத்தேன்.

இன்னும் ஒருமணிநேரம்.

அப்பாடா. நல்லவேளையாக நமக்கு இருக்கை ஜன்னலுக்கு அருகில். வெளியே பார்வையை ஓடவிட்டேன். மனதையும் தான். பக்கத்திலேயே ஒரு வேம்பு. சில மணித்துளிகளில் எனக்காகவே அங்கு வந்து சேர்ந்தது ஒரு அணில். அதன் அழகையும், அந்த விளையாட்டையும் ரசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அணிலும் டாட்டா காட்டிவிட்டு போய்விட்டது. சரி. மணி பார்க்கலாம் என்று மணிக்கட்டைப் பார்த்தால், வாட்ச்சைக் காணவில்லை.

"அட மடையா... வாட்ச்சைக் கழட்டி டேபிள் மேல வச்சிட்டு, கையில பார்த்தா எப்பிடிடா இருக்கும்னு" என் மனசாட்சி மணியடிக்க, வாட்ச்சைக் கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...

இன்னும் அரைமணிநேரம்.

வகுப்பறையினுள் பார்வையை செலுத்தினேன். அது ஒரு கான்வென்ட் ஸ்கூல். சுத்தமாகவும், ஒழுக்கமாகவும் வைத்திருந்தார்கள். ஒரு நாட்காட்டி, ஒரு மாதகாட்டி (அதாங்க Monthly Calender), பைபிளிலிருந்து சில வசனங்கள்... பிரேமுக்குள் முனகிக்கொண்டிருந்தார் சிலுவையிலறையப்பட்ட ஜீசஸ்... அப்படியே சக தேர்வெழுதிகளின் மேல் பார்வையை ஓட்டினேன். அநேகமாய் அத்தனை பேரும் முடித்துவிட்டார்கள். ஒரு சில அதிபுத்திசாலிகளைத் தவிர.

திடீரென்று பக்கத்து பெஞ்ச் பளிச்சென்று தெரிந்தது. அங்கே இருந்தது ஒரு பெண். அதுவும் எனக்குப் பிடித்த தாவணியில். அதுவும் அழகாக. அதுவும்... சரி... சரி... தென்தமிழகத் தலைநகரங்களில் கூட இப்போதெல்லாம் தாவணிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது. இன்னும் கிராமங்களில் மட்டும்தான் தாவணி வாழ்கிறது. டிங்... டிங்... டிங்... கலைந்து எழுந்தேன்.

இன்னும் 5 நிமிடங்கள். தேர்வு கண்காணிப்பாளர் அறிவித்தபடியே வந்து, எங்களது விடைத்தாள்களை சேகரித்துக் கொண்டார். எனக்கு முந்தைய எண்ணில் தேர்வெழுதிய அந்த தாவணியின் பெயரை தெரிந்து கொண்டேன்... கண்காணிப்பாளரின் கையிலிருந்த அவளது விடைத்தாளைப் பார்த்து.

விடைத்தாளைக் கொடுத்தபின் நமக்கு அங்கென்ன வேலை??? கிளம்பவேண்டியதுதானே... கிளம்பிட்டன்... அவ்வளவுதான். என்னோட வி... தேர்வெழுதிய அனுபவம் முடிந்தது.... டொட்டோட்டோயங்...

என்னாது..??? அந்த தாவணியோட பேரா???
காதைக் குடுங்க. உங்ககிட்ட மட்டும் சொல்றேன். ஷீபா...
(What a co-incident.!!! எங்க supervisor பேரும் அதுதான்!)

எந்தவித முன்தயாரிப்பும் இல்லாத எனக்கே அந்த வினாக்கள் மிகவும் எளிதாகத் தெரிந்தன. திறமையானவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.

Success comes to those who dare and act...
(இது அந்த வகுப்பறையில் எழுதப்பட்டிருந்தது...)


No comments: