வீட்டுமாடியில் ஏறிநின்றாலும் தலைகுனிந்து
கேலிபேசும் தென்னங்கீற்றுகள்.
கேலிபேசும் தென்னங்கீற்றுகள்.
வெள்ளை உள்ளமாய் வெடித்துச் சிரிக்கும் பருத்திச்செடி.
மண்ணின் மேனிக்கு வலிஎடுக்காமல் முளைகீறும் விதைகள்.
மின்னல் மழைக்கால ஈரநிலத்துக் காளான்.
அந்தி சாயும் நேரத்துச் சின்ன சாரல்.
ஆகாச விளிம்பில் சிவப்பு வடிசலோடு தலையெடுக்கும் கதிரவன்.
தூங்குமூஞ்சி மரங்களில் சூரியன் விழித்திருக்கும் இளம்பகல்.
காதல் வரிகள் கிறுக்கி வைத்த கள்ளிச்செடியின் பச்சைத் தாள்கள்.
மயக்கும் மலர்ச்சுமையுடன் கற்றாழைத் தண்டுகள்.
கூடடையும் குருவிகளின் சரிகமபதநி.
கொதிக்கும் உலையரிசியின் தாளகதி.
கொதிக்கும் உலையரிசியின் தாளகதி.
என்னைக் கடக்கிற நரை மேகங்கள்.
கெட்டிக்கரை போட்ட தறிச்சேலை போல்,
நீண்டுகிடக்கும் தார்ச்சாலை.
புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்.
கற்றைக் காலடிகள் தழுவியதால்,
ஒற்றைப்பாதையான பச்சை மெய்யெழுத்துகள்.
பள்ளங்களில் புரண்டெழுந்து பந்தாடிய பனங்கொட்டைகள்.
தொலைதூரப் பயணமெங்கும் சிதறிக் கிடக்கும் கவிதைகள்.
வெள்ளரிப் பிஞ்சுகளைக் கடித்தபடி,
ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்கள்.
கணுக்கால் கொலுசு கீதமிட, கண்ணாடிவளை பேச,
சிற்றோடையில் மஞ்சள் குளித்து,
ஈரச்சேலையுடன்தெம்மாங்கு நடைநடந்து
தெருக்களைக் கவிதைக்களமாக்கும் கன்னிப்பெண்கள்.
கண்டவுடன் கன்னம் தடவி -
திருஷ்டி கழிக்கும் தண்டட்டிப் பாட்டிகள்.
ஒரு அழகின் கலைவிழாவாய் எங்கள் கிராமம்.
வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,
பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...
நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை.
வாழும்கலை மறந்து புலம்பெயர்ந்ததற்கான
வலுவான காரணம் -
இப்போதும் இல்லை என்னிடம்.