Saturday, 30 April 2011

அரையாடைக் கிழவன்


காந்தியே...

நீ பிறந்ததென்னவோ -
போர்பந்தரில் தான்.
ஆனால் போர் இல்லாமலேயே,
எங்களை ஜெயிக்க வைத்தாய்.

நீ எங்களுக்கு -
சுதந்திரச் சுடராய் ஒளி தந்துவிட்டு
கருகிப்போன திரி.

நீயொரு ஈசல்.
எங்கள் உள்ளத்தில் 
ஆகஸ்டு 15 -ல் பிறப்பாய்;
அன்றே இறப்பாய்.

எங்களுக்காக நீ கொடுத்ததையெல்லாம்
பயன்படுத்தாமலே பழசாக்கினோம் -
வாய்மை... நேர்மை... தூய்மை...
அஹிம்சை... சுதேசி... ராட்டை...
ஒத்துழையாமை... சத்யாகிரகம்... மதுவிலக்கு...

கூன்விழுந்த உன் முதுகில்
நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தினோம்.
சகிப்பை மறந்து உருவிய வாளில்
வடிந்த குருதியை;
உன் கந்தலாடையில் உலர்த்தினோம்.

உன் தேகத்தின் மீதுதான்
துண்டாடப்பட வேண்டுமென்றாய்!
துண்டாடியபின் உன் தேகத்தில்
குண்டாடிய தேசமிது!

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரிலும்
தேர்ந்தெடுத்தவர்கள் தெருவிலும் நிற்கும்
இந்த தேசத்தையா நீ நேசித்தாய்?

இங்கே -
உனக்குப் பிறகு சுடப்பட்டது
"உண்மை" தான்!

ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...

உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!



.

7 comments:

சாகம்பரி said...

நல்ல கருத்துதான் , ஆனால் காந்தி திரும்பி வந்து மறுபடியும் குண்டடிபடவா? மாற்றம் வர வேண்டுமெனில் இங்கு வேறு அவதாரம் நடக்க வேண்டும் .

சி.பி.செந்தில்குமார் said...

காந்தி கவிதை நல்லாருக்கு.. ஆனா இந்தக்காலத்துல காந்தி மாதிரி ஒருத்தரை பார்க்க முடியுமா?

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்தேன்
அனைத்து பதிவுகளும் அருமை
குறிப்பாக மெஞ்ஞானதிற்கு மேல் விஞ்ஞானம்
வித்தியாசமான சிந்தனை
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்

சிசு said...

மூன்று முதல்வர்களுக்கும் நன்றிகள்.... # முதன்முறை வருகை தந்திருக்கிறீர்கள். மிக்கநன்றி.

சிசு said...

@ சாகம்பரி

கருத்துரைக்கு நன்றி.... காந்தீய சிந்தனைகள் கொண்ட ஒரு அவதாரம் வந்தால் மகிழ்ச்சிதான்....

சிசு said...

@ சி.பி.செந்தில்குமார்

நன்றி செந்தில். காந்தி மாதிரி ஒருத்தர்....... ம்ம்ம்... நல்லக்கண்ணு நினைவுக்கு வருகிறார்...

சிசு said...

@ Ramani

முதல் வருகைக்கும், முத்தான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ரமணி...