Saturday, 21 May 2011

சொல்லாததும், சொல்லக்கூடாததும்

அது தமிழகத்தைக் கதிரவனும், தமிழீழத்தை சிங்களவனும் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு மே மாதப் பிற்பகல். ஒரு நுகர்வாளனாய் கடைவீதிக்குச் சென்றிருந்தேன். முள்ளிவாய்க்காலை சிங்கள ராணுவம் சுற்றிவளைத்து மனிதவேட்டையைத் துவக்கிவிட்டதாகக் கேள்விப்பட்டதில் கனத்த இதயத்தோடு அலைந்து கொண்டிருந்தேன். எப்போது என்ன நடக்குமென்ற திகில் நிமிடங்களாய் என் கைக்கடிகாரம் 'டிக்'கடித்துக் கொண்டிருந்தது.

அன்றாடக் கவலைகளைச்சுமந்துகொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறினேன். அலைபேசி சிணுங்கியது. குறுஞ்செய்தி. தாங்கி வந்த தகவல்...

"பிரபாகரன் மரணம்" 

சங்ககாலத்தில் போர்க்களத்திலிருந்து மரணம் குறித்த செய்தி ஓலையில்தான் வருமாம். இப்போது அலை(பேசி)யில்... விக்கித்துப் போனேன். அதற்குமேல் வாங்கச் சென்ற பொருளின்மேல் நாட்டமில்லை. கை நிறைந்த வெறுமையுடனும், மனம் நிறைந்த இருளுடனும் இல்லம் திரும்பினேன். என்ன நடந்திருக்கும்? எண்ணங்கள் எல்லாத் திசைகளிலும் குழப்ப வட்டமடித்தன. இழுத்துப் பிடித்து உட்காரவைத்ததில், அப்படி எதுவும் நடந்திருக்காது என்ற புள்ளியில் நானே நிம்மதியானேன். 

சில மணித்தியாலங்களில் என் நிம்மதியை சுனாமியாய் புரட்டிப்போட்டது ஊடகங்கள் ஒளிபரப்பிய ஒளிக்கோர்வைகள். ஆயிரம்கோடித் துளிகளாய் உடைந்து சிதறும் அருவியாய் சிதறிப் போனேன்  நானும். எதையுமே சிந்திக்கத் தோன்றாமல் பிரமை பிடித்துப் போனது மூளை. பின் நடந்த ஆம் / இல்லை வாக்குவாதங்களும், கூட்டம் கூட்டமாக கொளுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களும் அந்த கரிப்புகையாய் கலைந்து போன ஒரு வருடத்திற்கு பின்...

மிக தற்செயலாய் அதேநாளில் அரங்கேறியது என் பதிவுலகப் பிரவேசம். நல்லதோர் வீணையாய் துவங்கிய என் பயணத்தின் முதல் பதிவில் தம்பியைப் பற்றி எழுதவே எண்ணியிருந்தேன். ஆனால் ஏதேதோ கிறுக்கிய முதல்வரியை அடுத்தடுத்து அழித்ததிலேயே முடிந்து போனது என் கன்னிமுயற்சி. வார்த்தைகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறியது துக்கம். இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பின் நான் எழுதிய முதல் பதிவில்... 

தம்பியையும், ஆயிரக்கணக்கான சகோதரர்களையும் கையாலாகத்தனத்தின் கனத்த இதயத்தோடு இரண்டே வரிகளில் கடந்து போனேன். மேலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆர்ப்பரிப்பாகவும், தமிழகத்தில் ஆறுகோடித் தமிழர்கள் ஆனந்தமாகவும், அறுதியிடம் இறுதியில் மண்டியிட்ட அபலைஇனம் அவஸ்தையாகவும் நாட்களை நகர்த்தியதில் வெகுவேகமாகக் கடந்துபோனது இன்னொரு வருடம்.

இதோ இன்று...

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எனது அறையிலும் ஒரு மெழுகை ஏற்றிவைக்கிறேன். அந்த ஆயிரக்கணக்கில் என் ஆதர்சத் தலைவன் இல்லை என்ற பிரகாசமான நம்பிக்கையோடு. என் நம்பிக்கையை கேள்வியெழுப்பிய நண்பர்களுக்கு நானளித்த பதில்கள் இவைதான்.

  • ஸ்ரீலங்கா ராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒளிக்கோப்பில் தம்பியைப் பார்க்கும்போது நன்கு முகச்சவரம் செய்து, ஒழுங்குபடுத்தப்பட்ட மீசையுடன் தெரிகிறார். தொடர்ந்து ஐந்து மாதங்கள்... ஓயாத போராட்டம்... மிகப்பெரிய பின்னடைவு... பாதுகாப்பிற்காக அடிக்கடி இடமாற்றம்... வசதியற்ற பதுங்குகுழிகள்... இத்தனையையும் மீறி அவர் முகச்சவரம் செய்திருப்பாரா?
  • தன் வெளிநாட்டுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்பிய ஸ்ரீலங்கா அதிபர், விமானநிலையத்திலேயே தன் தாய்மண்ணை முத்தமிட்டார். எதிரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உற்சாகத்தோடு அறிவித்தார். சரி. ஆனால் தம்பியின் பெயரை அவர் சொல்லவேயில்லையே. ஏன்.. பாராளுமன்றத்தில் அறிவிக்கும்போது கூட, அவர் மறந்தும் தம்பியின் பெயரை உச்சரிக்கவில்லையே... ஏன்?
  • பின்லேடன் கொல்லப்பட்டபோது அமெரிக்காவும் இதேபோல் தான் செய்தது. ஆனால் அவர்கள் லேடனின் சடலத்தையும், புகைப்படத்தையும் உலகுக்கு காட்டவில்லையே தவிர, அந்நாட்டு அதிபர் பகிரங்கமாக பின்லேடனின் பெயரைக் குறிப்பிட்டு உலகுக்கு பறையறிவித்தார். பிரபாகரனின் விஷயத்திலும் இதேபோல் ஸ்ரீலங்கா ராணுவம் / அரசு, அவரது சடலத்தை உலகின் முன் காட்டவில்லை... அதிபரும் தம்பி பெயரை சொல்லவில்லை. ஏன்? பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டு, 1989 -ல் நடந்தது போல் மீண்டும் பிரபாகரன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டால்... இந்த உலகின்முன் எப்படி முகம் காட்டுவார் அதிபர்??!!
  • விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்கள் வேரூன்றியிருக்கும் ஸ்ரீலங்காவே அறிவித்துவிட்ட பிறகும், இந்தியக் குடியரசு அவர்கள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டே போகிறதே.. அது ஏன்? ஐரோப்பிய ஒன்றியமும் அவர்கள் செயல்படத் தடைவிதிக்கிறதே அதற்கென்ன காரணம்?
  • "ராஜீவ்காந்தி கொலைவழக்கு கோப்பை மூடவேண்டும். அந்தவழக்கின் முதன்மைக் குற்றவாளி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் தா" என்று இந்தியா கேட்டுக்கொண்டே இருக்கிறதே... தருவதற்கு ஏன் இலங்கை அரசு தயக்கம் காட்டுகிறது?
  • புலிகளிடம் இலகுரக விமானங்கள் இருந்தது உலகுக்கே தெரியும். போரில் அந்த விமானங்கள் அழிக்கப்பட்டதாகவோ, கைப்பற்றப்பட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லையே!?
  • அரசியல் தலைவர் நடேசனும், இன்னும் சில தலைவர்களும் ஆம்புலன்சில் தப்பிக்க முயற்சிக்கும்போது கொல்லப்பட்டனர் என்கிறது இலங்கை ராணுவம். வெறும் 300மீ -க்குள் சுற்றிவளைக்கப்பட்டபோதும் ஆம்புலன்சை வைத்து புலிகளால் தப்பிக்க முடியும் என்று முயற்சி செய்ய முடியுமானால்... அவர்களில் சிலர் ஏன் முன்பே மற்றொரு மார்க்கமாக தப்பித்திருக்க முடியாது? அந்த சிலரில் ஏன் பிரபாகரன் இருக்கமுடியாது?

என் பதில் கேள்விகளுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்துவிட்டு கலைந்து சென்றனர் நண்பர்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு விளங்கவில்லை. அது எதுவாக இருந்தாலும் தெரிந்துகொள்ள நான் விரும்பவுமில்லை. 

ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு, பிரபாகரன் என்றொரு தனிமனிதன் மேல் ஏன் இந்த நம்பிக்கை? ஏன் இந்த அபிலாஷை? என்று தோன்றலாம். போராளிகளையும், உத்வேகமிக்க தொண்டர்களையும் ஒரு விவேகமான, வலிமையான தலைவனால் வார்த்தெடுக்க முடியும். ஆனால் தலைவர்கள் தானாகவே தோன்றுவதில்லை. அவர்கள் காலத்தால் உருவாக்கப்படுகிறவர்கள். சூழ்நிலைகளால் புடம் போடப்படுகிறவர்கள். பிரபாகரன் என்ற ஒரு திறமையான, கண்ணியமான தன்னிகரற்ற தலைவனால் நிச்சயம் தேவையான போராளிகளை உருவாக்கமுடியும்.


நான் சொல்வதோ, என் சிந்தனைகளோ விவரமறியாத, பக்குவமடையாத வாதங்களாகத் தோன்றலாம். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஒரு சராசரி தமிழனாகவே என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏதாவது நல்லது நடந்துவிடாதா? என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்புகள் இவை.  என் முதல் பதிவில் நான் சொன்னது போலவே... தம்பியின் விஷயத்தில் நான் மூளைக்காரனாக இருக்க விரும்பவில்லை.

 கர்த்தரை நம்புகிறவர்கள், "அவர் வருகை சமீபமாயிருக்கிறது" என்று காலங்காலமாக நம்புவது சரியென்றால்...
கண்ணனை நம்புகிறவர்கள், "கலியுகக் கல்கி அவதாரத்தை" யுகம்யுகமாக நம்புவது சரியென்றால்... 
இந்த நூற்றாண்டிலும் ஒடுக்கப்படும் மக்களின் தலைவனாக 'தம்பி' பிரபாகரன் மீண்டு(ம்) வருவார் என்று நான் நம்புவதும் சரியே.

 
வெட்டவெளியே வீடாய் ஆகலாம்
பட்டினி எங்கள் உணவாய் போகலாம்
விடுதலை மூச்சு புயலினும் வலிதே
கொடுமையின் வீழ்ச்சி ஒரு நொடிப்பொழுதே.
ஈழச் சிறைமதில் இடியத் திரிப்போம்
நீலச் சிறகுகள் நிமிர விரிப்போம்.
- காசி ஆனந்தன்.

"நீங்கள் பூக்களை வெட்டிப் பறித்திருக்கலாம். 
ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது"



~#~

7 comments:

Yaathoramani.blogspot.com said...

சொல்லாததும் சொல்லக்கூடாததும் எனத் தலைப்பிட்டு
சொல்லவேண்டியதை மிகத் தெளிவாகச்சொல்லிப்போகிறீர்கள்
முத்தாய்ப்பாக கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள்
உணர்வுகளை சிலிர்க்கச் செய்து போகிறது
உணர்வூட்டும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

மிக மிக அழகான படங்கள்.உங்கள் ஆதங்கத்தோடு கூடிய நம்பிக்கையோடுதான் உலகத் தமிழர்கள் எல்லோருமே.அவர் காட்டிய வழியில்தான் எத்தனை நூற்றாண்டுகளானாலும் பயணிப்போம்.இது மட்டும் உறுதி !

தமிழ்த்தோட்டம் said...

உங்கள் ஆதங்கங்கள் பதிவில் தெரிகிறது... ரெம்ப நல்ல பதிவு பாராட்டுக்கள் சிசு

சிசு said...

@Ramani
உங்கள் வாழ்த்துகள் எனக்கு உற்சாகமூட்டுகிறது.. மிகவும் நன்றி ரமணி.

சிசு said...

@சி.பி.செந்தில்குமார்
நன்றி சிபி.

சிசு said...

@ஹேமா
நன்றி ஹேமா.. உலகில் அஹிம்சை தோற்றதாக ஒரு இடம் உண்டென்றால் அது இலங்கைதான். அங்கே பட்டயத்திற்கு பட்டயம் தான் சரி. நிச்சயம் வெல்வோம்.

சிசு said...

@தமிழ்த்தோட்டம்
நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்)