Saturday, 26 March 2011

நொடிகளும் நிமிடங்களும்



பறவையின் இறகில்
பாலொளியை நனைத்து
மேனியெங்கும் தொட்டுத்தடவிய
சலனத்தை உணரும்
பருவத்தின் பெளர்ணமிகளில்...
தூக்கத்தைத் தொலைத்து
திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்.

உண்மை உறைத்து,
புன்னகையோடு நிலவை நோக்குகையில்
அங்கே -
பூக்களின் முகவரியோடு
சில முகங்களைக் கண்டிருக்கிறேன்.
ஒருமுறையல்ல... இருமுறையல்ல...
ஒவ்வொருமுறையும்
முழுநிலா நாளில் -
இது தொடர்ந்துகொண்டு தானிருந்தது.

கடிவாளமிடமுடியாக் காலக்குதிரையின்
குளம்படிச்சத்தம்
இப்போதும் காதில் இரைச்சலாய்...

வாரங்களும், வருடங்களுமாய்க் கரைந்த
வாழ்க்கையின் பயணத்தில்
என்னுடன் நீ வந்தபின்னரும்-
சில பின்னிரவுகளில்
பறவையிறகின் சீண்டலை உணர்ந்திருக்கிறேன்.

அப்போதும் தூக்கம் தொலைத்து
என்தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது,
இம்முறை உன்முகத்தை பௌர்ணமியில் தேடி...!

நிலவே பொறுமையிழந்த
ஒரு பின்னொருநாள் பின்னிரவில்
என் காதோரம் வந்து
கிசுகிசுத்துவிட்டுப் போனது அது.
என்னில் அவள்முகம் தேடாதே.
நான் முகம் பார்ப்பதே அவளில்தானென்று.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த
உன் நுதலில் ஒளிர்ந்தது மூன்றாம்பிறை.

இரைச்சல் இன்னிசையானது
அப்போதிருந்துதான்...!
இனி வாழ்க்கைப்பயணம்
நொடிகளும், நிமிடங்களுமாய்க் கரையும்.

3 comments:

செய்தாலி said...

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் அழகு
கவிதை மிக அருமை சேக்காளி

சிசு said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சேக்காளி...

செல்வன் said...

அருமையான சிந்தனை... நன்றி