Friday, 29 October, 2010

தோழியர் நினைவுகள்...


பள்ளியில், கல்லூரியில், பணிபுரியும் இடத்தில்... அபூர்வமாய் சில தோழிகள் எனக்கு வாய்த்ததுண்டு. நம் சமூக அமைப்பின் கட்டாயத்தால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எங்களிடையே நிகழ்ந்தே தீரவேண்டிய இடைவெளி நிகழ்ந்திருக்கிறது. வெற்றிடத்தை நிரப்ப அவ்வப்போது புதிய தோழிகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இருப்பினும், பழைய தோழிகளின் நினைவுகள் இப்போதும் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு தருணத்தில், என் மனதில் தோன்றியதுதான் கீழுள்ளவை. இது எப்போதும் நினைவில் இருக்கும், இப்போதும் தொடர்பில் இருக்கும்... என் தோழிகளுக்கு சமர்ப்பணம்...


ஒரு சிறு புன்னகை...
தயங்கிய வார்த்தைகள்...
மெல்லிய பெயர் அறிமுகங்கள்...
அலுவலக முதல்நாள்.

தெரிந்ததை சொல்லிகொடுத்தாள்.
தவறுகளை சுட்டிகாட்டினாள்.
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்.

உணவு இடைவெளி...
பரிமாறப் பட்டது -
கொண்டுவந்த உணவும்,
உறவுக் கதைகளும்.

அறிவுரைகள் சொல்வாள்.
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில் என்னையே வியக்கவைத்தாள்.
அவசர தருணங்களில் உதவிக்கை நீட்டினாள்.

தோள்பிடித்து உரையாடுவாள்.
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்.
சில கருத்துகளை விவாதித்துக் கொள்வாள்.
சிறிதாய் சண்டையிடுவாள்.

தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்.
வாழ்த்துச் சொல்லி பிறந்தநாளை நினைவூட்டுவாள்.
பண்டிகை தினங்களில் கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்.
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள் பரிசுகளுடன் திரும்புவாள்.

பிள்ளைப்பேறுக்காக அலுவலகம் விட்டு,
கண்ணீரில் விடைபெற்று,
சில மாதப்போக்கில் மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள் -
தன்பிள்ளையின் புகைப்படத்தை.

காலம் கடந்தது.
நிறையப்பேர் வந்துபோனார்கள்.
இன்றுவரையிலும் அமையவில்லை.
உன்னைப்போல் ஒருதோழி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் தோழி விடை பெறுகிறாள்...
வாழ்வின் வேறு தளத்திற்கு செல்கிறாள்...
சிரித்து அனுப்பிவிட்டேன்.
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, 27 October, 2010

கல்யாணமாம் கல்யாணம்...கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப்படின்னு பொண்டாட்டி முன்னாடி சொல்லிட்டு, அவங்க கிச்சன் உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு, தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காதடா மச்சின்னு கெஞ்சற நண்பன்....

அடுத்த வருஷம் ஜூன் -க்குள்ள கல்யாணத்த முடிச்சிரணும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது..... - என் அம்மா..

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்.. வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்ததுகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...மரியாதையா காச சேர்த்து வை... - என் அப்பா..

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பண்றேன்னு.... சொல்லிட்டு ... மனசுக்குள்ள முணுமுணுக்குற என் தங்கச்சி...

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....

25-29 வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி, அதிகமா பதட்டபடுத்தி, கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்தை... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....?

முதல் 3 மாதம்...

திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்கற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....

பீரோ-க்குள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுக்கிக்குவாங்க...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் பிரஷும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க...

ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிச்சிருக்கேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)

அப்பறம் உங்கள அடிமையாக்குறதுக்கு உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க...)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க....

அவங்க வாங்கற நெய்ல் பாலிஷ் -க்கும், பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சிணுங்கலுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு "வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்கு"ன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்கற பேர்ல வந்து போற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்.. எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க 'நீ'- யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும்...அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்... நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க ???.....


Monday, 4 October, 2010

ரணமாகும் விநாடிகள்


மௌனங்களின் பார்வைகளிலும்
புரிதல்கள் படிந்திருக்கும்.
வெறுமையின் கரங்களில்
நகக்கீறல்கள் மிச்சமிருக்கும்.
ஊமை நாக்குகளில் எல்லாம்
சுவையின் சுவடுகள் தொலைந்திருக்கும்.

அனுபவம், பக்குவம்...
எல்லாம் கடந்தபின்,
பணத்தின் தேவைக்காக,
போலியாய் சிரித்திருக்கையில் -
நகரும் விநாடிகள்
எல்லோருக்கும் ரணமாயிருக்கும்.