Friday, 10 December, 2010

அவன்-அவள்-அது


அவள்: உனக்கு நட்பில் நம்பிக்கை இருக்கா?

அவன்: இருக்கு...

அவள்: ஆனா, சில பேர் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல் தான் இருக்க முடியும்னு நம்பறாங்களே...

அவன்: முட்டாள்தனம். ஒரு பெண் எனக்கு தோழியா இருந்திருக்கா. எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லையே...

அவள்: ஒருவேளை, உனக்கு அவ மேல காதல் வந்து, அதை நீ கவனிக்காம இருந்திருக்கலாம். இல்லையா?

அவன்: இல்ல...

அவள்: அப்படின்னா, அவளுக்கு உன்மேல காதல் வந்திருக்கலாம்.

அவன்: அதுவும் இல்ல.

அவள்: ஒரு உண்மையான தோழி முழு வாழ்க்கைக்கும் உன் கூடவே இருக்கணும்னு விரும்பறியா?

அவன்: என் கனவு அதுதான்.

அவள்: நானும் அப்படித்தான் ஆசைப்படுறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, 8 December, 2010

புதிய பூவின் புன்னகை...!


நேராகச் சென்ற வாழ்க்கை இப்போது சில இடங்களில் நெளிவதை உணர முடிகிறது.
சீரான தடம் அமைய அதன் போக்கிலேயே வளைந்து திரும்புகிறேன் நானும்.
வாழ்க்கை என்னை என் விருப்பத்திற்கெதிராக எங்கெங்கோ இழுத்துக்கொண்டு திரிகிறது.
சில பொழுதுக்குள் வாடிவிடும் பொய்களாலான தோரணங்களும்,
என்றும் நிலைத்திருக்கும் யதார்த்தங்களால் எழுப்பப்படும் நிஜங்களும்
எப்போதும் தீவீரமான சமரில் லயித்திருக்கின்றன.

ஓங்கியடிக்கும் அலைகளுக்கு பாவனை காட்ட இயலாமல்
கரைகளில் பதிந்திருக்கும் பெருங்கற்களைப் போல -
ஊழிப் பெருவாழ்வின் சில நிகழ்வுகளை ஊமையாய் மென்று கொண்டிருக்கிறது இதயம்.
வந்துவந்து கரை தொட்டுச் செல்லும் நீரில்,
வரப்பிடிக்காமல் நழுவிச் செல்லும் மீன்களைப் போல...
சில நினைவுகள் ஞாபக அடுக்குகளிலிருந்து லாவகமாய் நீங்கிச் செல்கின்றன.

ஆசையாய் துரத்திப் பிடித்த பட்டாம்பூச்சியை விட்ட பின்பும்,
விரல்களில் பிசுபிசுக்கும் வண்ணங்களைப் போல -
உள்ளத்தின் ஓரத்தில் இன்னும் குற்றுயிரோடு இருக்கிறது காதலுக்கான ஏக்கம்.
காதலில் நினைவு தப்பி வரும் கனவில் ஒருபோதும் எனக்கான நிஜமுகம் வந்ததில்லை.

தீர்க்கமான முடிவுக்காக, இமை கவிழ்த்து யோசிக்கிறேன்...
எனக்கான முகம் எதுவென? பல முகங்கள் வருகின்றன வரிசையாய்...
சிரித்தபடி, சிநேகித்தபடி, கருணை சிந்த, காருண்யம் பொங்க,
சாந்தமாய், சந்தோஷமாய்... ஒன்றாய், இரண்டாய், பலவாய்...
கடைசிவரை தெரியவில்லை எனக்கான இணை எதுவென!

நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் நெடுந்தொலைவுக் கனவுகள் தான்.
வாழ்க்கை சொல்லித்தரும் அனுபவங்களெல்லாம் அற்புதங்கள் தாம்.

என் எண்ணங்களுக்கு எதிரான வாழ்க்கை எதிலும் நிலை கொள்ளாமல்
நாளை என்ற நம்பிக்கையினூடே
நகர்ந்து கொண்டே இருக்கிறது!
வாழ்க்கை தன்னைப் புரியவைக்க சில தருணங்களையும்,
சில நிகழ்வுகளையும் தன வசப்படுத்திக் கொள்கிறது.

நேர்கோட்டுப் பயணம் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமில்லை
என்னும் எதார்த்தம் முகத்தில் அறைகிறது.
தெளிந்த மனதோடு சென்ற வாரம் பதியமிட்ட ரோஜாச செடியில்,
இந்த வாரம் சில பூக்களின் புன்னகை.
காதலைத் தாண்டிய வாழ்க்கையின் தேடலுக்கு
என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இதுவென புரிகிறது.


Friday, 29 October, 2010

தோழியர் நினைவுகள்...


பள்ளியில், கல்லூரியில், பணிபுரியும் இடத்தில்... அபூர்வமாய் சில தோழிகள் எனக்கு வாய்த்ததுண்டு. நம் சமூக அமைப்பின் கட்டாயத்தால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எங்களிடையே நிகழ்ந்தே தீரவேண்டிய இடைவெளி நிகழ்ந்திருக்கிறது. வெற்றிடத்தை நிரப்ப அவ்வப்போது புதிய தோழிகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இருப்பினும், பழைய தோழிகளின் நினைவுகள் இப்போதும் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு தருணத்தில், என் மனதில் தோன்றியதுதான் கீழுள்ளவை. இது எப்போதும் நினைவில் இருக்கும், இப்போதும் தொடர்பில் இருக்கும்... என் தோழிகளுக்கு சமர்ப்பணம்...


ஒரு சிறு புன்னகை...
தயங்கிய வார்த்தைகள்...
மெல்லிய பெயர் அறிமுகங்கள்...
அலுவலக முதல்நாள்.

தெரிந்ததை சொல்லிகொடுத்தாள்.
தவறுகளை சுட்டிகாட்டினாள்.
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்.

உணவு இடைவெளி...
பரிமாறப் பட்டது -
கொண்டுவந்த உணவும்,
உறவுக் கதைகளும்.

அறிவுரைகள் சொல்வாள்.
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில் என்னையே வியக்கவைத்தாள்.
அவசர தருணங்களில் உதவிக்கை நீட்டினாள்.

தோள்பிடித்து உரையாடுவாள்.
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்.
சில கருத்துகளை விவாதித்துக் கொள்வாள்.
சிறிதாய் சண்டையிடுவாள்.

தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்.
வாழ்த்துச் சொல்லி பிறந்தநாளை நினைவூட்டுவாள்.
பண்டிகை தினங்களில் கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்.
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள் பரிசுகளுடன் திரும்புவாள்.

பிள்ளைப்பேறுக்காக அலுவலகம் விட்டு,
கண்ணீரில் விடைபெற்று,
சில மாதப்போக்கில் மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள் -
தன்பிள்ளையின் புகைப்படத்தை.

காலம் கடந்தது.
நிறையப்பேர் வந்துபோனார்கள்.
இன்றுவரையிலும் அமையவில்லை.
உன்னைப்போல் ஒருதோழி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் தோழி விடை பெறுகிறாள்...
வாழ்வின் வேறு தளத்திற்கு செல்கிறாள்...
சிரித்து அனுப்பிவிட்டேன்.
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, 27 October, 2010

கல்யாணமாம் கல்யாணம்...கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப்படின்னு பொண்டாட்டி முன்னாடி சொல்லிட்டு, அவங்க கிச்சன் உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு, தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காதடா மச்சின்னு கெஞ்சற நண்பன்....

அடுத்த வருஷம் ஜூன் -க்குள்ள கல்யாணத்த முடிச்சிரணும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது..... - என் அம்மா..

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்.. வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்ததுகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...மரியாதையா காச சேர்த்து வை... - என் அப்பா..

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பண்றேன்னு.... சொல்லிட்டு ... மனசுக்குள்ள முணுமுணுக்குற என் தங்கச்சி...

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....

25-29 வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி, அதிகமா பதட்டபடுத்தி, கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்தை... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....?

முதல் 3 மாதம்...

திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்கற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....

பீரோ-க்குள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுக்கிக்குவாங்க...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் பிரஷும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க...

ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிச்சிருக்கேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)

அப்பறம் உங்கள அடிமையாக்குறதுக்கு உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க...)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க....

அவங்க வாங்கற நெய்ல் பாலிஷ் -க்கும், பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சிணுங்கலுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு "வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்கு"ன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்கற பேர்ல வந்து போற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்.. எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க 'நீ'- யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும்...அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்... நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க ???.....


Monday, 4 October, 2010

ரணமாகும் விநாடிகள்


மௌனங்களின் பார்வைகளிலும்
புரிதல்கள் படிந்திருக்கும்.
வெறுமையின் கரங்களில்
நகக்கீறல்கள் மிச்சமிருக்கும்.
ஊமை நாக்குகளில் எல்லாம்
சுவையின் சுவடுகள் தொலைந்திருக்கும்.

அனுபவம், பக்குவம்...
எல்லாம் கடந்தபின்,
பணத்தின் தேவைக்காக,
போலியாய் சிரித்திருக்கையில் -
நகரும் விநாடிகள்
எல்லோருக்கும் ரணமாயிருக்கும்.Sunday, 26 September, 2010

பிறழ்நிலை குழப்பங்கள்


புலன்களற்று , உணர்வுகளற்று,
எதுவுமே இல்லையென்பதாய்...


ஒரு நீண்ட மௌனமாய்...

விடியலின் வெட்ட வெளியாய்...

ஒரு கவிதைக்காக காத்திருக்கும்
வெள்ளைக் காகிதமாய்...

பின்-
இவை எதுவுமில்லாத பாழ்வெளியாய்...

மாறி மாறிப் பிறழ்கிறது மனது.

பல குழப்பங்களுக்குப் பின் தெளிவாயிற்று...
நீயில்லையென...!
Saturday, 25 September, 2010

கடவுளின் மறுபக்கம்


தான் நம்பும் கடவுளுக்காக
எதையும் இழக்க தயாராய் இருக்கிறான் மனிதன்.
தன்னை நம்பும் மனிதனுக்காக
ஒரு மயிரையும் இழக்கத்
தயாராயில்லை கடவுள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எங்களைப் படைத்ததாக
உன்னை நம்புகிறோம் பிரம்மனே!
உன்னைப் படைத்ததாக
நீ யாரை நம்புகிறாய்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு பேருந்து பயணத்தில்
என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் கடவுள்.
என்னிடமிருந்த
அவரது பிம்பங்களையெல்லாம்
பொடிப் பொடியாக்கும்படி...

இன்னொரு நாள்...
.
ஒரு பிச்சைக்காரனின்
வறட்சியான சில்லறைத்தட்டில்
திருடிக்கொண்டோடுபவனின்
புன்னகையில்
கடவுளின் சாயல் ஒளிந்திருந்ததனை
நான் கண்டேன்..

பிறகொரு நாள் மாலையில்
என் நிலைக்கண்ணாடியிலும்
அவரைப் பார்க்கநேர்ந்தது..

எல்லோரும்
நினைப்பது போலில்லை கடவுள்
அப்படியும் இருக்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, 22 July, 2010

என்ன செய்யப் போகிறாய்?


கடல்நுரையில் பிறந்தவளாம் காதல் கடவுள் வீனஸ்!
நீயோ கடல்நுரையாகவே பிறந்திருக்கிறாய்!

உன்னோடு நடக்கும்போது மட்டும் -
கால்கள் வலிப்பதே இல்லை.
கண்கள் நேர்கோட்டில் செல்கின்றன.
உதடுகள் ஊமையாகின்றன.
காதல் எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் -
காதலியே நான் உன்னிடமிருந்து கற்றவைதான்.

வார்த்தைகளுக்கு திடீர் பஞ்சம்.
உன்னை வர்ணிக்கத் துவங்குகிறேன்.
வார்த்தைகள் மீண்டும் வட்டமிடுகின்றன.
புதிய தமிழ் வார்த்தைகளுக்கு என்னை அறிமுகம் செய்கிறாய்!

கருவானது நம் காதல்.
உருவானது ஒரு கவிதை.

குவிந்து குவிந்து விரிகிற உன் வார்த்தைகள்...
மலர்ந்து மலர்ந்து முறிகிற உன் இதழ்கள்...
விழுந்து விழுந்து நிமிர்கிற உன் நாணம்...
அறுந்து அறுந்து கோர்க்கிற உன் கூந்தல்...
ஒவ்வொரு கோணத்திலும் கவிதைகளால் உன்னை -
செதுக்கியே தீர்வதென்று சபதமிட்டுவிட்டது இதயம்.

நீ சிக்கெடுத்த மனசு மறுபடியும் -
உன்னாலேயே சிக்கிவிடுகிற நுட்பத்தை
கவிதைகள் சொல்லித் தருகின்றன.
ஒவ்வொரு கவிதையிலும்...
நீ உள்ளே வந்து என்னை முத்தமிட்டுத் திரும்புகிறாய் -
ஒரு தேவதையைப் போல...

விளக்கில் முட்டிமுட்டி உயிர்விடும் ஈசல்களைப் போல,
உன்னைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு உதிர்ந்து கிடக்கின்றன
என் வார்த்தைகள்.

வாழ்க்கை என்னை ஒரு இயந்திரத்தைப் போல நடத்துகிறது.
காதல் என்னை ஒரு குழந்தையைப் போல கைபிடித்து கூட்டிச் செல்கிறது.

சிலரை காதல் வழிமறிக்கும்.
சிலரை காதல் வழிநடத்தும.

என்னை என்ன செய்யும்?சில குழப்பங்கள்


எழுதுகோல் எடுக்கும் எல்லோருமே
பிள்ளையார் சுழியில்தான்
பெரும்பாலும் தொடங்குகிறார்கள்.
நான் மட்டும் உன் பெயரில்!

புத்தகக் கண்காட்சி...
பிடித்த நூல் எதுவெனக் கேட்கிறாய்?
எப்படி சொல்வேன்?
நேற்றைய சந்திப்பில், உனக்கு தெரியாமல்
உன் துப்பட்டாவிலிருந்து உருவிய
வெளிர் நீல நூல்தான் என்பதை!

எல்லோரும் கோலம் போட்டு பூவை வைப்பார்கள்.
உன் வீட்டில் மட்டும் தான் -
கோலம் போடுவதற்கென்றே
ஒரு பூவை வைத்திருக்கிறார்கள்.

உன் தங்கையோடு உன்னை பார்த்தேன்...
பவுர்ணமியும் பிறையும் அருகருகே?

(ஆ ஆஆஆ... ஒண்ணுமில்லீங்க. காதை திருகினா கத்தாம என்ன பண்ணுவாங்க!)Thursday, 15 July, 2010

கண்ணீர் விடும் கடவுள்கள்


வீடெங்கிலும் உறவினர்கள்.
வீதியெங்கினும் நண்பர்கள்.
பெண்கள் - தொடர்களை தொடர முடியாமல் அழுது வைக்க...
ஆண்கள் - அழுகிப்போன அரசியலை ஆவேசமாய்ப் பேச...
சிரித்துக்கொண்டே கையசைத்து -
மேல்நோக்கி போகின்றேன் நான்.

அதிசயம்!
தேவதூதன் எனக்கு சொர்க்கவாசல் திறக்கிறான்!
அவ்வளவு நல்லவனா நான்? கேட்ட கேள்விக்கு,
"இல்லையில்லை...
சொர்க்கத்திற்கு வருபவர்கள் குறைந்து போனதில்,
வரையறைகளும் குறைக்கப்பட்டு விட்டன."
சத்தமாய் சிரித்து விட்டேன் நான்.

உள்ளே நுழைந்தால்,
வள்ளுவனும், அவ்வையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
சத்தியமாய் புரியவில்லை. சுத்தத் தமிழாய் இருக்கும்!

சொர்க்கம் 'வெறிச்'சென கிடக்க -
தேவதூதனிடம்,
எங்கே சிவனும், மற்றையோரும்? என்றதற்கு,
இப்போதே காண வேண்டுமா? -
இரவு வரை பொறுப்பாயா? என்றான்.

ஐயோ! மேலோகத்தில் இரவும், பகலும் சிலகோடி ஆண்டல்லவா?
இப்போதே! இப்போதே! - நான்.
கொஞ்சநேரம் நரகத்திலிருக்க ஆசை போலும் - தூதன்.

என்ன? சிவனும், திருமாலும் நரகத்திலா? ஏன்? - நான்.
அவர்களையே கேட்டுக் கொள்.
தள்ளிவிட்டான் தேவதூதன் பாதாளத்தில்.

சுற்றிலும் தீயெரிய,
பேய்களும், பூத கணங்களும் தின்னத் துரத்த,
ஓடியோடிக் களைத்து ஓரடியும் இனி நகரமுடியாதென்று
ஓரிடத்தில் நின்றால்...

அதோ சவுக்கடி வாங்குவது யார்? - சிவனா...
அதோ எண்ணைச்சட்டியில் வெந்துகிடப்பது யார்? திருமாலா...
அதோ சுற்றிச் சுற்றி செக்கிழுப்பது யார்? இயேசுவா...
அதோ நரமாமிசம் சமைப்பது யார்? நபிகளா...

என்னப்பா இதெல்லாம்? - சிவனிடம் கேட்டதற்கு...
சிவன், திருமால், இயேசு, நபிகள்
நால்வரும் கூட்டாய்ச் சொன்னது -

"மனிதனின் பாவமேற்று பாவமேற்று
பகுதிநேரம் வெந்து தவிக்கிறோம்.
விரைவில் முழுநேரமாகும் போல..."
பொலபொலவென கண்ணீர் விட்டனர் கடவுள்கள்.

நண்பர்களே...!
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.கவிதையின் கரு - படித்ததில் பிடித்தது.

Wednesday, 14 July, 2010

வெற்றுத் தாளாய்...


நம்பவேயில்லை யாரும் முதலில்...!

அலட்சியம் காட்டியவர்கள் எல்லாம்
புருவம் உயர்த்தி ஆச்சரியம் காட்டினார்கள்.

எப்படி இப்படி என்று சரித்திரம் கேட்டு,
நட்பு விருந்து வைத்தார்கள் நண்பர்கள்.

இவனுக்கேன் இந்த வேலை?
இதையும் கேட்டவர்கள் உண்டு.
பத்திரிக்கையில் (பதிவில்) வெளிவந்த
என் முதல் கவிதைக்கான விளைவுகள்தான் இவை.

இதற்கெல்லாம் காரணமான நீ படித்திருப்பாயா -
அந்த கவிதையை?
வெற்றுத் தாளாய் படபடக்கிறது மனசு.

Tuesday, 13 July, 2010

காதல் மழை


மழை வருவது மயிலுக்கு தெரியுமாம்.
காதல் மழை வருகிறதே! மனசுக்கு தெரியுமா?

உன் கண்கள் சொன்ன வானிலை அறிவிப்பு படி,
இனி எனக்குள் இடி, மின்னலுடன் காதல் மழைதான் போ!

மழை வந்தவுடன் -
கப்பல் செய்ய துவங்குவர் சிறுவர்கள்.
காதல் செய்ய தொடங்குகிறேன் நான்.

நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.

இரண்டு இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது காதல் மழை.

ஜன்னல் கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன.

கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?

மழையை ரசிப்பதாய் நினைக்கிறாய் நீ.
உன்னை ரசிப்பதற்காகவே உருகி வழிகிறது மழை.

யாரோ கூப்பிட்டதுபோல்...
தரை வந்த மழை நீர், தலைதெறிக்க ஓடும்.
கண்ணடித்துக் கூப்பிட்ட கடல் நீதானா?

எங்கே?
ஆகாயத்தைப் பார்த்து கைதட்டு.
ஆட்டோ மாதிரி ஆலங்கட்டி மழை வரட்டும்.

கூந்தல் முகில்... புன்னகை மின்னல்...
வெட்க வானவில்... காதல் மழை.

மண் வாசம் வருகிறது.
ஓ! மழை வரப் போகிறது.

மழை வரும்போது வெளியே வர சிணுங்குவாய்.
நீ வெளியே வரும்வரை சிணுங்கிக் கொண்டுதான் இருக்கும் மழை.

அடிக்கும் மழையில் வானத்தில் இருந்து வழுக்கி வந்தது நிலா...
பேருந்து நிறுத்தத்தில் பரிதவிப்போடு நீ!

மழைக்கு ஒதுங்கி இருப்பது நீ என்று தெரிந்தால்,
மழையே கொஞ்சநேரம் ஒதுங்கி நின்றிருக்குமே!

மழை உன்னை தீண்டும்போது என்ன நினைக்கும்?
"ஆஹா! பூமி எவ்வளவு மொழு மொழுவென்று இருக்கிறது" என்றா?

நீயே குடை பிடித்தால் பூமிக்கு வந்த மழை,
ஜென்ம சாபல்யம் பெறுமா?

சொல்லிவைத்த மாதிரி,
என்னை பற்ற வைப்பதற்காகவே நீ நனைவாய் போலும்.
நனையும்போது கூடுதல் அழகாகின்றன...
ஈரமான நந்தவனங்களும், இறுக்கமான சுடிதார்களும்.

மழைநீர் குழப்பிய மணலில் உனது கால்தடம்...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை இதுதானோ?

இன்னும் கொஞ்சநேரம் மழையில் நின்றால்,
ஜலதோஷம் பிடித்துவிடும். மழைக்கு...!

ஓட்டுத் திண்ணையில் சொட்டும் மழைத் தண்ணீர் போல் என்னுள் நீ.
அதை பிடித்து வைக்க -
குடம் போதாது. கடல் கொண்டு வா!

விண்மீன்களை எண்ணியபடி
விடிய விடிய நீயும், நானும்
மழையை ரசித்த நாளோடு முடியட்டும் பூமி.

மழை வரவேண்டுமென்று
கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பவர்கள்...
உனக்கும் எனக்கும் அதைச் செய்தாலென்ன...?

மழை வருகிறதோ, இல்லையோ?
மழலை வரும்!

நான் யார்?


ஆசனப் போரில் சகோதரர்களையே வென்றெடுத்த விந்தணுவா?
மூடிய விரல்களுக்குள் சந்தோஷங்களை அள்ளி வந்த தூதுவனா?

எட்டுப்பக்கம் காற்றாலும்,
எல்லாப் பக்கமும் அன்பாலும் சூழப்பட்ட உலகின் பாரமா?
உள்ளம் முழுதும் வெள்ளையாய்,
தன்னை மறந்து என்னை நினைக்கும் குடும்பத்தின் நற்பேறா?

கால்களின் எண்ணிக்கையால் மட்டும் -
விலங்கிலிருந்து வித்தியாசப்பட்டவனா?
என்னையே என்னுள் புதைத்துக் கொண்டவனா?
பூக்களில் மோதியே உடைந்து போனவனா?
ஒருகோடிச் சிதறலாய் உடைந்து விழும் அருவியா?

வரம் வரும் நேரம் தவம் கலைந்து ஓடும் தபசியா?
தன கசாப்புக்கடையை தானே தேர்ந்தெடுத்தவனா?
இரை இதுவென்று இலக்கில்லாமல் பசியுடன் பறக்கும் பருந்தா?
வரைந்து வாழ்ந்த வட்டத்திற்குள் அறியாமல் சிக்குண்ட எறும்பா?

தங்க சிறைச்சாலையில் ஞாபக மெழுகுவர்த்தியோடு
கவிதைகளை சுவாசிப்பவனா?
காதலியின் கண்ணீருக்கு அஞ்சி, மன்றங்களில் ஊமையாகும்
இந்தியக் காதலனா?

நான் யார்? அல்லது யார் நான்?
எது நான்? அல்லது எதுவாகப் போகிறவன் நான்?

மூடிய இமைகளுக்குள்,
திறந்த விழிகளில் தெரியுமா அது?

Monday, 12 July, 2010

குரங்காட்டியின் பிரம்பு


நித்தம் நித்தம் அவளைப் பார்க்கிறேன்
நான் புத்தம் புதிதாய் பூக்கிறேன்
என் சித்தத்தில் நிசப்தமாய் விழுந்தவளை
ரத்தத்தில் அணுக்களாய் வளர்கின்றேன்.

அவளைக் காணும்போதெல்லாம்
சொல் - என்கிறது ஒரு மனம்
நில் - என்கிறது மறு மனம்.

சொல் என்றதற்காக சொல்லவும்,
நில் என்றதற்காக நிற்கவும்
இரண்டு மனம் வாய்த்திருக்கிறது எனக்கு.

சொல்லும்போது நில்லென்ற மனமும்,
செல்லும்போது சொல்லென்ற நினைவும்
குரங்காட்டியின் பிரம்பாய் -
என்னை கரணமடிக்க வைக்கிறது.

அவள் மீதான விருப்புக்கும்,
என் மீதான வெறுப்புக்கும்
இடையே -

நாளொரு வண்ணமாய்
அவளை எண்ணியிருக்கிறேன்
பொழுதொரு எண்ணமாய்
நாட்களைத் தள்ளியிருக்கிறேன்.

சுடும் எனது தெரிந்தே
இதயத்தில் நெருப்பை வைத்திருக்கிறேன்.
உறுத்தும் என்பது புரிந்தே
கண்ணின் துரும்பைத தைத்திருக்கிறேன்.

எழுதிக் கொள்ளுங்கள்.
வெகு சீக்கிரத்தில் நானொரு கொலைகாரன்.
பதற வேண்டாம்.

என்னால் கொலையாகப் போவது...
என் இரண்டு மனதில் ஒன்று தான்.
என் உணர்வுக் குவியலின் ஒரு பகுதிதான்.

சரி.
முன்பை விட ஒன்று அதிகம்.

அவளுக்காக எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கையும்...
அவள் காதலர்களின் எண்ணிக்கையும்.

Saturday, 10 July, 2010

...ச்சே...


நானா...சிகரெட்டா...
வாதங்களுக்குப் பிறகு -
நாம் சந்தித்துக் கொள்ளும் தனிமையில்
என் இதழ் நிறம் சோதித்து,
விரலிடுக்கை நுகர்ந்து,
சட்டையை பைமறி செய்து,
சிகரெட் துகள் சேகரித்து சினங்கொள்ள...

நண்பனின் திருமணம்,
அலுவலக சந்திப்புகள்,
வார இறுதிக் கொண்டாட்டங்கள்...
கொஞ்சமாய் என்னுள் போதை நிரப்பும் வேளைகளில் -
கலங்கிய கண்களுடன் ஓரிரு வாரங்கள் நீ ஊடல் கொள்ள...

கைகோர்த்து நடக்கையில்
எதிர்வரும் பெண்ணை ஓரப்பார்வை பார்க்கும் போது
கைகளில் காதல் வழிய வழிய
காதைத் திருகி, கன்னம் கிள்ள...

உன் கோபத்திற்கு பயந்து,
உன் ஊடலுக்கு அஞ்சி,
உன் கிள்ளலுக்கு மருகி...

இதுதான் கடைசி.
இனிமேல் தொடமாட்டேன்...
இனிமேல் பருகமாட்டேன்...
இனிமேல் பார்க்கமாட்டேன்...
என்று -
உன்னை கெஞ்சி... கொஞ்சி...

...ச்சே...
என்ன பையன் நான்?
நீ வந்து திருத்த -
எந்த பழக்கமும் இல்லையே என்னிடம்!

பி.கு:
- இது படித்ததில் ரசித்ததும், பிடித்ததும்...


என்ன கொடுமை சரவணன் இது???  • வெளி சந்தையில் அரிசியின் விலை கிலோ 34 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
  • பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
  • வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
  • PIZZA வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
  • ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
  • நாம் அணியும் உள்ளாடைகளும், வெளி(!) ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
  • நாம் குடிக்கும் லெமன் ஜூஸ் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது . பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எலுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
  • மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
  • கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
  • கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை. அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

என்ன கொடுமை சரவணன் இது???

Friday, 9 July, 2010

நியாயமில்லை


நாளையும்
நீ சிரித்து விட்டு சும்மா இருந்துவிடுவாய்,
நானும் ஏதோ இருப்பேன்!

உன் விழிகளில் ஏந்தியிருப்பது
விடையா, வினாவா?

புதிர் போடும் பூக்களுக்கு
தடை போட ஆளில்லையா?

இது என்ன வெட்கம்?
ஊரெல்லாம் சொல்லும்போது
தரை பார்த்தா வாசித்தாய்
காதலை?

நீ வெட்கத்தை விடுவதாயில்லை,
நானும் உன்னை விடுவதாயில்லை!

உனக்காக நானும்
எனக்காக நீயும் காத்திருந்தோம்
காதல் வந்த பிறகும் பேசாமல்.
மழைக்காக காத்திருந்தவர்கள்
குடை பிடிப்பதில் நியாயமில்லை.

கெஞ்சிக் கேட்டாகிவிட்டது
காதலை ஒரு வரியில் சொல்லலாமே,
நீயேன் இரண்டு வரியில் சிரிக்கிறாய்?எங்கு போவேன்?


இந்த இரவையும்
உன் நினைவுகள் விழுங்கி விட்டன.

புத்தகம் திறந்தபோது
என்னை வாசிக்கிறது உனது கண்கள்.

வெளியில் ஓடினேன்
வழியெங்கும் உன் கொலுசு மணிகள்.

பெயர் தெரியாத விண்மீன்கள்
உன் பெயரைச் சொல்லி கண்சிமிட்டுகின்றன;

நான் என்ன செய்தேன்?

பேராசை, பெருங்கனவு
பெண்களுக்கு மட்டும்தானா?

காதல் சதுரங்கத்திலும்
ராஜாக்கள் ஒரு கட்டந்தான்
நகர முடியுமா?

என் மனதிற்கு கதவு கிடையாது;

நீ பூட்டு கொடுத்தால்
நான் கதவுக்கு எங்கு போவேன்?

பகைவனுக்கருள்வாய் என்றான் பாரதி.
நீ
நேசிப்பவனையே
இவ்வளவு இம்சைகள் செய்கிறாய்.
உனது பகைவன் பாவம்!நான் ஒரு யாசகன்


நான் ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக பெறுகிறேன்!

இது என் குலத்தொழில் இல்லை;
நான் கர்ண பரம்பரை;

என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!

அவளிடம் கேட்காமல் கிடைத்தது,
இன்று கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு முகம் கிடையாது;
முகமூடிதான் அவனுக்கும் அடையாளம்;

எனக்கு இரண்டுமே கிடையாது;

அடையாளமோ, அரிதாரமோ
அவசியமற்றது;

எவர் கனவுகளிலும்
நான் வருவதில்லை;
எனக்கு கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!

என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும் வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு
நான் மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை கேட்பதில்லை!

எனக்காக,
எனக்கு அழத்தெரியாது;
என் பொம்மைகளுக்காக அழுதிருக்கிறேன்.

முளைவிடும் விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது என் தவம்;

எனக்கும் வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர் தருகிறது;

என் பச்சையங்கள் பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று சுவாசமும் தருகிறது.

இந்த உலகம் இரண்டாவது தாய்;
என்னை பெரும் யாசகனாக்கியது.

என்னிடம் புன்னகைப்பவர்களுக்கு
நான் பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின் பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே புன்னகைத்திருக்க கூடும்அப்பாவிடமே பேசிக்கொண்டிருக்கும் குழந்தை


உன்னால் என்னை நம்ப முடியவில்லை,
பிறகு என்னால் என்னை எப்படி நம்புவது?

தொலைபேசியில் கண்டபடி எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;

உன்னைத் தெரிந்தவர்களிடம் கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத துக்கமுமாக,
நாளெல்லாம் வெறுமையில் கரைகிறது!

உன் வெட்கம் என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும் வார்த்தை மட்டும் வரவேயில்லை!

உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி திரும்பி உன்னிடமே வருகிறேன்!

தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள் நீ எங்காவது போய்விடப் போகிறாய்!
Thursday, 8 July, 2010

புரியவில்லை


தீராத காதல்மழையின் துவக்க வரிகளாக
இருகரைகளிலும் கவிதை மேகங்கள்!

நீயா?நானா?
விழிக்கும், மனதிற்கும் காதல் சமர்;

காதல் பெரும்புனலில் கரைகள் கரைவதற்குள்
மனதின் மதகுகளை திறந்திடு சகியே!

நாகரிகம் கருதி நானும்;
நாணம் கருதி நீயும்
பேசாமல் பேசுகிறோம்!

உன் வழியில் நானும்;
என் வழியென நீயும் காத்திருந்தோம்;
நாம் சந்திக்கவேயில்லை;
காதல் நம்மை சந்தித்தது!

நான்
முத்தப்போருக்கு
அழைத்த போதெல்லாம்
நீ முகம் திருப்பிக்கொண்டாய்;

அன்று புரியவில்லை
நீ கன்னம்தான் காட்டுகிறாயென்று!

இறுதி அறிக்கை


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட,
விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

செய்தி: விகடன்
படம் கோ.சுகுமாரன்
நன்றி: http://aalamaram.blogspot.com/2009/01/blog-post_8178.html

அன்பின் உலகில்...


உனது அடக்கமான அழகா,
அழகான அடக்கமா
எது என்னை இன்றும்
எழுத வைப்பது?

நீ மாற மாட்டாயா?
நாள்காட்டியில்
நீ தேதி பார்ப்பதில்லையா?

நகர்ந்து விட்ட நாட்கள்
பேசிக்கொள்ளாத வருடங்களாய்
நீண்டு விட்டதில்
உனக்கு உடன்பாடுதானா?

பெண்ணின் சிறு தவறுகளை மன்னிக்காத ஆணும்,
ஆணின் அன்பை புரிந்த கொள்ளாத பெண்ணுமாய்
நாம் ஆகிவிட்டோமா?

ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து
நாம் வளரவில்லையா?
ஒவ்வொரு காதலும் தவறுகளின் தொடக்கமா?

அறிவின் வீதிகளில் ஆதரவின்றி அலைந்தேன்,
தென்றலாய் நீ தோள் தொட்டாய்!
அன்பின் முகவரி எது என்று கேட்டேன்
நீ சிரித்தாய்,நான் கண்டுகொண்டேன்!

வா நமது உலகம் காத்திருக்கிறது,

கேள்விகளால்
நம்மை இனி கட்டிப்போட
அறிவுக்கு அனுமதி கிடையாது.

அன்பின் உலகில்
நாம் மறுபடியும் குழந்தைகள்!

என் ரசனைகள்...

Wednesday, 7 July, 2010

எங்கே செல்லும் இந்த பாதை?


ஜூலை 05. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் - எதிர்க் கட்சிகள் அழைப்பு.

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு , எதிர்ப்பு எப்படி என்பதைத் தாண்டி இந்த வே.நி. உண்மையிலேயே மத்திய அரசை மறுபரிசீலனை முடிவுக்கு தள்ளி இருக்குமா என்பதை யோசித்தால் ஒரு பெரிய 'இல்லை' தான் பதில்.

இந்த வே.நி. யால் 10000 கோடி இழப்பு என்று கணக்குகள் சொல்கின்றன. அப்படியா என்று கேட்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது மத்திய மந்திரி சபை.

சரி அந்த அளவுக்கு பேச நமக்கு வெவரம் பத்தாதுப்பா. நம்ம லோக்கலுக்கு வருவோம்.

ஜெயா டிவியில் ஓடாத பேருந்துகள், கலைஞர் தொ.கா.வில் நிரம்பி வழிந்தன. அங்கே திறக்காத கடைகளில் இங்கே வருமானம் கொழித்தது. அங்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த மக்கள், இங்கு இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த பக்கம் 'வெற்றி' என்று கோப்பை தூக்கியவர்கள், அந்த பக்கம் தலையை தொங்கப்போட்டார்கள். எதை நம்புறதுன்னே தெரியலப்பா!

தேர்தலில் ஓட்டு போடாமலேயே அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் upper middle class எனப்படும் மத்திய ரகத்தினரை சாரி தரத்தினரை இந்த விலை உயர்வு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதே உண்மை. அவர்களைப் பொறுத்தவரை இது ச்சும்மா கொசுக்கடி.

வே.நி.நாளில் அலைபேசி குறுந்தகவலில் வந்த ஒரு செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 23.63 ரூபாய் மட்டும் தானாம்.

ஐயம் கொண்டு இணையத்தில் சில உரலிகளைச் சொடுக்கினேன். கிடைத்த தகவல்கள் தலை சுற்ற வைத்தன. உங்கள் பார்வைக்கு இங்கே அந்த தகவல்.

Basic Price: Rs 24.93
Excise duty: Rs 14.35
Education Tax: Rs 0.43
Dealer commission: Rs 1.05
VAT: Rs 5.5
Crude Oil Custom duty: Rs 1.1
Petrol Custom: Rs 1.54
Transportation Charge: Rs 6.00
Total price: Rs 54.90

25 ரூபாய் பெட்ரோலுக்கு 30 ரூபாய் வரி கட்டுபவன் நிச்சயம் E.இந்தியனாகத்தான் இருப்பான். வரியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுக் கொல்லுமாம் மன்னிக்கவும் கொள்ளுமாம்.

(வடிவேலு வாய்ஸ்-ல் வாசிக்கவும்)
இத எதுத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துமாம். நாமெல்லாம் ஆதரவு கொடுக்கணுமாம். அடுத்த எலக்சன்ல நாம ஓட்டு போட்டு அவங்கள செலக்ட் பண்ணணுமாம். சரி. அவிங்க வந்தாலாவது வரிய கொறச்சு வெலைய மட்டுப்படுத்துவாங்கன்னு பாத்தா, இவிய பங்குக்கு இவியளும் விலைய கூட்டுவாவளாம். இப்போ இருக்க ஆளுங்கட்சி அப்போ எதிர்கட்சியாயி போராட்டம் பண்ணுவாங்களாம். அப்போமும் நாம ஒன்னுஞ் சொல்லாம விரல் சூப்பிக்கிட்டே வீட்டுக்குள்ள இருப்பமாம். என்னத்தச் சொல்ல?

இப்போ கேப்டன் வாய்ஸ்-ல...
அரசாங்கம்ன்றது வானத்துல இர்ர்ந்து குதிச்சது இல்ல. மக்களால் மக்களுக்காக நடத்தப்படுரதுதான் அரசாங்கம். (அஆவ்...இப்பவே கண்ணை கட்டுதே)

இப்போ உங்க வாய்ஸ்-லயே கண்டினியு பண்ணுங்க.

இப்படியே யோசித்துக் கொண்டு போனால்... இலக்கில்லாமல் போகலாம். அதனால் இப்போதைக்கு இதற்கு ஒரு 144. ஆனா அட்லீஸ்ட் உங்க மைன்ட் வாய்ஸ்-ல கொஞ்சம் யோசிங்கண்ணா.

வெற்றி - தோல்வி, ஆதரவு - எதிர்ப்பு என்பதை விட்டு விட்டு, இந்த பந்த்-ஆல் யாருக்கு இம்மீடியேட் லாபம் என்று சிந்தித்தால், பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்களுக்கு என்று தோன்றுகிறது. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், சாலைகளை இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவ்வளவு வாகனங்களும் எவ்வளவு பெட்ரோல் சாப்பிட்டிருக்கும். யோசித்துப் பார்த்தால்.. ஷாக் அடிக்குது சோனா..

இப்படி யோசிச்சுகிட்டே இருந்தா...
இப்படி வெலை கூடிகிட்ட இருந்தா...
இப்படி நாம பொலம்பிகிட்டே இருந்தா..

எங்கே செல்லும் இந்த பாதை?
(அப்பாடி டைட்டில் போட்டாச்சு)