Thursday 22 July, 2010

என்ன செய்யப் போகிறாய்?


கடல்நுரையில் பிறந்தவளாம் காதல் கடவுள் வீனஸ்!
நீயோ கடல்நுரையாகவே பிறந்திருக்கிறாய்!

உன்னோடு நடக்கும்போது மட்டும் -
கால்கள் வலிப்பதே இல்லை.
கண்கள் நேர்கோட்டில் செல்கின்றன.
உதடுகள் ஊமையாகின்றன.
காதல் எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் -
காதலியே நான் உன்னிடமிருந்து கற்றவைதான்.

வார்த்தைகளுக்கு திடீர் பஞ்சம்.
உன்னை வர்ணிக்கத் துவங்குகிறேன்.
வார்த்தைகள் மீண்டும் வட்டமிடுகின்றன.
புதிய தமிழ் வார்த்தைகளுக்கு என்னை அறிமுகம் செய்கிறாய்!

கருவானது நம் காதல்.
உருவானது ஒரு கவிதை.

குவிந்து குவிந்து விரிகிற உன் வார்த்தைகள்...
மலர்ந்து மலர்ந்து முறிகிற உன் இதழ்கள்...
விழுந்து விழுந்து நிமிர்கிற உன் நாணம்...
அறுந்து அறுந்து கோர்க்கிற உன் கூந்தல்...
ஒவ்வொரு கோணத்திலும் கவிதைகளால் உன்னை -
செதுக்கியே தீர்வதென்று சபதமிட்டுவிட்டது இதயம்.

நீ சிக்கெடுத்த மனசு மறுபடியும் -
உன்னாலேயே சிக்கிவிடுகிற நுட்பத்தை
கவிதைகள் சொல்லித் தருகின்றன.
ஒவ்வொரு கவிதையிலும்...
நீ உள்ளே வந்து என்னை முத்தமிட்டுத் திரும்புகிறாய் -
ஒரு தேவதையைப் போல...

விளக்கில் முட்டிமுட்டி உயிர்விடும் ஈசல்களைப் போல,
உன்னைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு உதிர்ந்து கிடக்கின்றன
என் வார்த்தைகள்.

வாழ்க்கை என்னை ஒரு இயந்திரத்தைப் போல நடத்துகிறது.
காதல் என்னை ஒரு குழந்தையைப் போல கைபிடித்து கூட்டிச் செல்கிறது.

சிலரை காதல் வழிமறிக்கும்.
சிலரை காதல் வழிநடத்தும.

என்னை என்ன செய்யும்?



3 comments:

இராகவன் நைஜிரியா said...

// ஒவ்வொரு கவிதையிலும்...
நீ உள்ளே வந்து என்னை முத்தமிட்டுத் திரும்புகிறாய் -
ஒரு தேவதையைப் போல... //

அடுத்த தடவை வரும் போது... வெளியே போக முடியாத படி கதவ தாப்பா போட்டுடுங்க..

இராகவன் நைஜிரியா said...

// சிலரை காதல் வழிமறிக்கும்.
சிலரை காதல் வழிநடத்தும.

என்னை என்ன செய்யும்? //

உங்களை வழிமறித்து நல்வழி நடத்தும்..

சிசு said...

நன்றி ராகவன்... வருகைக்கும், கருத்துக்கும்.
//அப்படியே ஃபாலோ பண்ணிக்கிறேன் சார்//

தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.