
உன்னிடம் மறுபடியும்
மனம் விட்டுப் பேச ஆசையாய் இருக்கிறது !
சக்கரங்களுக்கிடையில் நசுங்கிய எலுமிச்சையாய்,
நம் தோழமையை சிதைத்து,
சமூகம் எறிந்து போன சந்தேகச் சிலுவை
அணை போட்டுக் கொண்டிருக்கிறது என் ஆவல்களுக்கு!
நா எழுப்பத் திராணியற்று, வார்த்தைகளின் மூச்சடக்கி,
பார்வை தாழ்த்தும் கோழைத்தனத்தை
வெகு அழகாக கைவரப் பெற்றிருக்கிறோம் இருவரும்!
மௌனங்களை முகமாக்கி விடாதே…
என் புன்னகையைத் தொலைத்தவர்கள் பட்டியலில்
நீயும் இடம் பிடித்து விடாதே.
வக்கிரங்களையே வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு –
நட்பு காதலாய் தெரிந்ததில் வியப்பில்லை.
காமமாய் தெரியாததுதான் வியப்பு.
வலிகளின் வீரியம் உறைக்கும் போதெல்லாம்
பொய்யை உண்மையாக்கும் எண்ணம்
வலுப்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தொடர்ந்து பல் பதியக் கடிபட்டுக் கொண்டிருந்தாலும்
உயிரோடுதான் இருக்கிறது உனக்கான ஏக்கம்.
சிறகுகள் அணிந்து நாம் பறந்து திரிந்த நாட்களை
அசைபோட்ட படி தவமிருக்கிறேன்
உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல.
அதுவரையில் –
எனக்குள் இருக்கும் உன்னிடம் அளவளாவிக் கொண்டிருக்கிறேன்…
அல்லது
மீண்டும் உன்னிடம் இதழ் திறக்கும் சூழ்நிலை வாய்க்குமாயின்,
என் காதலைச் சொல்ல ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
2 comments:
beautiful......
very.....................excellent line
Post a Comment