
நான் ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமாக பெறுகிறேன்!
இது என் குலத்தொழில் இல்லை;
நான் கர்ண பரம்பரை;
என் அன்னைதான்
இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல்
அன்பைக் கொடுத்தாள்!
அவளிடம் கேட்காமல் கிடைத்தது,
இன்று கேட்டும் கிடைக்கவில்லை.
யாசகனுக்கு முகம் கிடையாது;
முகமூடிதான் அவனுக்கும் அடையாளம்;
எனக்கு இரண்டுமே கிடையாது;
அடையாளமோ, அரிதாரமோ
அவசியமற்றது;
எவர் கனவுகளிலும்
நான் வருவதில்லை;
எனக்கு கனவுகள் உண்டு;
கவிதைகள் உண்டு!
என் தோள்களில்
சிறகுகள் முளைக்கும் வேளையில்
தாங்க முடியாத வலி;
பல காயங்களுக்கு
நான் மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு
நான் மாத்திரை கேட்பதில்லை!
எனக்காக,
எனக்கு அழத்தெரியாது;
என் பொம்மைகளுக்காக அழுதிருக்கிறேன்.
முளைவிடும் விதையைப்போல,
வார்த்தைகளுக்குள்
அழுந்திக்கிடக்கிறது என் தவம்;
எனக்கும் வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர் தருகிறது;
என் பச்சையங்கள் பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று சுவாசமும் தருகிறது.
இந்த உலகம் இரண்டாவது தாய்;
என்னை பெரும் யாசகனாக்கியது.
என்னிடம் புன்னகைப்பவர்களுக்கு
நான் பூச்செண்டு கொடுப்பேன்;
யாசகனின் பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ
என்றுமே எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கும்.
யாசகம் கேட்பது தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால்
நீயே புன்னகைத்திருக்க கூடும்…
No comments:
Post a Comment