Tuesday 13 July, 2010

நான் யார்?


ஆசனப் போரில் சகோதரர்களையே வென்றெடுத்த விந்தணுவா?
மூடிய விரல்களுக்குள் சந்தோஷங்களை அள்ளி வந்த தூதுவனா?

எட்டுப்பக்கம் காற்றாலும்,
எல்லாப் பக்கமும் அன்பாலும் சூழப்பட்ட உலகின் பாரமா?
உள்ளம் முழுதும் வெள்ளையாய்,
தன்னை மறந்து என்னை நினைக்கும் குடும்பத்தின் நற்பேறா?

கால்களின் எண்ணிக்கையால் மட்டும் -
விலங்கிலிருந்து வித்தியாசப்பட்டவனா?
என்னையே என்னுள் புதைத்துக் கொண்டவனா?
பூக்களில் மோதியே உடைந்து போனவனா?
ஒருகோடிச் சிதறலாய் உடைந்து விழும் அருவியா?

வரம் வரும் நேரம் தவம் கலைந்து ஓடும் தபசியா?
தன கசாப்புக்கடையை தானே தேர்ந்தெடுத்தவனா?
இரை இதுவென்று இலக்கில்லாமல் பசியுடன் பறக்கும் பருந்தா?
வரைந்து வாழ்ந்த வட்டத்திற்குள் அறியாமல் சிக்குண்ட எறும்பா?

தங்க சிறைச்சாலையில் ஞாபக மெழுகுவர்த்தியோடு
கவிதைகளை சுவாசிப்பவனா?
காதலியின் கண்ணீருக்கு அஞ்சி, மன்றங்களில் ஊமையாகும்
இந்தியக் காதலனா?

நான் யார்? அல்லது யார் நான்?
எது நான்? அல்லது எதுவாகப் போகிறவன் நான்?

மூடிய இமைகளுக்குள்,
திறந்த விழிகளில் தெரியுமா அது?





No comments: