Thursday 15 July, 2010

கண்ணீர் விடும் கடவுள்கள்


வீடெங்கிலும் உறவினர்கள்.
வீதியெங்கினும் நண்பர்கள்.
பெண்கள் - தொடர்களை தொடர முடியாமல் அழுது வைக்க...
ஆண்கள் - அழுகிப்போன அரசியலை ஆவேசமாய்ப் பேச...
சிரித்துக்கொண்டே கையசைத்து -
மேல்நோக்கி போகின்றேன் நான்.

அதிசயம்!
தேவதூதன் எனக்கு சொர்க்கவாசல் திறக்கிறான்!
அவ்வளவு நல்லவனா நான்? கேட்ட கேள்விக்கு,
"இல்லையில்லை...
சொர்க்கத்திற்கு வருபவர்கள் குறைந்து போனதில்,
வரையறைகளும் குறைக்கப்பட்டு விட்டன."
சத்தமாய் சிரித்து விட்டேன் நான்.

உள்ளே நுழைந்தால்,
வள்ளுவனும், அவ்வையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
சத்தியமாய் புரியவில்லை. சுத்தத் தமிழாய் இருக்கும்!

சொர்க்கம் 'வெறிச்'சென கிடக்க -
தேவதூதனிடம்,
எங்கே சிவனும், மற்றையோரும்? என்றதற்கு,
இப்போதே காண வேண்டுமா? -
இரவு வரை பொறுப்பாயா? என்றான்.

ஐயோ! மேலோகத்தில் இரவும், பகலும் சிலகோடி ஆண்டல்லவா?
இப்போதே! இப்போதே! - நான்.
கொஞ்சநேரம் நரகத்திலிருக்க ஆசை போலும் - தூதன்.

என்ன? சிவனும், திருமாலும் நரகத்திலா? ஏன்? - நான்.
அவர்களையே கேட்டுக் கொள்.
தள்ளிவிட்டான் தேவதூதன் பாதாளத்தில்.

சுற்றிலும் தீயெரிய,
பேய்களும், பூத கணங்களும் தின்னத் துரத்த,
ஓடியோடிக் களைத்து ஓரடியும் இனி நகரமுடியாதென்று
ஓரிடத்தில் நின்றால்...

அதோ சவுக்கடி வாங்குவது யார்? - சிவனா...
அதோ எண்ணைச்சட்டியில் வெந்துகிடப்பது யார்? திருமாலா...
அதோ சுற்றிச் சுற்றி செக்கிழுப்பது யார்? இயேசுவா...
அதோ நரமாமிசம் சமைப்பது யார்? நபிகளா...

என்னப்பா இதெல்லாம்? - சிவனிடம் கேட்டதற்கு...
சிவன், திருமால், இயேசு, நபிகள்
நால்வரும் கூட்டாய்ச் சொன்னது -

"மனிதனின் பாவமேற்று பாவமேற்று
பகுதிநேரம் வெந்து தவிக்கிறோம்.
விரைவில் முழுநேரமாகும் போல..."
பொலபொலவென கண்ணீர் விட்டனர் கடவுள்கள்.

நண்பர்களே...!
நாமும் பாவம் செய்வதைக்
கொஞ்சமாய் குறைத்துக் கொண்டாலென்ன?
கண்ணீர் விடும் கடவுள்களுக்காக.



கவிதையின் கரு - படித்ததில் பிடித்தது.

No comments: