
நித்தம் நித்தம் அவளைப் பார்க்கிறேன்
நான் புத்தம் புதிதாய் பூக்கிறேன்
என் சித்தத்தில் நிசப்தமாய் விழுந்தவளை
ரத்தத்தில் அணுக்களாய் வளர்கின்றேன்.
அவளைக் காணும்போதெல்லாம்
சொல் - என்கிறது ஒரு மனம்
நில் - என்கிறது மறு மனம்.
சொல் என்றதற்காக சொல்லவும்,
நில் என்றதற்காக நிற்கவும்
இரண்டு மனம் வாய்த்திருக்கிறது எனக்கு.
சொல்லும்போது நில்லென்ற மனமும்,
செல்லும்போது சொல்லென்ற நினைவும்
குரங்காட்டியின் பிரம்பாய் -
என்னை கரணமடிக்க வைக்கிறது.
அவள் மீதான விருப்புக்கும்,
என் மீதான வெறுப்புக்கும்
இடையே -
நாளொரு வண்ணமாய்
அவளை எண்ணியிருக்கிறேன்
பொழுதொரு எண்ணமாய்
நாட்களைத் தள்ளியிருக்கிறேன்.
சுடும் எனது தெரிந்தே
இதயத்தில் நெருப்பை வைத்திருக்கிறேன்.
உறுத்தும் என்பது புரிந்தே
கண்ணின் துரும்பைத தைத்திருக்கிறேன்.
எழுதிக் கொள்ளுங்கள்.
வெகு சீக்கிரத்தில் நானொரு கொலைகாரன்.
பதற வேண்டாம்.
என்னால் கொலையாகப் போவது...
என் இரண்டு மனதில் ஒன்று தான்.
என் உணர்வுக் குவியலின் ஒரு பகுதிதான்.
சரி.
முன்பை விட ஒன்று அதிகம்.
அவளுக்காக எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கையும்...
அவள் காதலர்களின் எண்ணிக்கையும்.
2 comments:
SUPER....
நன்றி சகா.
Post a Comment