Saturday 21 January, 2012

நீ பிறந்தாய்... தை பிறந்தது...!

காற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து
தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது!
ஆனாலும் - சொர்க்க வாசலில்
காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...

வண்ணச் சிறகுகளை அசைத்து, 
வானத்தை பூமிக்கு அழைக்கும்
பட்டாம்பூச்சியின் அழகில் மயங்கி 
சிறகுகளை சிலுப்பிக் கொண்டு
தரணிக்கு வந்து எனக்குத் துணையான நட்சத்திரத் தருணி நீ!

முகத்தில் அறையும் குளிரில் நனைந்தபடி
உன் நினைவுகளில் கண்மூடி லயித்திருந்த
அந்த காலைத் தென்றல் பொழுதில்...
காற்றில் உன்வாசம் மிதந்து வரக் கண்மலர்ந்தேன்!

கால்களில் மகரந்தங்கள்.
செல்லும பாதையெங்கும் சுகந்தங்கள்.
வானத்தை அளந்தபடி ஒரு வண்ணத்துப் பூச்சி...!
உள்ளுக்குள் துடிதுடித்த உந்துதலில்,
விரட்டிச்சென்று பிடித்தேன் அந்த பறக்கும் வானவில்லை!

அதன் ரீங்காரத்தில் உன் பெயரின் வாசம்.
அந்தச் சிறகுகளின் படபடப்பில் என்றுமில்லா உற்சாகம்.
சற்றே அதட்டியதில் சட்டென உளறிவிட்டது
இன்று நீ பூமிக்கு வந்த நாளென!
அட...!

உன்னிடம் சேர்க்கச் சொல்லி
மலர்கள் கொடுத்தனுப்பிய மகரந்தங்களோடு,
தன உறிஞ்சுகுழல்களில் சேமித்த தேனோடு (ம்)
பறந்து கொண்டிருந்தது அந்த இயற்கையின் ஓவியம்!
விடுவித்துவிட்டு, விரல்களில் பிசுபிசுத்த வண்ணங்களோடு
விசனத்தில் ஆழ்ந்தேன்!

மலர் - மகரந்தம்,
வண்ணத்துப் பூச்சி - தேன்,
நான் - ?

காய்க்காத மரங்களெல்லாம் நீர்ப்பழம் உதிர்க்கும்
அந்த மழைநாளின் மதியத்தில்
உனக்கான வாழ்த்துகளைத் தியானித்தபடி
வார்த்தைகளுக்குள் மலரத் துவங்கினேன்!

நதிகளின் கதகளி, மரகத வயல்வெளி, அலாரச் சேவல், அதிகாலைத் தெரு,
சலித்த வெயிலடித்துப் புழுதி படிந்த தெருவில் பெருகும் சாரல் புன்னகை,
மென்காற்றில் மிதக்கும் இளம்மழை - என
இயற்கையில் புகுந்து பொறுக்கி எடுக்கிறேன் உனக்கான வாழ்த்துகளை!

வலுகுறைந்து பெய்யும் மழையில் நனையாமலிருக்க
தாழ்வாரத்தில் ஒதுங்கிய பறவையின் சிறகிலிருந்து 
சிலிர்த்துத் தெறிக்கின்றன உனக்கான வாழ்த்துகள்.

முற்றத்து நீரில் யாரோ விட்ட காகிதக்கப்பல் 
குடை சாய்ந்து வருகிறது உனக்கான வாழ்த்துகளோடு...
நீலவான் தீவுகளாய் மிதக்கும் முகில்களும்
மென்மையாய் வாழ்த்திக்கொண்டிருக்கின்றன உன்னை.

இவற்றோடு -

மழைக்காதலனால் பூமி பிரசவித்த இன்ஸ்டன்ட் காளானுக்குள்
ஒருகண்ணில் குடையோடும், மறுகண்ணில் மழையோடும் நான்...!
காலத்தின் கைகளில் எப்போதும் அதிர்ந்துகொண்டேயிருக்கும்
கவிதை வீணையிலிருந்து,
உனக்கான வாழ்த்துகள் முடிவில்லாத வார்த்தைகளாய்
எனக்குள் விழத்துவங்கின.
எப்போதும் பாதியில் அறுந்து விழும் என் நினைவுகள் இப்போதும்...

எனக்குள் விழுந்து, தெறித்து,
நழுவிச் சென்ற ஒரு வார்த்தையைத் தேடித் போனேன்.
ஒரு இறகு போல் பறக்க ஆரம்பித்த வார்த்தை,
காற்றில் பறவைபோல் நீந்த ஆரம்பித்தது.

மழை மேகங்களூடே நின்று
தேவதைகள் ஆசீர்வதித்த ஒரு நொடியில்,
என் மடியில் வந்து சேர்ந்தது அந்த வார்த்தை!

ஒற்றை வார்த்தையைத் திறந்தேன் - அதனுள் ஏகப்பட்ட எழுத்துகள்.
ஒற்றை எழுத்தைத் திறந்தேன் - அதனுள் எண்ணற்ற வார்த்தைகள்!

உனக்கான வாழ்த்துகளை நிறைவு செய்ய
தொடர்ந்துகொண்டிருக்கிறது என் தேடல்!

- சிசு


ஒரு நன்றியும், மன்னிப்பும்:
  • இயற்கையின் வருணனைகளை திரைப் பாடல்கள் மூலம் பகிர்ந்துகொண்ட திரு வைரமுத்து அவர்களுக்கு நன்றி.
  • மிகச் சரியாக ஒரு வார காலதாமதத்திற்குப் பின் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வாழ்த்துக்கு உரியவரிடம் அதற்கான மன்னிப்பு.

5 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒற்றை வார்த்தையைத் திறந்தேன் - அதனுள் ஏகப்பட்ட எழுத்துகள்.
ஒற்றை எழுத்தைத் திறந்தேன் - அதனுள் எண்ணற்ற வார்த்தைகள்!

உனக்கான வாழ்த்துகளை நிறைவு செய்ய
தொடர்ந்துகொண்டிருக்கிறது என் தேடல்!

தேடல் தொடரட்டும்
எங்களுக்கும் இதுபோல அருமையான
கவிதைகள் கிடைக்கட்டும்

செய்தாலி said...

சேக்காளி ம்ம்ம் கவித கவித
நெஞ்சம் கமழும் அருமையான கவிதை
உங்கள் வரிகளில் வழிந்தொளுகிறது இயற்கையின் அழகு

சிறந்த கவிதை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

நீண்ட காலத்தின் பின்பு, அழகான ஒரு கவிதை பிறந்திருக்கிறது...

ஹேமா said...

தொடக்கமே அருமை.போகப் போக சுவை இன்னும் கூடிக்கொண்டே போகிறது கவிதை.மனதில் உண்மை அன்பின் பால் சுரக்க வாழ்த்தாய் அது எழுத்துக்களாய்.எங்கள் அன்பு வாழ்த்துக்களும் சேரட்டும் சிசு !

செய்தாலி said...

சேக்காளி
விருது ஓன்று பகிர்ந்துள்ளேன்
நேரம் கிடைப்பின் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்