Thursday 22 December, 2011

பாழும் தூக்கம் வந்தாலென்ன...




ன் நினைவுகளில் 
தூக்கம் தொலைத்துத் 
தவிக்கிறேன் நான்.

அயர்ந்த தூக்கத்தில் 
திடீரென விழித்தாலும்
எனக்கான கவிதையைப் 
புனைகிறாய் நீ!

பாழும் தூக்கம் 
எனக்கும் வந்தாலென்ன...

நானும் உனக்கொரு
கவிதை நெய்யலாமே!

Wednesday 21 December, 2011

புன்னகைப் பொழுது




லைபேசியின் தொடுதிரையில்
உன் பெயரை ஸ்பரிசிக்கும்
எல்லாப்பொழுதுகளிலும்
உயிருக்குள் 
அரும்புகள் கூட்டி மலர்கிறது 
ஒரு புன்னகை.


Tuesday 15 November, 2011

அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!




ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையே
அனல்காற்று வீசும் ஒரு மாலையில்,
பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கி
துவங்குகிறது ஒரு நெடும்பயணம்.

இனிமையான விடுமுறை நிகழ்வுகளில்
இலகுவாகவும், கனமாகவும் ஒருசேர உணர்கிறது மனம்.
ஜன்னலோர இருக்கை.

காற்றின் திசைக்கேற்ப வளைந்து நிமிரும் நாணலும்,
ஒய்யாரமாய் ஓங்கி நிற்கும் பனைமரங்களும்
பேருந்தின் சாளரத்தில் வாழ்வியல் காட்சியாய் விரிகின்றன.

சாலையோரப் புளியமரங்களின் ஆர்ப்பரிப்பும்,
புதிதாய் முளைவிட்டிருக்கும் காற்றாலையின் மௌனமுமாக
கரைந்தோடுகிறது காலம்.

உருகவும், உறையவும்
மருகவும், மலைக்கவும்
ஒரு நாய்க்குட்டியாய் பழக்கப்பட்ட மனது
ஞாபக நதியில் மெல்ல நீந்தத் துவங்குகிறது.

செந்நிறப் பள்ளத்தாக்கில் தீப்பந்து விழுந்து
எதிர்ப்பக்கப் பால்வெளியில் குளிர்ச்சியாய்
உலாவைத் துவக்குகிறது ஒரு பனிப்பந்து.

நினைவுகளை உருட்டியபடி
சாலையின் திசையில் பயணிக்கிறது வாகனம்.

இதமாகவும், மிதமாகவும்
தாலாட்டிச் செல்லும் குளிர்காற்றில்
நினைவுக்குள் வழிதப்பி அலைதல்
நிஜமாகவே சுகமானது.

அம்மாக்களிடம் எப்போதுமே திட்டுவாங்கும் பெண்குழந்தைகள் முதல்,
அதிகாலைக் குளிரை தேநீரில் கரைக்க முயலும் தாத்தாக்கள் வரை...

எதிரெதிர் காற்றுக்கு அலைக்கழியும் சாலையோரப் பூக்கள் முதல்,
எப்போதும் புன்னகை சிந்தும் எதிர் இருக்கை பூவை வரை...

தொலைதூரப் பயணங்களில யதார்த்தக் கவிதைகள்
எண்ணங்கள் போல் எப்போதும் சிதறிக் கிடக்கின்றன.

உழைப்புக்கும், ஓய்வுக்குமிடையே
பச்சோந்தியாய் பக்குவப்பட்ட மனது,
பிழைப்பிடத்தின் நெருக்கத்தில்
நிறம்மாறித் தூக்கம் தொலைக்கிறது.

வாகனத்துடனான
ஒவ்வொரு உணர்வுப் பிரிதலிலும்
மீண்டும் உயிர்க்கத் துவங்குகிறது
அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!






Friday 4 November, 2011

மழையாடிய பொழுதுகள்

 
நேற்று பெய்த மழையில் 
இன்னமும் நனைந்துகொண்டிருக்கிறது உயிர்.
சொட்டுச்சொட்டாய் உன் நினைவுகள்.
நீ பிரிவறிவித்த மழைநாளின் இரவை -
மூன்று வருடங்களுக்குப் பிறகு 
நினைவுபடுத்தியிருக்கிறது இந்த மழை.

கூடவே...
உன்னோடு கழித்த விடுமுறை நாட்களின் 
மழைநேரப் பின்மதியங்களையும்...
மழை எப்போதும் மழையாகவே இருக்கிறது.

எப்போதாவது ரசிக்கக் கிடைக்கிற 
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது உன் முகம்.
யாருமற்ற பகல்களில் வரும் மழையை நீ ரசிக்கிறாயா?

வாசனைகளோடு வந்து ஜன்னல் நனைக்கிற 
சாரல்களுக்குத் தெரியவில்லை...
நீ இப்போதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும் -
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டுவிட்டதையும். 

நனைந்துகொண்டே பேசிவந்த புதன்கிழமை...
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப் போன நூல்நிலையம்...
நூல்நிலையத்து விகடனில் வாசித்த மழை கவிதை...
தகரக் கூரையில் விழுந்த துளிச் சப்தங்கள்...
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடதுகைகளின் வெப்பம்... 
விடைபெறும் தருணத்தில் நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்...

இங்கே எப்போதாவது வருகிற மழையும் 
இவ்வளவையும் கொண்டுவருகிறது...
உன் கடிதங்களைத் தவிர.

- சிசு...


Saturday 1 October, 2011

எரித(ழ)ல் அணை(த்)தல்




என்னைப் பற்ற வைப்பது எளிது.
தீக்குச்சியோ, எரிமலையோ தேவையில்லை.
சின்ன நாணல் கொடியும், கொஞ்சம் கானல் நதியும் போதும்.

இப்போதும் எரிந்துகொண்டுதானிருக்கிறேன்...
விடிந்ததுகூடத் தெரியாமல் திருதிருவென முழிக்கும் தெருவிளக்காக.
ஆலமரங்கள் அடியோடு சரியும் சூறைக்காற்றில்கூட
அணையத் தெரியாத சிற்றகலாக.

பெரியதொரு மழைவந்தால், சின்னஞ்சிறு முக்தி சாத்தியமென்று -
மண்டியிட்டேன்... மன்றாடவும் செய்தேன்.
வலியுணர்ந்து வந்த மழை, பூமியின் மொழி புரியாமல்
வானத்துக்கே திரும்பியபோது
என் உள்ளத்தில் தைத்தன உன் வார்த்தைகள்.

ஒரு மௌனம் வெடித்ததுபோல் துடிக்கப் பழகியது இதயம்.
இடிகளை இனி இப்படியும் இடிக்கலாமென்ற திட்டத்தில் உறைந்தன முகில்கள்.
விண்மீன்களின் கல்லறைகளாகி மீண்டுமொருமுறை
மின்னிமறைந்தன நினைவில் உந்தன் விழிகள்.
கட்டங்கட்டத் தெரியாமல் வட்டமிடும் பறவைபோல்
சுற்றிவரத் துவங்கின உன் பார்வைகள்.

கனவுகளை மென்றுதின்று, கண்ணீர்த்துளிகளை குடித்தும்
அணையத் தெரியவில்லை எனக்கு.
யாரோ வந்து பற்றவைத்தார்கள்... யாரோ வந்து அணைப்பார்கள் ... என்றிருப்பது நிம்மதி.
யார்வந்து பற்றவைக்க வேண்டும்... யார் அணைக்க வேண்டுமென்று
விளக்குகள் எதிர்பார்ப்பது வேதனை.

உன் கரிய கூந்தல் கருப்பு நெருப்பாக எரிவது ஒரு இரவு என்றால் -
எப்படி அணைப்பதென்று எனக்கு நீதான் சொல்லித்தரவேண்டும்...
என்னையும், இரவையும்...!

Thursday 29 September, 2011

மூஞ்சிப் புத்தக நொறுக்'ஸ்

மூஞ்சிப் புத்தகத்தில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட சில சிந்தனைகளை இங்கே பதிவிலும் உங்களோடு...


  • வீட்டுக்கு ஒரு மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போம்.
  • சக ஆண் அலுவலருக்கு திருமணம் நிச்சயமானால், பெண்ணின் புகைப்படத்தை கேட்டு வாங்கிப் பார்க்கும் சக பெண் அலுவலர்கள், தங்களுக்கு திருமணம் நிச்சயமாகும்போது (சக ஆண் அலுவலர்கள்) மாப்பிள்ளையின் புகைப்படத்தை கேட்டாலும் காட்டுவதேயில்லை.
  • ஆறாம்நாள் கடவுள் மண்ணால் மனிதனைப் படைத்தார்.                                                                                        ஏழாம்நாள் மனிதன் கல்லால் கடவுளையும் அவ்வண்ணமே.
  • பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கிய பயணத்தில் கரைந்து கொண்டிருக்கிறது இந்த இரவு.  கடந்த கால நிகழ்வுகள் குறித்த எண்ண அலைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கின்றன யதார்த்தக் கிளிஞ்சல்கள்.
  • கிராமங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். பாளம்பாளமாய் வெடித்துக் கிடக்கும் விவசாய பூமிக்காகவும் வீட்டுமனைகளாகும் விளைநிலங்களுக்காகவும் வருத்தப்படும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசம் சிலிர்ப்பூட்டுகிறது.
  • யாரையோ பார்த்து நீ பிரம்மிக்கும் அதே விநாடியில், உன்னைப் பார்த்தும் யாரோ பிரம்மிக்கிறார்கள்!
  • "உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரண்ட்?" என்ற கேள்விக்கு "ஒருவரும் இல்லை" என்ற பொய்யையே எப்போதும் சொல்லத்தூண்டுகிறது சமூகத்தின் மாறுகண்.
  • எத்தனை அழுத்தி எழுதினாலும், காகிதத்திற்கு புரியவில்லை காதலின் வலி.
  • எல்லாத் தோல்வியிலும் ஏனிப்படி, ஏனிப்படி என்று உன்னையே நீ கேள். அதுதான் உன் வெற்றியின் ஏணிப்படி!
  • இந்தப் பூனை அழகிகளுக்கு ஆப்பிள் கொடுக்கும் சாத்தான் கடவுளாகட்டும்... # Catwalk babies in Fashion show.
  • என் கால்களுக்கு எதிரான திசையில் இருக்கிறது இலக்கு... ஆனாலும் தேடலோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது பயணம்...
  • எல்லோருடைய இறந்தகாலத்திலும் ஒரு நஷ்டக் கணக்கு இருக்கத்தான் செய்கிறது. மீள்கிறவர்கள் வாழ்கிறார்கள். மீளாதவர்கள் வாழ்க்கையை தள்ளுகிறார்கள்.
 நன்றி: மூஞ்சிப்புத்தகம் வார்த்தைக்காக சகோ.ம.தி.சுதா -க்கு.

Saturday 10 September, 2011

மனங்கவர் முன்னுரைகள்

தொடர்ச்சியாய் பதிவுலகம் வருவதும், பதிவுகள் தருவதும் ஒரு சாதனையாகத்தான் தெரிகிறது. மீண்டும் ஒரு வனவாசம் முடிந்து, இப்போது 'உள்ளேன் ஐயா'...

மனங்கவர் முன்னுரைகள் குறித்த ஒரு தொடர்பதிவுக்கு 'மகிழம்பூச்சரம்' சாகம்பரி அவர்கள் அழைத்திருந்தார்கள்.  அவரது அழைப்பை ஏற்று மலர்ந்த 'கீதமஞ்சரியை' சென்ற வாரம்தான் படித்து முடித்தேன். (கணினி மையத்தில் அமர்ந்து வாசிக்க நேரமில்லாததால் அச்செடுத்துவந்து வாசித்தேன். பதிவின் நீளத்தில் அவரது வாசிப்பின் ஆழம் புரிந்தது. ஆஹா! என்ன கனம்... என்ன கனம்...!! பாராட்டுகள் கீதா)

இவர்களது முன்னுரைகளென்னும் பொன்னுரைகல்லைப் பார்க்கையில் என் வாசிப்பை துலாத்தட்டில் நிறுத்திப் பார்க்கிறேன். எந்த வரைமுறைகளிலும் அடங்காத ஒரு ஒழுங்கற்ற, முரண்பாடான ரசனை என் துலாத்தட்டை உச்சியிலே நிறுத்திவைக்கிறது. ஆனாலும் சிந்தனா சக்தியையும், அடங்கமறுக்கும் அடிமனத்தின் உணர்வுகளையும் தூண்டும் சில நல்ல புத்தகங்களை நானும் வாசித்திருக்கிறேன் என்றமட்டில் சாந்திதான்.

பொதுவாக, புத்தகங்கள் குறித்த எனது தெரிவு முன்னுரைகளில் இருந்து தொடங்குகிறது. தன் எழுத்தின் ஆதாரத்தையும், அதன் நதி/ரிஷி மூலத்தையும் ஒரு எழுத்தாளன் முன்னுரையில் எடுத்துத் தருவது புத்தகத்தின் மீதான ஆர்வத்தையும், மதிப்பையும் திறனிட உதவும். ஜன்னலுக்கு வெளியே மழை. குதூகலமாய் மணல் குழைத்து 'மழை'யாடும் குழந்தை. அந்தக் குழந்தையின் குதூகலம் உங்களையும் மழைக்குள் இழுக்கிறதா? அப்படி ஒரு அனுபவம் முன்னுரையில் தோன்றிவிட்டால், பின் அந்தப் புத்தகத்தின் வாசிப்பனுபவம் குதூகலம்தான். இனி என்னை தன்னுள் இழுத்துக்கொண்ட முன்னுரைகள்...

ரத்தம் ஒரே நிறம்:


தனது விஞ்ஞானம் சார்ந்த எழுத்துகளுக்காக பரவலாக அறியப்பட்ட   திரு.சுஜாதா அவர்களால் கி.பி.1983 -ல் எழுதப்பட்ட சரித்திரப் பதிவு. இந்த நாவல் எழுத நேர்ந்த சூழ்நிலையையும், ஆர்வத்தையும் தனக்கேயுரிய நையாண்டித்தமிழில் முன்னுரையாக்கியிருக்கிறார் சுஜாதா. சிப்பாய்க்கலகம் (எ) முதல் இந்திய சுதந்திரப்போர் குறித்த ஆழமான புரிதலுக்கும், அறிதலுக்கும், விஸ்தீரணமான வாசிப்பனுபவத்திற்கும் இந்த நாவல் சரியான தெரிவாக இருக்கும். நிஜமாக வடக்கில் நடந்த ஒரு போராட்டத்தில், தெற்கிலிருந்து சில தமிழ்பாத்திரங்களை நயமாக உள்நுழைத்து, கற்பனை மனிதர்களையும், நிஜ மாந்தர்களையும் ஊடாட வைத்த அசாத்திய திறமை வியக்கவைக்கிறது.

இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதிய திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின் வரிகளில் சில இங்கே:

சிப்பாய் கலகம் என்று தப்பாய் வர்ணிக்கப்பட்ட முதலாவது இந்திய சுதந்திரப்போரை பின்னணியாகத் தெரிந்தெடுத்து, அந்த யுத்தத்தில் தமிழனுக்கு குறிப்பிடத்தக்க பங்கு இல்லாமற் போய்விட்டதே என்ற குறைதீர்க்கும் நூல். இந்த நாவலில் அவர் விரும்பியிருந்தால் அத்தனை பிரிட்டிஷ்காரர்களும் அக்கிரமக்காரர்கள், கொடியவர்கள் என்று சித்தரித்திருக்க முடியும். அல்லது நல்லவர்களைப் பற்றி சொல்லாமலே இருந்திருக்கலாம். ஆனால் மனசாட்சியுள்ள ஆஷ்லியைப் படைத்து "நீ கருப்பர்கள் என்று சொல்கிறாயே, அதில் இருக்கும் ஆணவமும் வெறுப்பும்தான் இன்று  கலகம் துவங்கியிருப்பதற்கு காரணம்" என்று அவனைப் பேசவைத்திருக்கிறார். எதிரியான முத்துக்குமரனை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தப்பிக்க வைக்கிறார் ஆஷ்லி. அதேபோல் துன்பத்துக்கு மேல் துன்பமாய் தாங்கிக்கொண்டு முத்துக்குமரனைப் பின்தொடரும் பூஞ்சோலை , அத்தனை இழப்புகளுக்குப் பின் கையறு நிலையடையும்போது, யுத்த பயங்கரங்களுக்கு நடுவில் அனாதையாய் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தையை அரவணைத்துப் புறப்படும் இடத்தில் ஆப்டிமிஸ்ட் சுஜாதா வெளிப்படுகிறார். சரித்திர நாவல்களில் இருந்தேயாகவேண்டிய சாமியார் பாத்திரம் பைராகியினுடையது. வைத்தியம் முதல் வாள்வீச்சுவரை அத்தனையும் தெரிந்தவன் பைராகி. கூடைகூடையாக தகவல்களைத் திரட்டி, அதை கேப்ஸ்யூல்களாக்கி கொடுத்திருக்கிறார் சுஜாதா.

பாண்டிச்சேரியின் ஞாயிறுசந்தையில் ஒரு பழையபுத்தகக் கடையில் தெரிந்தெடுத்தேன்.
ரத்தம் ஒரே நிறம் = நிஜம் + கற்பனை + வலி + போராட்டம்.

வேங்கைவனம்:


மாமன்னன் இராசராசன் விருதினைப் பெற்ற இந்தப் புதினம் கி.பி. 1987 -ல் திரு.கோவி.மணிசேகரன் அவர்களால் எழுதப் பெற்றது. புதினத்தின் களம் குறித்தும், அதில் தன கற்பனை குறித்தும் அவர் விவரிக்கும்போது எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது. தமிழர் மரபையும், வீரத்தையும், மாண்பையும், பண்பான அரசியலையும், காதலையும், துரோகத்தையும், அவசரத்தையும் ஆழமாகவே விவரிக்கிறார் கோவி.மணி.

முதல், இடை, கடை என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, உக்கிரப்பெருவழுதிப் பாண்டியர் ஆளுமையில் இருந்த காலத்தில் காட்சிகள் விரிகின்றன. ஒருகட்டத்தில் கடைச் சங்கம் அழிந்துவிடுகிறது. அத கடைசி ஆசானாக இருந்தவர் மாங்குடி மருதனார். அவருக்குப் பின் ஒரு பெண் அந்தப் பொறுப்பிற்கு வரவிருந்த நிலையில் சங்கம் தடைபடுகிறது. பின் அழிபடுகிறது. என்ன நடந்தது இடையில்? யாருக்கும் தெரியாத ரகசியம் அது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்றும், ஏனிப்படி இருக்கக்கூடாதென்றும் கற்பனை செய்ததில் உருவானதுதான் இந்தப் புதினம் என்கிறார் கோவி.

புதினம் படித்தபின் வேங்கைமார்பனும், திருமேனியும், தியாகவல்லியும் உங்கள் மனங்களில் நிரந்தரக் குடியேறுவார்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு முன், எங்கள் ஊர் நூலகத்தில் எடுத்து, இன்னும் திருப்பித் தராமல் என்னிடமே இருக்கும் நூல். (நூலகம் இடம் மாற்றிவிட்டார்கள். அதான்...)

வேங்கை வனம் = கற்பனை + காதல் + மரபு + தியாகம்.

கோல்:


இதன் மூலம் ஆங்கிலம். அம்மொழியில் எழுதியவர் Mr. இலியாஹூ எம். கோல்ட்ராட். அதை செம்மொழி பெயர்த்தவர் திரு.அஞ்சனாதேவ். தன முன்னுரையில் "இது வெறும் கதைப்புத்தகம் மாத்திரம் அல்ல" என்று பீடிகை போடுகிறார் அஞ்சனா. தன்னையும் உயர்த்திக்கொண்டு, தன நிறுவனத்தையும் வெற்றிச் சிகரத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்னும் வெறிகொண்ட அத்தனை பேருக்குமான மந்திரச்சொல் என்கிறார் அவர்.

மொழிபெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தையும், சங்கடத்தையும், வழியையும் அனுபவமாக விவரிக்கிறார் அவர். நேரடியாகச் சொல்லப்படும் அறிவுரைகளும், பொன்மொழிகளும், புள்ளிவிவரங்களும் பலசமயங்களில் நடைமுறைவாழ்வில் பலனளிக்காமல் போவதால், ஒரு நிஜ சம்பவத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டதாக சொல்லும் கோல்ட்ராட்-ன் கூற்றையும் பதிவு செய்கிறார் அஞ்சனா.

உங்கள் பணியிடம் எதுவாகவும் இருக்கட்டும். எந்தத் துறையாகவும் இருக்கட்டும். ஆனால் இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்சினைகளும், நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் ஏற்படக்கூடியவைதான். இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் வெற்றிப்பாதையில் பயணிக்கத் துவங்கியிருப்பீர்கள் என்று சவாலும் விடுக்கிறார். ஜோனா, அலெக்ஸ் ரோகோ, பாப் டோனாவன், பில்பீச் மனதைவிட்டகலாத பாத்திரங்கள்.

தமிழில் குறிப்பிடத்தக்க பிசினஸ் இலக்கியம் இல்லை என்ற குறைதீர்க்கும் நூலாக இதைக் கருதுகிறேன். எனது பணிசார்ந்த பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் அழகாக எடுத்துரைப்பதால் எனக்கு பிடித்த நூல்.

ஆனந்த விகடனில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இது, பின் விகடன் பிரசுரத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. 2008 -ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.

கோல் = பிரச்சினைகள் + ஆர்வம் + தன்னம்பிக்கை + முயற்சி + நிச்சயவெற்றி

கி.மு.-கி.பி.:


                      சங்ககாலத்துக்கு முன்னால்...
                      சரித்திரகாலத்துக்கும் முன்னால்...
                      மனிதநாகரிகம் தோன்றிய காலம் முதல்...
                      மனிதனே தோன்றிய காலம் வரை...
                      இது ஹைடெக் மொழியில் ஒரு அகழ்வாராய்ச்சி சுற்றுலா.
                      தயாராகுங்கள் கால இயந்திரத்தில் பயணிக்க.

ஆறுபக்க முன்னுரையின் பொருளடக்கத்தை இந்த ஆறுவரிகளே தந்துவிடும். அதுதான் மதன். தன கேலிசித்திரங்களுக்காகவும், பரந்த வரலாற்று அறிவுக்காகவும் அனைவராலும் அறியப்படும் மதன், தன படிப்புக்காலத்தில் பிடித்த பாடம் 'வரலாறு' அல்ல என்கிறார்.

கிமு-கிபி இந்த இரண்டுக்குள் உலகமே அடங்கிவிடும். மூன்றாவதே கிடையாது என்றும் சிலாகித்துக் கொள்கிறார். உண்மையில், மூன்றாவது ஏன் இல்லை? என்ற கேள்வியையே நம்முள் கிளரிவிடுகிறார் அவர். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமி உருவான வரலாறு முதல், மனித தோன்றியது, கண்டங்கள் பிரிந்தது, போர்க்களங்கள் என்று பயணிக்கும் நமது சுற்றுலா புதிய மில்லினியத்தில் வந்து நிற்கிறது. மதனைப் போல் ஒருவர் வரலாற்றுப்பாடம் நடத்தினால் / எழுதினால் அத்தனை மாணவருக்கும் வரலாறு விருப்பப்பாடமாக இருக்கும். இனிக்கும்.

குமுதத்தில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இது, பின் நூலாகவும் வெளியிடப்பட்டது. இதையும் 2008 -ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.

கி.மு.-கி.பி. = உலகசுற்றுலா.

வந்த நாள் முதல்...:


முன்னுரையிலேயே ஒரு கவிதை வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறார் பன்முகத்திறமை கொண்ட செழியன். தனக்கு இந்தப்புத்தகம் எழுதக் கிடைத்த வாய்ப்பையும், கவிதையின் வடிவத்தைத் தெரிவு செய்தமையையும், பாடுபொருளுக்கான களத்தை கண்டுபிடித்ததையும் வார்த்தைகளில் காதல் கோர்த்து சொல்கிறார். காதல் என்ற பாடுபொருள் அயர்ச்சியைத் தருவதாகக் கூறும் இவரது முன்னுரையிலிருந்து சில வரிகள்:

வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் புதுமையாக ஏதாவது செய்யவேண்டிய கட்டாயம். கவிதையின் வெளிப்பாட்டு முறைமையையும், சிறுகதையின் கதையாடல் உத்தியையும் இணைத்து எழுதிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அதோடு ஒளியின் தன்மை சார்ந்து காட்சிச் சித்திரங்களாக எழுதிப்பார்க்க விரும்பினேன்.

காலத்தைப் பின்னோக்கி நினைவுகூர்ந்தால் சொல்ல விரும்பிய, சொல்லத் தயங்கிய  அன்பு நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறது. இது காதல் இல்லை. மழை வருவது மாதிரி மேகமூட்டம் இருந்துகொண்டு, வராமல் களைந்து போகிற மழைக்கு முந்தைய மனநிலை. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் வசீகரிக்க விரும்பும் இந்தப்பருவம் தான் எப்போதும் வாழ்வின் பொன்னொளி படர்ந்த கனவுகாலமாக இருக்கிறது.

நுட்பமான புனைவுகளைக் காட்டிலும், உண்மைக்கதைகள் வலிமையானவை. அந்த அனுபவத்தைத் தருகிறது இந்தக் கவிதை நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்து, பின் விகடன் பிரசுரத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது.

வந்த நாள் முதல் = வசந்தகால நினைவுகள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பருவம் தப்பிய மழையாய் இந்த தொடர்பதிவை தட்டச்சியிருக்கிறேன். இதுவரை இந்த தலைப்பைத் தொடாத நண்பர்கள் அத்தனை பேரும் தொடர்பதிவுங்களேன்...




Monday 4 July, 2011

லெட்டர் குடுக்கப் போறேன்....







அதிகாலை(!) 8 மணி. சட்டைப்பையில் இருந்த கடிதம் காற்றில் படபடக்க, கடிதத்தை நினைத்து இதயமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா படபடக்க... அவள் வீட்டை நோக்கி புறப்பட்டேன்.

"தொந்திக் கணேசா! இன்னிக்கு மட்டும் இந்த லெட்டரை அவங்கப்பனுக்குத் தெரியாம அவகிட்ட குடித்துட்டேன்னா, இந்த மாசம் முழுக்க உன் கோயில் பூசைக்கு நான்தான் மணியடிப்பேன்." வேண்டிக்கொண்டே கல்பனாவின் வீட்டு வேலிக்கதவைத் திறந்தேன் நான்.

தயங்கியபடியே சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு மெல்ல முன்னேறி அவள் வீட்டு வாசல்படியில் கால்வைத்தேன்.

"கல்பனா, கல்பனா..." என்று எனக்கே கேட்கா குரலில் நடுங்கியபடியே கூப்பிட்ட சத்தத்திற்கு, உள்ளிருந்து வந்தவள்.. கலைந்த கேசமும், கசங்கிய ஆடையுமாய் நான் நின்ற கோலம் கண்டு மிரண்டிருக்கக் கூடும்.

"என்ன?" சற்று அதட்டலாகத்தான் கேட்டாள்.

:இல்ல... இந்த லெட்டரைக் குடுக்கத்தான் வந்தேன்..:" என்றபடியே எடுத்து நீட்டினேன். கை நடுக்கத்தில் கடிதம் இன்னும் படபடத்தது.

"இதே வேலையாப் போச்சு. கொண்டா" கையை நீட்டினாள் கல்பனா.

நீட்டிய கை நீட்டியபடியே நிற்க, அவள் பார்வை மட்டும் என் தலைக்கு மேலே சென்றது. எனக்குப் பின்னால் ஆஜானுபாகுவாக ஒரு உருவம் எழுவதை உணரமுடிந்தது.

"ம்ம்..என்கிட்டே கொடு அதை." என்றபடியே எதிரில் வந்தார் கல்பனாவின் அப்பா. என் அனுமதியின்றியே கடிதம் அவர் கைக்குப் போனது.

"கணேசா! கவுத்திட்டியே.. யார்கிட்ட லெட்டர் போக்கூடாதுன்னு நெனைச்சேனோ, அவர்கிட்டேயே மாட்டிக்கிச்சே... இந்த மாசம் பூரா நான் உன்னை பாக்க மாட்டேன்"

"என்ன லெட்டர்?" நினைவுகளை அறுத்தபடி வந்தது குரல்.

:வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது"
"வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது"
"இருதயம் ஒருகணம் நின்றது" - இந்த உணர்வுகளை எல்லாம் நான் ஒருசேர உணர்ந்த தருணம்  அது.

அவரோ, கடிதத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.உடல் நடுங்க ஆரம்பித்தேன். படித்து முடித்தவர், நேராக வந்து வலது கையை என் கழுத்தில் வைத்தார். மறுகையால், பக்கத்தில் இருந்த மேசையைத் திறந்து அந்த தெர்மா மீட்டரை எடுத்தார்.

இரண்டு உதறு உதறி என் வாயில் திணித்தார். சரியாக ஒரு நிமிடம் கழித்து அதை எடுத்துப் பார்த்தவர், என் கடிதத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார்.

"ராஸ்கல், பொய்யா சொல்ற? காய்ச்சல்னு லீவ் லெட்டர் கொண்டுகிட்டு வந்துட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ பள்ளிக்கூடத்துக்குப் போ" என்றார் வீடே அதிரும்படி.

நான் அரண்டுபோனேன். எது நடக்கக் கூடாதென்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. கடைசிப் படியில் இறங்கும்போது வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். பரிவும், பரிதாபமுமாய் என்னைப் பார்த்தபடி ஹால் கதவோரம் நின்றுகொண்டிருந்தாள் என் ஒண்ணாப்பு சினேகிதி கல்பனா...


நன்றி: கூகுள்

Sunday 26 June, 2011

ஒரு வரலாற்றுப்பதிவு...

சற்றே அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக இப்போதெல்லாம் வலைப்பூ பக்கம் வருவது அரிதாகிவிட்டது. நண்பர்களின் படைப்புகளில் மனதைச் செலுத்தும் நிமிடங்களை இழந்துகொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் குறுகிய கால இடைவெளியில் இதனைப் பதிவிடுகிறேன். எழுத்திற்கு வேலையில்லாத காட்சிப் படிமானங்களின் பதிவு. அந்தநாள் நிகழ்வுகளில் கொஞ்சம் நம்மை நனைத்தெடுக்கும் நினைவு.