Monday, 4 July 2011

லெட்டர் குடுக்கப் போறேன்....







அதிகாலை(!) 8 மணி. சட்டைப்பையில் இருந்த கடிதம் காற்றில் படபடக்க, கடிதத்தை நினைத்து இதயமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா படபடக்க... அவள் வீட்டை நோக்கி புறப்பட்டேன்.

"தொந்திக் கணேசா! இன்னிக்கு மட்டும் இந்த லெட்டரை அவங்கப்பனுக்குத் தெரியாம அவகிட்ட குடித்துட்டேன்னா, இந்த மாசம் முழுக்க உன் கோயில் பூசைக்கு நான்தான் மணியடிப்பேன்." வேண்டிக்கொண்டே கல்பனாவின் வீட்டு வேலிக்கதவைத் திறந்தேன் நான்.

தயங்கியபடியே சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு மெல்ல முன்னேறி அவள் வீட்டு வாசல்படியில் கால்வைத்தேன்.

"கல்பனா, கல்பனா..." என்று எனக்கே கேட்கா குரலில் நடுங்கியபடியே கூப்பிட்ட சத்தத்திற்கு, உள்ளிருந்து வந்தவள்.. கலைந்த கேசமும், கசங்கிய ஆடையுமாய் நான் நின்ற கோலம் கண்டு மிரண்டிருக்கக் கூடும்.

"என்ன?" சற்று அதட்டலாகத்தான் கேட்டாள்.

:இல்ல... இந்த லெட்டரைக் குடுக்கத்தான் வந்தேன்..:" என்றபடியே எடுத்து நீட்டினேன். கை நடுக்கத்தில் கடிதம் இன்னும் படபடத்தது.

"இதே வேலையாப் போச்சு. கொண்டா" கையை நீட்டினாள் கல்பனா.

நீட்டிய கை நீட்டியபடியே நிற்க, அவள் பார்வை மட்டும் என் தலைக்கு மேலே சென்றது. எனக்குப் பின்னால் ஆஜானுபாகுவாக ஒரு உருவம் எழுவதை உணரமுடிந்தது.

"ம்ம்..என்கிட்டே கொடு அதை." என்றபடியே எதிரில் வந்தார் கல்பனாவின் அப்பா. என் அனுமதியின்றியே கடிதம் அவர் கைக்குப் போனது.

"கணேசா! கவுத்திட்டியே.. யார்கிட்ட லெட்டர் போக்கூடாதுன்னு நெனைச்சேனோ, அவர்கிட்டேயே மாட்டிக்கிச்சே... இந்த மாசம் பூரா நான் உன்னை பாக்க மாட்டேன்"

"என்ன லெட்டர்?" நினைவுகளை அறுத்தபடி வந்தது குரல்.

:வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது"
"வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது"
"இருதயம் ஒருகணம் நின்றது" - இந்த உணர்வுகளை எல்லாம் நான் ஒருசேர உணர்ந்த தருணம்  அது.

அவரோ, கடிதத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.உடல் நடுங்க ஆரம்பித்தேன். படித்து முடித்தவர், நேராக வந்து வலது கையை என் கழுத்தில் வைத்தார். மறுகையால், பக்கத்தில் இருந்த மேசையைத் திறந்து அந்த தெர்மா மீட்டரை எடுத்தார்.

இரண்டு உதறு உதறி என் வாயில் திணித்தார். சரியாக ஒரு நிமிடம் கழித்து அதை எடுத்துப் பார்த்தவர், என் கடிதத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தார்.

"ராஸ்கல், பொய்யா சொல்ற? காய்ச்சல்னு லீவ் லெட்டர் கொண்டுகிட்டு வந்துட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ பள்ளிக்கூடத்துக்குப் போ" என்றார் வீடே அதிரும்படி.

நான் அரண்டுபோனேன். எது நடக்கக் கூடாதென்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. கடைசிப் படியில் இறங்கும்போது வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். பரிவும், பரிதாபமுமாய் என்னைப் பார்த்தபடி ஹால் கதவோரம் நின்றுகொண்டிருந்தாள் என் ஒண்ணாப்பு சினேகிதி கல்பனா...


நன்றி: கூகுள்

9 comments:

Unknown said...

so sweet.i like it

சாகம்பரி said...

நம்மை பள்ளிக்கு கழுத்தைபிடித்து தள்ளிவிடுவது, மார்க் கேட்டு இம்சை செய்வது, விளையாட்டுப் போட்டியின் தோல்வியை கலாய்ப்பது - என்ன ஒரு வில்ல(அப்பா)த்தனம்.

arasan said...

கலக்குங்க சிசு...
நச்

Yaathoramani.blogspot.com said...

பிரமாதம்
கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளீர்கள்
கடைசியில் ஒன்றாம் வகுப்பு சினேகிதி என்றவுடன்
என்னையறியாது சப்தமாக சிரித்துவிட்டேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அருமை அருமை..

அதிலும் படத்தில் இருக்கும் வசனம் இன்னும் அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

மாலதி said...

நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

குட்டிக்கதைதான் அதுக்குள்ளயே சின்னத்திருப்பம்.அருமை !

சாகம்பரி said...

Good day Sir. தங்களை பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.

கீதமஞ்சரி said...

ஒண்ணாம்ப்புலேயே கதை எழுத ஆரம்பிச்சாச்சா? ரொம்ப அழகான காட்சியமைப்பு. திருப்பம் ரசிக்கவைத்தது.