Tuesday, 15 November, 2011

அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையே
அனல்காற்று வீசும் ஒரு மாலையில்,
பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கி
துவங்குகிறது ஒரு நெடும்பயணம்.

இனிமையான விடுமுறை நிகழ்வுகளில்
இலகுவாகவும், கனமாகவும் ஒருசேர உணர்கிறது மனம்.
ஜன்னலோர இருக்கை.

காற்றின் திசைக்கேற்ப வளைந்து நிமிரும் நாணலும்,
ஒய்யாரமாய் ஓங்கி நிற்கும் பனைமரங்களும்
பேருந்தின் சாளரத்தில் வாழ்வியல் காட்சியாய் விரிகின்றன.

சாலையோரப் புளியமரங்களின் ஆர்ப்பரிப்பும்,
புதிதாய் முளைவிட்டிருக்கும் காற்றாலையின் மௌனமுமாக
கரைந்தோடுகிறது காலம்.

உருகவும், உறையவும்
மருகவும், மலைக்கவும்
ஒரு நாய்க்குட்டியாய் பழக்கப்பட்ட மனது
ஞாபக நதியில் மெல்ல நீந்தத் துவங்குகிறது.

செந்நிறப் பள்ளத்தாக்கில் தீப்பந்து விழுந்து
எதிர்ப்பக்கப் பால்வெளியில் குளிர்ச்சியாய்
உலாவைத் துவக்குகிறது ஒரு பனிப்பந்து.

நினைவுகளை உருட்டியபடி
சாலையின் திசையில் பயணிக்கிறது வாகனம்.

இதமாகவும், மிதமாகவும்
தாலாட்டிச் செல்லும் குளிர்காற்றில்
நினைவுக்குள் வழிதப்பி அலைதல்
நிஜமாகவே சுகமானது.

அம்மாக்களிடம் எப்போதுமே திட்டுவாங்கும் பெண்குழந்தைகள் முதல்,
அதிகாலைக் குளிரை தேநீரில் கரைக்க முயலும் தாத்தாக்கள் வரை...

எதிரெதிர் காற்றுக்கு அலைக்கழியும் சாலையோரப் பூக்கள் முதல்,
எப்போதும் புன்னகை சிந்தும் எதிர் இருக்கை பூவை வரை...

தொலைதூரப் பயணங்களில யதார்த்தக் கவிதைகள்
எண்ணங்கள் போல் எப்போதும் சிதறிக் கிடக்கின்றன.

உழைப்புக்கும், ஓய்வுக்குமிடையே
பச்சோந்தியாய் பக்குவப்பட்ட மனது,
பிழைப்பிடத்தின் நெருக்கத்தில்
நிறம்மாறித் தூக்கம் தொலைக்கிறது.

வாகனத்துடனான
ஒவ்வொரு உணர்வுப் பிரிதலிலும்
மீண்டும் உயிர்க்கத் துவங்குகிறது
அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!


Friday, 4 November, 2011

மழையாடிய பொழுதுகள்

 
நேற்று பெய்த மழையில் 
இன்னமும் நனைந்துகொண்டிருக்கிறது உயிர்.
சொட்டுச்சொட்டாய் உன் நினைவுகள்.
நீ பிரிவறிவித்த மழைநாளின் இரவை -
மூன்று வருடங்களுக்குப் பிறகு 
நினைவுபடுத்தியிருக்கிறது இந்த மழை.

கூடவே...
உன்னோடு கழித்த விடுமுறை நாட்களின் 
மழைநேரப் பின்மதியங்களையும்...
மழை எப்போதும் மழையாகவே இருக்கிறது.

எப்போதாவது ரசிக்கக் கிடைக்கிற 
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது உன் முகம்.
யாருமற்ற பகல்களில் வரும் மழையை நீ ரசிக்கிறாயா?

வாசனைகளோடு வந்து ஜன்னல் நனைக்கிற 
சாரல்களுக்குத் தெரியவில்லை...
நீ இப்போதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும் -
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டுவிட்டதையும். 

நனைந்துகொண்டே பேசிவந்த புதன்கிழமை...
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப் போன நூல்நிலையம்...
நூல்நிலையத்து விகடனில் வாசித்த மழை கவிதை...
தகரக் கூரையில் விழுந்த துளிச் சப்தங்கள்...
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடதுகைகளின் வெப்பம்... 
விடைபெறும் தருணத்தில் நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்...

இங்கே எப்போதாவது வருகிற மழையும் 
இவ்வளவையும் கொண்டுவருகிறது...
உன் கடிதங்களைத் தவிர.

- சிசு...