Friday 10 December, 2010

அவன்-அவள்-அது


அவள்: உனக்கு நட்பில் நம்பிக்கை இருக்கா?

அவன்: இருக்கு...

அவள்: ஆனா, சில பேர் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் காதல் தான் இருக்க முடியும்னு நம்பறாங்களே...

அவன்: முட்டாள்தனம். ஒரு பெண் எனக்கு தோழியா இருந்திருக்கா. எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லையே...

அவள்: ஒருவேளை, உனக்கு அவ மேல காதல் வந்து, அதை நீ கவனிக்காம இருந்திருக்கலாம். இல்லையா?

அவன்: இல்ல...

அவள்: அப்படின்னா, அவளுக்கு உன்மேல காதல் வந்திருக்கலாம்.

அவன்: அதுவும் இல்ல.

அவள்: ஒரு உண்மையான தோழி முழு வாழ்க்கைக்கும் உன் கூடவே இருக்கணும்னு விரும்பறியா?

அவன்: என் கனவு அதுதான்.

அவள்: நானும் அப்படித்தான் ஆசைப்படுறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday 8 December, 2010

புதிய பூவின் புன்னகை...!


நேராகச் சென்ற வாழ்க்கை இப்போது சில இடங்களில் நெளிவதை உணர முடிகிறது.
சீரான தடம் அமைய அதன் போக்கிலேயே வளைந்து திரும்புகிறேன் நானும்.
வாழ்க்கை என்னை என் விருப்பத்திற்கெதிராக எங்கெங்கோ இழுத்துக்கொண்டு திரிகிறது.
சில பொழுதுக்குள் வாடிவிடும் பொய்களாலான தோரணங்களும்,
என்றும் நிலைத்திருக்கும் யதார்த்தங்களால் எழுப்பப்படும் நிஜங்களும்
எப்போதும் தீவீரமான சமரில் லயித்திருக்கின்றன.

ஓங்கியடிக்கும் அலைகளுக்கு பாவனை காட்ட இயலாமல்
கரைகளில் பதிந்திருக்கும் பெருங்கற்களைப் போல -
ஊழிப் பெருவாழ்வின் சில நிகழ்வுகளை ஊமையாய் மென்று கொண்டிருக்கிறது இதயம்.
வந்துவந்து கரை தொட்டுச் செல்லும் நீரில்,
வரப்பிடிக்காமல் நழுவிச் செல்லும் மீன்களைப் போல...
சில நினைவுகள் ஞாபக அடுக்குகளிலிருந்து லாவகமாய் நீங்கிச் செல்கின்றன.

ஆசையாய் துரத்திப் பிடித்த பட்டாம்பூச்சியை விட்ட பின்பும்,
விரல்களில் பிசுபிசுக்கும் வண்ணங்களைப் போல -
உள்ளத்தின் ஓரத்தில் இன்னும் குற்றுயிரோடு இருக்கிறது காதலுக்கான ஏக்கம்.
காதலில் நினைவு தப்பி வரும் கனவில் ஒருபோதும் எனக்கான நிஜமுகம் வந்ததில்லை.

தீர்க்கமான முடிவுக்காக, இமை கவிழ்த்து யோசிக்கிறேன்...
எனக்கான முகம் எதுவென? பல முகங்கள் வருகின்றன வரிசையாய்...
சிரித்தபடி, சிநேகித்தபடி, கருணை சிந்த, காருண்யம் பொங்க,
சாந்தமாய், சந்தோஷமாய்... ஒன்றாய், இரண்டாய், பலவாய்...
கடைசிவரை தெரியவில்லை எனக்கான இணை எதுவென!

நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் நெடுந்தொலைவுக் கனவுகள் தான்.
வாழ்க்கை சொல்லித்தரும் அனுபவங்களெல்லாம் அற்புதங்கள் தாம்.

என் எண்ணங்களுக்கு எதிரான வாழ்க்கை எதிலும் நிலை கொள்ளாமல்
நாளை என்ற நம்பிக்கையினூடே
நகர்ந்து கொண்டே இருக்கிறது!
வாழ்க்கை தன்னைப் புரியவைக்க சில தருணங்களையும்,
சில நிகழ்வுகளையும் தன வசப்படுத்திக் கொள்கிறது.

நேர்கோட்டுப் பயணம் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமில்லை
என்னும் எதார்த்தம் முகத்தில் அறைகிறது.
தெளிந்த மனதோடு சென்ற வாரம் பதியமிட்ட ரோஜாச செடியில்,
இந்த வாரம் சில பூக்களின் புன்னகை.
காதலைத் தாண்டிய வாழ்க்கையின் தேடலுக்கு
என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இதுவென புரிகிறது.