Tuesday 15 November 2011

அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையே
அனல்காற்று வீசும் ஒரு மாலையில்,
பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கி
துவங்குகிறது ஒரு நெடும்பயணம்.

இனிமையான விடுமுறை நிகழ்வுகளில்
இலகுவாகவும், கனமாகவும் ஒருசேர உணர்கிறது மனம்.
ஜன்னலோர இருக்கை.

காற்றின் திசைக்கேற்ப வளைந்து நிமிரும் நாணலும்,
ஒய்யாரமாய் ஓங்கி நிற்கும் பனைமரங்களும்
பேருந்தின் சாளரத்தில் வாழ்வியல் காட்சியாய் விரிகின்றன.

சாலையோரப் புளியமரங்களின் ஆர்ப்பரிப்பும்,
புதிதாய் முளைவிட்டிருக்கும் காற்றாலையின் மௌனமுமாக
கரைந்தோடுகிறது காலம்.

உருகவும், உறையவும்
மருகவும், மலைக்கவும்
ஒரு நாய்க்குட்டியாய் பழக்கப்பட்ட மனது
ஞாபக நதியில் மெல்ல நீந்தத் துவங்குகிறது.

செந்நிறப் பள்ளத்தாக்கில் தீப்பந்து விழுந்து
எதிர்ப்பக்கப் பால்வெளியில் குளிர்ச்சியாய்
உலாவைத் துவக்குகிறது ஒரு பனிப்பந்து.

நினைவுகளை உருட்டியபடி
சாலையின் திசையில் பயணிக்கிறது வாகனம்.

இதமாகவும், மிதமாகவும்
தாலாட்டிச் செல்லும் குளிர்காற்றில்
நினைவுக்குள் வழிதப்பி அலைதல்
நிஜமாகவே சுகமானது.

அம்மாக்களிடம் எப்போதுமே திட்டுவாங்கும் பெண்குழந்தைகள் முதல்,
அதிகாலைக் குளிரை தேநீரில் கரைக்க முயலும் தாத்தாக்கள் வரை...

எதிரெதிர் காற்றுக்கு அலைக்கழியும் சாலையோரப் பூக்கள் முதல்,
எப்போதும் புன்னகை சிந்தும் எதிர் இருக்கை பூவை வரை...

தொலைதூரப் பயணங்களில யதார்த்தக் கவிதைகள்
எண்ணங்கள் போல் எப்போதும் சிதறிக் கிடக்கின்றன.

உழைப்புக்கும், ஓய்வுக்குமிடையே
பச்சோந்தியாய் பக்குவப்பட்ட மனது,
பிழைப்பிடத்தின் நெருக்கத்தில்
நிறம்மாறித் தூக்கம் தொலைக்கிறது.

வாகனத்துடனான
ஒவ்வொரு உணர்வுப் பிரிதலிலும்
மீண்டும் உயிர்க்கத் துவங்குகிறது
அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!


8 comments:

சாகம்பரி said...

//தொலைதூரப் பயணங்களில யதார்த்தக் கவிதைகள்
எண்ணங்கள் போல் எப்போதும் சிதறிக் கிடக்கின்றன.//

இதுவும் ரயில் பயணம் மறக்கவே முடியாது. உலகத்துடனயே பயணிப்பதுபோல கவிதைகள் கொட்டும். அருமையான பகிர்வு.

கலைவேந்தன் said...

மிக அருமையான பயண இன்பங்களை அழகாக அடுக்கிவைத்துவிட்டீங்க..

சொல்வளம் நிறைய இருக்கு உங்க கிட்ட.. எழுதுங்க தொடர்ந்து..

எனது மனமார்ந்த பாராட்டுகள்..!

- கலைவேந்தன்

Latha Vijayakumar said...

Fantastic Nalan. You are a good cooker. (nalabagam)

அரசன் said...

செழுமையான சொற்களில் சிறப்பான கவிதை ..
பயணத்தின் தவிப்பு , ஏக்கம் சிறப்பாய் கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

அரசன் said...

ஆமா இத்தனை நாளா எங்க போயிருந்திங்க சிசு ..

சி.கருணாகரசு said...

ஏக்கம் ... நல்லாயிருக்கு பாராட்டுக்கள்.

ஹேமா said...

சுகமா இருக்கீங்களா நீங்க சிசு.உங்களைக் கண்டதில் சந்தோஷம் !

வீட்டைப் பிரிந்திருக்கும் ஏக்கம் ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்.மீண்டும் மீண்டும் கிடைக்கும் அந்த சந்தோஷம் !

Ramani said...

அனைவருக்கும் உண்டாகும் ஏக்கமே
ஆனாலும் இத்தனை அழகாகத்தான் சொல்லத் தெரியாது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்