Saturday 1 October, 2011

எரித(ழ)ல் அணை(த்)தல்




என்னைப் பற்ற வைப்பது எளிது.
தீக்குச்சியோ, எரிமலையோ தேவையில்லை.
சின்ன நாணல் கொடியும், கொஞ்சம் கானல் நதியும் போதும்.

இப்போதும் எரிந்துகொண்டுதானிருக்கிறேன்...
விடிந்ததுகூடத் தெரியாமல் திருதிருவென முழிக்கும் தெருவிளக்காக.
ஆலமரங்கள் அடியோடு சரியும் சூறைக்காற்றில்கூட
அணையத் தெரியாத சிற்றகலாக.

பெரியதொரு மழைவந்தால், சின்னஞ்சிறு முக்தி சாத்தியமென்று -
மண்டியிட்டேன்... மன்றாடவும் செய்தேன்.
வலியுணர்ந்து வந்த மழை, பூமியின் மொழி புரியாமல்
வானத்துக்கே திரும்பியபோது
என் உள்ளத்தில் தைத்தன உன் வார்த்தைகள்.

ஒரு மௌனம் வெடித்ததுபோல் துடிக்கப் பழகியது இதயம்.
இடிகளை இனி இப்படியும் இடிக்கலாமென்ற திட்டத்தில் உறைந்தன முகில்கள்.
விண்மீன்களின் கல்லறைகளாகி மீண்டுமொருமுறை
மின்னிமறைந்தன நினைவில் உந்தன் விழிகள்.
கட்டங்கட்டத் தெரியாமல் வட்டமிடும் பறவைபோல்
சுற்றிவரத் துவங்கின உன் பார்வைகள்.

கனவுகளை மென்றுதின்று, கண்ணீர்த்துளிகளை குடித்தும்
அணையத் தெரியவில்லை எனக்கு.
யாரோ வந்து பற்றவைத்தார்கள்... யாரோ வந்து அணைப்பார்கள் ... என்றிருப்பது நிம்மதி.
யார்வந்து பற்றவைக்க வேண்டும்... யார் அணைக்க வேண்டுமென்று
விளக்குகள் எதிர்பார்ப்பது வேதனை.

உன் கரிய கூந்தல் கருப்பு நெருப்பாக எரிவது ஒரு இரவு என்றால் -
எப்படி அணைப்பதென்று எனக்கு நீதான் சொல்லித்தரவேண்டும்...
என்னையும், இரவையும்...!

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நிழற்படத்துக்காக கவிதையா?
கவிதைக்காக நிழற்படமா?


அருமை..

Yaathoramani.blogspot.com said...

அருமை
உணர்வை அப்படியே எழுத்தில் கொணர
வார்த்தைகளை வசப்படுத்த சிலரால்தான் முடிகிறது
உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

செய்தாலி said...

சேக்காளி
பின்னி எடுத்துடீங்க
வரிகள் அழகா
சித்திரம் அழகா
என்று எழுகிற கேள்விக்கு
என் சேக்காளியின் வரிகளே அழகு

ரெம்ப நாளுக்கு அப்புறம் அருமயான கவிதையுடன்
அடிக்கடி எழுதுங்க சேக்காளி ஏன் திடீர் திடீர் என்று காணாமல் போறீங்க

அம்பாளடியாள் said...

மனம்கொண்ட காதல் உணர்வு மாறாமல்
விளிநீர்கொண்டு எழுதிய கவிதையோ இது!.... மிக அருமையாக உள்ளது கவிதை வரிகள் வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி பகிர்வுக்கு ......

சாகம்பரி said...

கனவுகளை மென்றுதின்று, கண்ணீர்த்துளிகளை குடித்தும்
அணையத் தெரியவில்லை எனக்கு.//
எரியவைக்கும் எதுவோ ஒன்று தீரும்வரை எரிய வேண்டுமென்பது விதி. இது தத்துவக் கவிதை போலவும் இருக்கு. அருமை.