புலன்களற்று , உணர்வுகளற்று,
எதுவுமே இல்லையென்பதாய்...
ஒரு நீண்ட மௌனமாய்...
விடியலின் வெட்ட வெளியாய்...
ஒரு கவிதைக்காக காத்திருக்கும்
வெள்ளைக் காகிதமாய்...
பின்-
இவை எதுவுமில்லாத பாழ்வெளியாய்...
மாறி மாறிப் பிறழ்கிறது மனது.
பல குழப்பங்களுக்குப் பின் தெளிவாயிற்று...
நீயில்லையென...!
தான் நம்பும் கடவுளுக்காக
எதையும் இழக்க தயாராய் இருக்கிறான் மனிதன்.
தன்னை நம்பும் மனிதனுக்காக
ஒரு மயிரையும் இழக்கத்
தயாராயில்லை கடவுள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்களைப் படைத்ததாக
உன்னை நம்புகிறோம் பிரம்மனே!
உன்னைப் படைத்ததாக
நீ யாரை நம்புகிறாய்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு பேருந்து பயணத்தில்
என் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தார் கடவுள்.
என்னிடமிருந்த
அவரது பிம்பங்களையெல்லாம்
பொடிப் பொடியாக்கும்படி...
இன்னொரு நாள்....
ஒரு பிச்சைக்காரனின்
வறட்சியான சில்லறைத்தட்டில்
திருடிக்கொண்டோடுபவனின்
புன்னகையில்
கடவுளின் சாயல் ஒளிந்திருந்ததனை
நான் கண்டேன்..
பிறகொரு நாள் மாலையில்
என் நிலைக்கண்ணாடியிலும்
அவரைப் பார்க்கநேர்ந்தது..
எல்லோரும்
நினைப்பது போலில்லை கடவுள்
அப்படியும் இருக்கலாம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
