Saturday 12 May, 2012

இன்றைய வெட்டிப் பேச்சு - டாஸ்மாக்!


இன்று காலை பழச்சாறு அருந்திக்கொண்டே நண்பர்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். அர்த்தமற்ற பேச்சின் திசையிலிருந்து சற்றே விலகிய உரையாடலின் போது, நண்பர் பாலா என்னிடம் கேட்ட ஒரு கேள்வியின் விளைவு... இந்தப் பதிவு. கேள்வியைக் கடைசியில் பார்ப்போம். இப்போது அதன் சாராம்சமான "டாஸ்மாக்"...


நவீன கலைக்களஞ்சியமான "கூகுள்" தேடல் பொறியில், தமிழகத்தின் அவமானச் சின்னமான "டாஸ்மாக்" என்று தட்டியவுடனே 'ரமணா' விஜயகாந்த் பாணியில் கண்கள் சிவக்க... மன்னிக்கவும்...  திரை சிவக்க தகவல்களை அள்ளித் தெளித்துவிட்டது. 

Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கம் தான் TASMAC. 1983 -ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, துவக்கத்தில் மதுபான வகைகளின் மொத்த விற்பனையை மட்டுமே கவனித்து வந்தது. 1983-84  ம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் ஆண்டு வருமானம் ரூ.139.41 கோடி. (அப்போது இதனை துவக்கிவைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்குத் தெரியாது... பின்னாளில் இது எத்தனை கோடி ரூபாயை ஈட்டித் தரப்போகிறது... எத்தனை குடும்பங்களை கண்ணீரில் மூழ்கடிக்கப் போகிறதென்று.)




2003, நவம்பரில் மதுபான சில்லறை வர்த்தகத்தையும் கையில் எடுத்துக்கொள்ளும் முன்பு வரை,   டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ.3499.75 கோடியாக இருந்தது. (தான்தோன்றித்தனமாக, தீர்க்கத்தரிசனத்தோடு இம்முடிவை எடுத்த ஜெ.ஜெயலலிதாவுக்குத் தெரியும்... தன்னிகரில்லாத தமிழன் மானங்கெட்டுப் போவான் என்பதும், வீட்டுக்கு வீடு அடுப்பெரிகிறதோ இல்லையோ... வயிறெரியும் என்பதும்.  கூடவே... குடி வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு என்பதும்.)

சில்லறை வர்த்தகத்தில் காலடி வைத்த இரண்டு வருடங்களில் டாஸ்மாக்கின் வருமானம் இரு மடங்கானது... அதாவது 2005 -06  ம் ஆண்டுகளில் ரூ.7335 கோடி. அதாவது, 109.59 % வளர்ச்சி. அதன்பின் வந்த வருடங்களில் டாஸ்மாக்கின் கிராப், வல்லுனர்களின் கணிப்பையும் தாண்டி வளர்ந்தது... அதாவது, தமிழன் எதிர்பார்ப்புகளையும் தாண்டி சாதிக்க ஆரம்பித்தான்...



இன்றைய தேதியில், வருவாய்த் துறையைக் கவனிக்கும் அமைச்சர் நத்தம். விஸ்வநாதனின் தலைமையில் செயல்படும் டாஸ்மாக்கில், ஒரு தலைமை இயக்குனர் உட்பட ஐந்து இயக்குனர்கள் உண்டு. தமிழகத்தின் ஐந்து நகரங்களில் இதன் அலுவலகங்கள் இயங்குகின்றன. (சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம்). மாநிலமெங்கும் 41 இடங்களில் IMFL மையங்கள் (Indian Made Foreign Liquor)  செயல்படுகின்றன.

மொத்த சில்லறை விற்பனை நிலையங்கள் : 06,798
BAR வசதியுடன் கூடியவை : 04,730
மொத்த மேற்பார்வையாளர்கள் : 06,674
மொத்த சிப்பந்திகள் : 16,826
BAR மேற்பார்வையாளர்கள் : 01,111
BAR சிப்பந்திகள் : 04,039

கூர்ந்து நோக்கினால், மதுபானங்களின் மொத்தமற்றும் சில்லறை வர்த்தகங்கள் குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்  காலத்தில் துவங்கப்பட்டது புலப்படும். அப்படியானால், தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லையென எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த வருமானத் திட்டத்துக்கு உரமிட்டு, நீரூற்றி செழித்து வளரச் செய்தது தி.மு.க. தான். அதன் தலைவர் கருணாநிதி தான். 2006-2011 வரையிலான தனது பதவிக்காலத்தில், இலவசத் திட்டங்களுக்காக டாஸ்மாக் வருமானத்தில் அவர் காட்டிய அக்கறையும், மும்முரமும் உலகறிந்தது. தமிழகத்தின் அரசியல் கட்சிகளில டாஸ்மாக் மது வர்த்தகத்தை எதிர்ப்பவர்களை விரல்விட்டு  எண்ணிவிடலாம். வைகோ, நல்லகண்ணு, ராமதாஸ் (மதுவிலக்குக்காக, விதிவிலக்கி இந்தப் பட்டியலில் இவர்) போன்றோரின் முயற்சிகளும், போராட்டங்களும் விழல் நீர்தான்.

சரி... பாலாவின் கேள்விக்கு வருவோம். 2011-12 டாஸ்மாக் ஆண்டு வருமானத்தில்,  ஒவ்வொரு 'குடி'மகனின் பங்கும் எவ்வளவு இருக்கும்?


மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, தமிழகத்தின் மக்கள்தொகை 7,21,38,958. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை மட்டும் 'குடி'மகன்களாக கணக்கில் கொண்டால், (2,21,58,871) ஒவ்வொருவரும், சராசரியாக ரூ.8000/- வரை இந்த வருமானத்தில் பங்கெடுத்துள்ளனர்.

நன்றி:  TASMAC வலைத்தளம். மற்றும் பத்திரிகை செய்திகள். 
டாஸ்மாக் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இந்த வலைத்தளத்திற்கு செல்லலாம்.

பின் குறிப்பு: பெண்களை இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையென யாரும் வருந்த வேண்டாம். 
ஆண்கள் ஜாதியில் குடிக்காதவர்களின் காலியிடத்தை, பெண்கள் ஜாதியில் குடிப்பவர்கள் நிரப்புவார்கள்.

குழந்தைகளின் வருமானம், பெற்றோர்களின் அவமானம் 
என்று விளம்பரம் செய்யும் அரசாங்கம், 
டாஸ்மாக் வருமானம், நாட்டுக்கு அவமானம் 
என்பதை எப்போது உணர்கிறதோ,
அப்போதுதான் இதற்கெல்லாம் விடிவுகாலம். 
அது, கண்கெட்டபின் செய்யும் சூரிய நமஸ்காரம் போல் 
ஆகிவிடக் கூடாதென்பதுதான் நம் கவலை.

2 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

ம்ம்ம்ம்ம்... ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எனக்கு....

செய்தாலி said...

நல்ல பதிவு சேக்காளி
ரெம்ப நாளைக்கு அப்புறம்

ம்ம்ம் அருமை (:

நீங்கள் நலமா
உங்கள் உறவுகள் நலமா சேக்காளி