நுரைதளும்பும் அலைகடலோரம்
காற்றுவாங்கப் போனேன்.
காலாற நடக்கையில்
கண்ணில் தென்பட்டனர் காதலர் பலர்.
காதலனைப் பார்த்தும் -
காதலியைப் பார்த்தும் -
காறித்துப்பியது கடல்!
அலைபூக்கள் வீசி ஆசீர்வதிப்பாயே...
நீயா -
எச்சில் துப்பி இழிவு செய்கிறாய்?
ஆதங்கத்தோடு கேட்டேன் ஆழியிடம்.
கனன்ற கதிரவனை
கனலாய் எதிரொளித்துக் கொண்டே
பேரிரைச்சலாய் -
மறுமொழி பகன்றது அலைமடி!
இவன் -
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு காதலியோடு,
நான்கைந்து வாரமாய்
நான்கைந்து காதலியோடு வந்தான்!
இவள் -
ஒவ்வொரு காதலனோடு
நான்கைந்து நாளாய் வருகிறாள்!
இடிந்துபோனேன் நான்!
அலைகடலே...
நுரை தாயே...
உன்னிடம் ஒரு கோரிக்கை!
கொஞ்சம் இங்கே வா!
எனக்காக -
இன்னுமொருமுறை
அந்த நாய்கள் மீது எச்சில் துப்பு!