Saturday 19 March, 2011

இந்தியாவில் புரட்சிக்கான வாய்ப்பு...

இது ஒரு கலைஞர் டைப் பதிவு. அதாவது கேள்வியும் நானே... பதிலும் நானே...


கேள்வி:
சமீபகாலமாக ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகள் சிலவற்றில் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைக்கும், தவறான அணுகுமுறைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடிவருவதை அறிந்திருப்பீர்கள். சில நாடுகளில் ஆண்டாண்டுகாலமாக பதவியில் இருந்த அதிபர்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதையும் அறிவீர்கள்.

சாமானிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அவர்களின் ஜீவாதார உரிமை மறுப்புகளும் இந்தியாவிலும் நடக்கிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, பட்டினிச்சாவுகள் இங்கும் நடக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அலட்சியமும், நிலையான பொருளாதார வளர்ச்சியில் மெத்தனமும் காட்டும் அரசியல்வாதிகள் இங்கும் இன்னும் அராஜகமாக அதிகாரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். வாரிசு அரசியல் விருட்சமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு, இங்கும் மக்கள் திறமையற்ற தலைமைக்கு எதிராக அணிதிரள்வார்களா? புரட்சியோ, கிளர்ச்சியோ இந்தியாவில் வாய்ப்பிருக்கிறதா? குறைந்தபட்சம் அதற்கான பொறி இந்தியாவில் இருக்கிறதா? மிகமுக்கியமாக, இந்தியாவில் இப்படியொரு புரட்சிக்கு தேவை இருக்கிறதா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


பதில்:
புரட்சி என்ற சொல்லுக்கான அர்த்தம் கூட இங்கு யாருக்கும் சரிவரத் தெரியாது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுபவை மூன்று புரட்சிகள். பிரெஞ்சுப்புரட்சி பள்ளியில் பத்து மதிப்பெண் வாங்குவதற்கு பயன்பட்டதோடு சரி. ரஷ்யப்புரட்சியின் கதாநாயகர்களைப் பற்றி கல்லூரியில் கண்கள் விரியக் கதைத்ததோடு மறந்து போனது. க்யூபப் புரட்சியைப் பற்றி கேட்டால் எத்தனை பேருக்குத் தெரியும்??

பக்கத்தில் நடந்த ஈழம் பற்றிப் பேசினால் இனம் பற்றிப் பேசுகிறான் என்பார்கள். சரி விடுவோம். இந்த ஆப்பிரிக்க, அரேபிய கிளர்ச்சிகள் குறித்தாவது தெரியுமா? லிபியக் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடந்த போது, அதை ரசித்து, ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து சிலாகித்தவர்கள் நம்மில் எத்தனையோ பேர்...!! "ஏரோபிளேன் சும்மா சொய்ங்க்னு வந்து டமால்னு குண்டு போட்டாம் பாரு. செமத்தியா இருந்துச்சி" என்று கண்கள் விரியக் கதைத்தவர்கள் நம்மில் இல்லையா?

மரபுசார்ந்த விவசாயத்தையும், இயற்கை விஞ்ஞானத்தையும் வசதியாக மறந்துவிட்டு, செறிவூட்டப்பட்ட விதையையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி குண்டுகுண்டாய் தக்காளியை விளைவிப்பதுதான் பசுமைப் புரட்சி என்று எண்ணும் மக்கள் வாழும் நாட்டில், ஜனநாயகப் புரட்சி எங்கிருந்து வரப்போகிறது?

ஆனால் மிகமுக்கியமாக இந்தியாவில்தான் புரட்சியின் தேவை அதிகமாக இருக்கிறது. வாரிசு அரசியலையும், பல்லாயிரக்கணக்கான மன்னிக்கவும்... லட்சக்கணக்கான கோடிரூபாய்கள் ஊழலையும் ஜனநாயக வழியில் ஒழிப்பதென்பது நிச்சயம் இனிநிறைவேறாது. அந்த நம்பிக்கைகள் எப்போதோ தகர்ந்துவிட்டன. அதற்காக ஆயுதமேந்திய புரட்சி வேண்டுமென்று நான் கொடி பிடிக்கவில்லை. மக்கள் புரட்சி ஒன்றுதான் திறவுகோல். இந்தியாவின் நூற்றுமுப்பத்து சொச்சம் கோடி மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி நிச்சயமாக தேவை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தற்போதுள்ள சூழ்நிலையில் புரட்சிக்கான விதையோ, பொறியோ இந்தியாவில் இல்லை. மாவோயிஸ்டுகளையும், நக்சலைட்டுகளையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனோபாவம் எப்போது மாறுகிறதோ அப்போதுதான் இந்த விதை/பொறி இந்தியாவில் தோன்றும். அது மரமாகவோ/கனலாகவோ மாற சிலகாலம் காத்திருக்கவேண்டும்.

அதுவரையில்....
பெரியாரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்...
புரட்சியாவது... வெங்காயமாவது...!?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு: இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.சிலருக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கக்கூடும். இருந்தால் வரவேற்கிறேன்.

No comments: