Thursday, 26 May 2011

அழகின் கலைவிழா


வாசல் முற்றத்தில் வசந்தத்தை வரவேற்கும்
வேப்பம்பூக்களின் மென்மழை.
வீட்டுமாடியில் ஏறிநின்றாலும் தலைகுனிந்து
கேலிபேசும் தென்னங்கீற்றுகள்.

வெள்ளை உள்ளமாய் வெடித்துச் சிரிக்கும் பருத்திச்செடி.
மண்ணின் மேனிக்கு வலிஎடுக்காமல் முளைகீறும் விதைகள்.
மின்னல் மழைக்கால ஈரநிலத்துக் காளான்.
அந்தி சாயும் நேரத்துச் சின்ன சாரல்.

ஆகாச விளிம்பில் சிவப்பு வடிசலோடு தலையெடுக்கும் கதிரவன்.
தூங்குமூஞ்சி மரங்களில் சூரியன் விழித்திருக்கும் இளம்பகல்.
காதல் வரிகள் கிறுக்கி வைத்த கள்ளிச்செடியின் பச்சைத் தாள்கள்.   
மயக்கும் மலர்ச்சுமையுடன் கற்றாழைத் தண்டுகள்.

கூடடையும் குருவிகளின் சரிகமபதநி.
கொதிக்கும் உலையரிசியின் தாளகதி. 
என்னைக் கடக்கிற நரை மேகங்கள்.
கெட்டிக்கரை போட்ட தறிச்சேலை போல்,
நீண்டுகிடக்கும் தார்ச்சாலை.

புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்.
கற்றைக் காலடிகள் தழுவியதால்,
ஒற்றைப்பாதையான பச்சை மெய்யெழுத்துகள்.
பள்ளங்களில் புரண்டெழுந்து பந்தாடிய பனங்கொட்டைகள்.
தொலைதூரப் பயணமெங்கும் சிதறிக் கிடக்கும் கவிதைகள்.

வெள்ளரிப் பிஞ்சுகளைக் கடித்தபடி,
ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்கள்.
கணுக்கால் கொலுசு கீதமிட, கண்ணாடிவளை பேச, 
சிற்றோடையில் மஞ்சள் குளித்து, 
ஈரச்சேலையுடன்தெம்மாங்கு நடைநடந்து 
தெருக்களைக் கவிதைக்களமாக்கும் கன்னிப்பெண்கள்.

கண்டவுடன் கன்னம் தடவி -
திருஷ்டி கழிக்கும் தண்டட்டிப் பாட்டிகள்.
ஒரு அழகின் கலைவிழாவாய் எங்கள் கிராமம்.

வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,
பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...
நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை. 

வாழும்கலை மறந்து புலம்பெயர்ந்ததற்கான 
வலுவான காரணம் -
இப்போதும் இல்லை என்னிடம்.

12 comments:

ஹேமா said...

உள்நாட்டுக்குள்ளயே புலம் பெயர்ந்த உங்களுக்குள் இவ்ளோ ஆதங்கம் இருந்தால் எங்களுக்கு.....!

நாடு,வீடு,உறவுகள் முதல் காக்கைகுருவி வரைக்குமல்லவா தொலைத்துவிட்டு புலம் பெயர்ந்திருக்கிறோம் !

சாகம்பரி said...

எதையோ சாதிக்க நினைத்து குடி பெயருகிறோம். முந்தைய தலைமுறையின் வரவு செலவுகள் இப்போது பாக்கெட் மணியாகிவிட்ட காலத்தில் ஏதோ உந்தித் தள்ள ஏக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

arasan said...

வணக்கம் சிசு ...

arasan said...

கிராமங்களின் வாழ்வியலை அப்படியே மண் மணம் மாறாமல் வார்த்தைகளுக்குள்
சுருக்கிய உங்களுக்கு முதலில் ஒரு கம்பீர வணக்கமும் ... வாழ்த்துக்களும் ...

arasan said...

மீண்டும் மீண்டும் படித்து படித்து மகிழ்ந்தேன் ..
இறுதி வரிகள் தான் நெருடலான உண்மைகள் ...
இன்றைய பொருளாதாரம் அவ்வாறு ஆட்டுவிக்கிறது ...
பிறகு விவசாயத்துக்கு தரும் முக்கியத்துவம் குறைந்து போயிற்று ..
இதுவம் ஒரு காரணம் ...

arasan said...

நாளைய தலைமுறையினருக்கு நாம் மிச்சம் வைத்து விட்டு செல்வது
பண்டைய வாழ்வியலை ஏட்டில் படிக்க வேண்டிய அவலத்தை தான் ...
மாற்றத்திற்கான முயற்சிகளை காண முயலுவோம் ...

esaki said...

காசுக்காக எல்லா சொந்தங்களையும் தொலைவிட்டு இந்த நகரம் என்னும் நரகத்தில் வாழ்கிறோம் . உங்களின் இந்த வரிகள் கிராமத்து வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது .
மிக அழகிய கற்பனை ....வாழ்த்துக்கள் நண்பர...

வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,
பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...
நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை...

சி.பி.செந்தில்குமார் said...

கிராமக்காதலா.. உங்க பிளாக் லே அவுட் செம

Yaathoramani.blogspot.com said...

நன்றாக சாப்பிடவிட்டு பிடரியில் ஒரு அடிபோடுதல் போல
மிக அழகான சூழலை ரசித்து மயங்கி இருக்கிற வேளையில்
இறுதி வரிகள் சம்மட்டி அடிகள் போல்
நெஞ்சின் ஆழத்தில் இறங்குகிறது
மனங்கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

அணு அணுவாய் ரசித்த அனுபவங்கள் கவிதை வடிவில். காட்சிகளாய் விரிகிறது எங்கள் மனக்கண்ணிலும்.

வாழ்த்துகள் சிசு..

http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html

ம.தி.சுதா said...

//////புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்/////

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

ராமலக்ஷ்மி said...

அருமை.