Saturday, 4 June, 2011

அன்புள்ள தோழிக்கு...


அன்புள்ள @#$%&க்கு,

கேள்விக்கணைகளைத் தாங்கிய
அம்பராத்தூளியாய்
உன் கடிதம் கிடைத்தது.

திடீரென்று ஒரு வண்ணத்துப்பூச்சி...
ஓடும் ரயில்பெட்டிக்குள் வந்து,
இடம்தேடித் தவித்து ,
மறுபடியும் வெளியேறி,
காற்றோடு கலந்துவிடுவது போன்ற உணர்வு.

ஜென்மஜென்மமாய் தேடியலைந்த ஒன்றை
நான் பார்த்துவிட்டதாகவோ,
எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று
மார்கழியில் மலராக வந்ததாகவோ
நான் உணரவில்லை.

மலர வைத்ததும், நெகிழவைத்ததுமான
வசீகரத் தருணங்களில்
மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்.
ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொன்றையும்
ஒவ்வொன்றாய் கழித்துப் பார்த்தால்
கடைசியில் எஞ்சுவது நீ மட்டும்தான்.

கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய் 
நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்
விருப்பங்கள் எத்தனை?

இதோ,
ஜன்னலுக்கு வெளியே
இப்போதுதான் மழை விட்டிருக்கிறது.
தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில்
இதுவரை பார்த்தேயிராத ஒரு அழகான பறவை....

ஏதோ பேசிக்கொண்டே சிறகுலர்த்துகிறது.
ஹே! இங்கே பாரேன்... - என்று அதை,
உன்னிடம் காட்ட நினைக்கிறது மனது.
நீ என்னோடு இல்லை.

அடுத்தவினாடி ஒளித்துவைத்திருக்கும்
ஆச்சர்யங்களால் நிரம்பியது வாழ்க்கை.
பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?

நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!
உன் புரிதலுக்குள் தவித்துக்கொண்டிருக்கிறது என் விருப்பம்.

பூக்கும் என்று தெரிந்தால்,
குறிஞ்சிக்காக 12  ஆண்டுகள் அல்ல...
ஆயுள்வரைகூடக் காத்திருக்கலாம்.
நீயும் பூப்பாய்...

காதலை ஏற்றுக்கொள்கிற
ஒவ்வொருபெண்ணும்
தேவதை ஆகிறாளாம்.
நீ தேவதை ஆகப்போகிறாயா? எப்போது?

என் ஐந்து விரல்களும் காத்திருக்கின்றன.
உன் ஐந்து விரல்கள் எப்போது........?

ஆவலுடன் காத்திருக்கிறேன்...,
யரல வழள.12 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்களை காதலிக்கும்
@#$%& அவர்களுக்கும்...

யரல வழள
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

காதல் கை கூடட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ஆஹா கவிதை கலக்கல் சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில்
இதுவரை பார்த்தேயிராத ஒரு அழகான பறவை....

ரசனைக்காரன் போல ம் ம்

சாகம்பரி said...

உண்மைய சொல்லுங்கள் சிசு , இதுபோல எழுதினால் காதல் கைகூடுமா? ஆனால், கவிதையில் சில உணர்வுகள் நன்றாக உள்ளன.

FOOD said...

//கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய்
நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்
விருப்பங்கள் எத்தனை?//
நீண்ட நெடுங்கவிதை. நிற்குது நெஞ்சினில்.

ஹேமா said...

இவ்ளோ உருக்கமா எழுதியிருக்கீங்க.அவங்க பாப்பாங்களா இந்தக் கவிதையை.பார்த்திட்டா கண்டிப்பா பேசுவாங்க உங்ககூட !

கடம்பவன குயில் said...

//நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!
உன் புரிதலுக்குள் தவித்துக்கொண்டிருக்கிறது என் விருப்பம்.//

மிகமிக இனிமையான அற்புதமான வரிகள்.

//கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய்
நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்
விருப்பங்கள் எத்தனை?//

நிச்சயமாய் உங்கள் விருப்பங்கள் நினைவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை நண்பரே.

அம்பாளடியாள் said...

மனதில் எழும் இயற்கையான உணர்வுகளுக்கும் மதிப்பளித்து முறையே அழகிய கற்பனைநயம்கொண்டு
வடித்த இக் கவிதை மிகவும் அருமையாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.......

ராமலக்ஷ்மி said...

//பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?

நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!//

அழகு வரிகள்:)!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// பூக்கும் என்று தெரிந்தால்,
குறிஞ்சிக்காக 12 ஆண்டுகள் அல்ல...
ஆயுள்வரைகூடக் காத்திருக்கலாம்.
நீயும் பூப்பாய்... //


பாவையும் பூ தானே... மலர்வாள் அவர்களுக்காக ஆயுள்வரை காத்திருத்தலும் ஒரு தனி சுகம்தான்...

மலராத மொட்டு என்று மலரும் என்று காத்திருப்பது போல....

அருமை தோழிக்கான கவிதை...

சந்ரு said...

அழகிய வரிகள்